

அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கூறினார்.
மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்ஸ் மற்றும் அமால் கமேஷன்ஸ் இணைந்து நடத்திய ‘எம்எம்ஏ அமால்கமேஷன்ஸ் சிறந்த தொழிலதிபர் தலைவர்’ விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு அமால்கமேஷன்ஸ் குழும தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி விருதை வழங்கினார். அமால்கமேஷன்ஸ் குழும நிறுவனர் எஸ். அனந்தராம கிருஷ்னண் நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தலைமையிலான குழு சிறந்த பிஸினஸ் தலைவர் விருதினை தேர்ந்தெடுத்தது. இந்த குழுவில் ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் தலைவர் நைனாலால் கித்வாய், ஹிந்துஜா குழுமத்தின் துணைத்தலைவர் சேஷசாயி, டிசிஎஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் எஸ்.ராமதுரை ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சேஷசாயி ரத்தன் டாடாவை தேர்ந்தெடுப்பதில் தேர்வுக்குழுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதை டாடா பெற்றுக்கொள்வாரா என்பதுதான் சந்தேகமாக இருந்தது என்றார். மேலும், வெளிநாட்டு ஆட்டோ நிறுவனங்களை டாடா கையகப்படுத்தியபோது இது வெற்றியடையுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ரத்தன் டாடா வெற்றிகரமாக மாற்றினார் என்றார்.
டாஃபே நிறுவனத்தின் மல்லிகா ஸ்ரீனிவாசன் பேசும் போது ரத்தன் டாடா 20 வருடங்களில் டாடா குழுமத்தை 20 மடங்கு உயர்த்தியவர் என்று தெரிவித்தார். விருது பெற்ற பிறகு ஏற்புரை ஏதும் கொடுக்காத ரத்தன் டாடா, நன்றி தெரிவித்துவிட்டு இக்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகோத்தம ராவ் கேட்ட கேள்வி களுக்கு பதில் அளிதார்.
அரசாங்கமும் வியாபாரமும் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டதற்கு, பிஸினஸ் செய்வதற்காக சூழ்நிலையை, வாய்ப்புகளை, பாதுகாப்புகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அரசும், வியாபார நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார். மேலும் நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்திய நிறுவ னங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் எதனையும் பின்பற்றத் தேவையில்லை. மாறாக நாம் அவர்களுக்கு முன்மாதிரியாக வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்.
சீனா பற்றிய கேள்விக்கு சீனாவை பார்த்து நாம் பயப்படத்தேவை இல்லை என்றார். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு நான் ஜோசியன் இல்லை என்று கூறிய அவர். அனைத்து இந்தியர்களுக்கும் சமமான வாய்ப்பினை உருவாக்க வேண்டும், இது பல மாற்றங்களை நிகழ்த்தும் என்றார்.