Published : 05 Nov 2018 03:36 PM
Last Updated : 05 Nov 2018 03:36 PM

ஆன்லைன் ராஜா 51: அலிபாபாவுக்கு வசந்தம் வந்தது!  

யாஹூவுடன் மும்முரமாகப் பிரச்சினை பற்றி எரிந்துகொண்டிருந்தபோது, ஜனவரி 2011 –இல் அலிபாபாவை உலுக்கியது ஒரு உள்நாட்டு பூகம்பம்.  சக நிறுவனர் ஒருவரிடமிருந்து ஜாக் மாவுக்கு ஒரு ஈ மெயில் வந்தது. அலிபாபாவில் புரையோடிவிட்ட ஒரு ஊழல் குறித்து. ஜாக் மா அதிர்ந்தார். துப்பறியும் படை விசாரணையில். கிடைத்த ஆதாரங்கள் அலிபாபாவை உலக அரங்

கில் தலைகுனியவைத்தன.  “அலிபாபாவும் 2,236 திருடர்களும்” என்று இங்கிலாந்தின் புகழ்பெற்ற எக்கானமிஸ்ட் பத்திரிகையும், உலக ஊடகங்களும் கைகொட்டிச் சிரித்தார்கள். அப்படி என்ன நடந்தது? 

அலிபாபாவின் அதிகாரிகள் பலர் கூட்டுச் சேர்ந்தார்கள். ஏராளமான டுபாக்கூர் வியாபாரி களிடம் லஞ்சம் வாங்கினார்கள். வழக்கமான சோதனைகள் எதுவும் நடத்தாமல், அவர்களை அலிபாபாவில் பல சலுகைகள் கிடைக்கும் "தங்க வியாபாரிகளாக" ப் பதிவு செய்தார்கள். இவர்கள் போலிப்பொருட்கள் விற்றார்கள்; ஆர்டர்களையும்,  முன்பணத்தையும் வாங்கிக்கொண்டு கஸ்டமர்களுக்குப் பொருட்களே அனுப்பவில்லை. 

தன் ஊழியர்கள் அத்தனைபேரும் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்று நம்பிக்கொண்டிருந்த ஜாக் மா அதிர்ந்தார். அவரைப் பொறுத்தவரை, ஊழல் என்பது கேன்சர்.கொஞ்சம் தாமதித்தாலும், உயிர் ஊஞ்சலில். செய்யவேண்டிய சிகிச்சை கீமோதெராபியோ, கதிர்வீச்சோ அல்ல, அறுவை. அடிப்படைக் காரணங்களை வெட்டி எறியவேண்டும்.

உடனேயே விசாரணைக்கு உத்தரவிட்டார். 2,236 திருட்டு வியாபாரிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.  அலிபாபாவின் சி. இ. ஓ. – வுக்கும், சி. ஓ.ஓ– வுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது தெரிந்தது. ஆனால், கம்பெனித் தலைமையில் இருக்கும் இருவரும் தார்மீகப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்பதில் ஜாக் மா உறுதியாக இருந்தார். இருவரையும் ராஜிநாமா செய்யவைத்தார்.  36 அதிகாரிகள் மீது போலீஸில் புகார் கொடுத்தார். இவர்கள் கைதானார்கள். ஏமாந்த 2,249 கஸ்டமர்களுக்கு 1.7 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு தந்தார்.

ஊடகங்களிடம் பெருமையோடு சொன்னார், ``கம்பெனியில் நடக்கும் தவறுகளுக்குத் தலைமை பொறுப்பேற்பது அலிபாபாவில் மட்டும்தான்.” அமெரிக்காவின் போர்ஃப்ஸ் (Forbes) என்னும் பாரம்பரிய நிதிப் பத்திரிகை கிரீடம் வைத்தது, ``ஊழல் ஊறிவிட்ட சீனாவில் அலிபாபா ஒரு அதிசயப்பிறவி.” பிரச்சினைகளை வாய்ப்புகளாக்கிக் கொள்ளும் தன் தனித்திறமையை மறுபடியும் ஜாக் மா நிரூபித்துவிட்டார். உலக அரங்கில் அலிபாபாவின் மதிப்பு இன்னும் உயர்ந்தது. 

அடுத்த சில மாதங்கள். மே 2012 –இல் யாஹூ பிரச்சினைக்கும் ஜாக் மா தீர்வு கண்டுவிட்டார். மறுபடியும் கனவுகள் காணத் தொடங்கினார். இப்போது அவர் கனவு, பிரம்மாண்டக் கனவு. பிசினஸ் உலகின் எவரெஸ்டைத் தொடும் முயற்சி. ஜூன் 2012 – இல் பயணம் தொடங்கியது. அலிபாபா ஹாங்காங் பங்குச் சந்தையிலிருந்து விலகப்போவதாகவும், தனியார் நிறுவனமாகப் போவதாகவும் அறிவித்தார்கள்.  பொதுமக்களிடமிருந்த எல்லாப்பங்குகளையும் வாங்கிக்கொண்டார்கள். அலிபாபா இப்போது ஜாக் மா, அவருடைய 35 சகாக்கள், சாஃப்ட்பேங்க், யாஹூ ஆகியோர் கூட்டாளிகளாக இருக்கும் தனியார் நிறுவனம். ஏன் இந்தத் தனியார் மயமாக்கம் என்று ஊடகங்கள் கேட்டார்கள்.

ஜாக் மாவின் பதில், புன்முறுவல். அந்தச் சிரிப்புக்குப் பின்னால், அவர் கனவு. பதினொரு மாதங்கள் ஓடின. நம் நாயகர் எதிர்பாராததைச் செய்து அதிர்ச்சி வைத்தியம் செய்பவர். மே 10, 2013. இந்தக் குணத்தை மறுபடியும் அரங்கேற்றினார். அலிபாபாவின் சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகிக்கொண்டார். நிர்வாகத் தலைவர் (Executive Chairman)  பொறுப்பை ஏற்றார். அன்றாடக் கடமைகளிலிருந்து விடுதலை. காரணம் கேட்டவர்களுக்கு அவர் பதில், அதே மர்மப் புன்னகை! 

விரைவில் திரை விலகத் தொடங்கியது. சீனக் கம்பெனி என்பதைத் தாண்டி, அலிபாபாவை உலகளாவிய நிறுவனமாக்குவதற்காக, கம்பெனிப் பங்குகளின் ஐ.பி.ஓ, நியூயார்க் பங்குச் சந்தையில் களமிறங்கப்போகிறது என்னும் செய்தி. 21.8 பில்லியன் டாலர்கள் திரட்டும் இலக்கு. அந்த நாளும் வந்தது. செப்டம்பர் 9, 2014. 68 டாலர்கள் தொடக்க விலை. ஜாக் மாவை CNBC தொலைக்காட்சிச் சேனல் பேட்டி கண்டார்கள். ``இந்த நாள் சீனாவுக்கு எத்தனை முக்கியமானது?”

“எத்தனையோ சீனச் சகோதர, சகோதரிகளுக்கு உத்வேகம் தரும் நாள் இது. 15 வருடங்களுக்கு முன்னால், ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நானும், சகாக்களும் தொடங்கிய சிறு முயற்சியே இத்தனை வெற்றியடைய முடியுமானால், உலகத்தின் 80 சதவிகித இளைய தலைமுறையினரும் நிச்சயம் ஜெயிக்கமுடியும்.

எங்கள் யாருக்கும் பணக்கார அப்பாவோ, அதிகார பலம் கொண்ட மாமாவோ கிடையாது. நாங்கள் ஜீரோவிலிருந்து தொடங்கினோம்.   இன்றைய இளைஞர், இளைஞிகள் கனவுகள் காண்பதில்லை. அவர்கள் தொடர்ந்து கனவுகள் காணவேண்டும் என்பதுதான் நாங்கள் சொல்லும் சேதி.”    

உலக முதலீட்டாளர்கள் ஜாக் மாவை நம்பினார்கள். இதனால், நாள் முடிவில் அலிபாபா பங்கு விலை 38 சதவிகிதம் உயர்ந்தது. 93.89 டாலர்களைத் தொட்டது. தேவை அதிகமாக இருந்ததால், திட்டமிட்டதைவிட அதிகப் பங்குகளைச் சந்தைக்குக் கொண்டுவந்தார்கள். குவிந்த பணம் 25 பில்லியன் டாலர்கள்.  உலகப் பங்குச்சந்தையில் பணம் திரட்டிய சீனக் கம்பெனிகளுள் முதல் இடம்! நவம்பர் 2014 – இல் பங்குவிலை 120 டாலர்கள் தொட்டது. ஐம்பதை நெருங்கும் வயதில் ஜாக் மாவின் அபார சாதனை.  

திருமலை சினிமா. விஜய் பஞ்ச் டயலாக். “வாழ்க்கை ஒரு வட்டம். இங்கே ஜெயிக்கிறவன் தோற்பான், தோற்கிறவன் ஜெயிப்பான்.” அலிபாபாவுக்கும் நிஜமானது. ஜனவரி 28, 2015 அன்று சீனாவின் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சகம் தன் இணையதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அலிபாபா போலிப் பொருட்களை விற்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு இதற்குத் துணை போவதாகவும் குற்றச்சாட்டுக்கள்.

அமைச்சகத்தின் ஆய்வுப்படி, டாபா இணையதளத்தில் விற்பனையான பொருட்களில் 63 சதவிகிதம் போலியானவை. மெய்யான பொருட்கள் வெறும் 37 சதவிகிதம் மட்டுமே. அமைச்சரகத்தின் தீர்ப்பு, ``பல வருடங்களாக நடந்துவரும் இந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த அலிபாபா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 16 வருடங்களாக இயங்கிவரும் அலிபாபாவுக்கு இது மிகப் பெரிய சவால் என்பது மட்டுமல்ல, நேர்மையாக நடக்கும் பிற இன்டர்நெட் கம்பெனிகளுக்கும் தவறான முன் உதாரணம்.”  

உலகமே அதிர்ந்தது. சந்தேகங்கள், சந்தேகங்கள்……2011 – இல் இதே போலிகள் பிரச்சினை வந்தபோது, ஜாக் மா, சி. இ. ஓ, சி. ஓ.ஓ ஆகியோரை ராஜிநாமா செய்யவைத்தது, 36 அதிகாரிகள் மீது போலீஸ் புகார் கொடுத்துக் கைது செய்யவைத்தது, 2,236 திருட்டு வியாபாரிகளை விலக்கியது, ஏமாந்த 2,249 கஸ்டமர்களுக்கு 1.7 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு தந்தது ஆகிய அத்தனையும் கண்துடைப்பு நாடகமா? மார்தட்டிக்கொண்டு அவர் ஊடகங்களிடம் ``கம்பெனியில் நடக்கும் தவறுகளுக்குத் தலைமை பொறுப்பேற்பது அலிபாபாவில் மட்டும்தான்” என்று விட்ட டயலாக் வெறும் பொய்யா?

அலிபாபா அடிபட்ட புலியாகச் சீறினார். குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய் என்று மறுத்தார்கள். சாதாரணமாகச் சீன அதிகாரிகளை யாரும் கடுமையாக விமரிசிப்பது கிடையாது. தனிப்பட்ட முறையில் பெயர்சொல்லித் தாக்குவதும் கிடையாது. அலிபாபா இந்தச் சம்பிரதாயங்களைத் தகர்த்தார்கள்.

அமைச்சரவையில் லியூ ஹாங்லியாங் (Liu Hongliang) என்பவர் இயக்குநராக இருந்தார். சமூக வலைதளங்களில் ஒரு அலிபாபா ஊழியர் பதிவிட்டார், ``இயக்குநர் லியூ ஹாங்லியாங்,  நேர்மையற்ற நடுவராக நடந்துகொள்வதை நிறுத்துங்கள். உங்கள் கைகளில் கடவுளின் அதிகாரம் இருக்கலாம். ஆனால், நீங்கள் கையெடுத்திருக்கும் வழிமுறைகளையும், முரண்பாடான வாதங்களையும் எதிர்க்கிறோம்.”

நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனச் சீற்றத்தொடு வந்த இந்தக் காட்டமான பதில் நிச்சயமாக ஜாக் மாவின் ஆசிகள் இல்லாமல், அரங்கேறியிருக்க முடியாது. ஆகவே, குரல் ஊழியருடையதாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக ஜாக் மாவின் குமுறல்.

இதே சமயம், அலிபாபா, லியூ ஹாங்லியாங் மீது வரம்பு மீறி நடப்பதாக அதிகாரபூர்வப் புகார் கொடுத்தார்கள். அலிபாபாவுக்கும் அரசுக்குமிடையே வந்த உரசலை அலிபாபாவுக்கும், லியூ ஹாங்லியாங் என்னும் தனி மனிதருக்குமிடையே இருக்கும் பிரச்சினையாக மாற்றியது ஜாக் மாவின் புத்திசாலித்தனம்!

அரசோடு ஒத்துப்போகவேண்டும் என்று ஜாக்மா உணர்ந்தார். அலிபாபாவின் பெயர் கெட்டால், ஒட்டுமொத்தச் சீனக் கம்பெனிகளும், சீனப் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று அரசும் நினைத்தார்கள். ஏப்ரல் 2015. ஜாக் மா, அமைச்சகத் தலைமை அதிகாரியைச் சந்தித்துப் பேசினார். அமைச்சகம், அலிபாபாவை விமரிசிக்கும் அறிக்கையைத் தன் இணையதளத்திலிருந்து நீக்கியது. போலிப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க நவீனத் தொழில்நுட்பத்தையும், செலவினங்களையும் பயன்படுத்துவதாக ஜாக் மா உறுதியளித்தார்.

அதிரடி ஆக்ஷன் ஸ்டார்ட். இதற்காகவே 300 பேர் கொண்ட தனிப்படை அமைத்தார். போலிப் பொருட்கள் வியாபாரிகள் பிடிபட்டால், முதல் இரண்டு முறை எச்சரிக்கை. மூன்றாம் முறை, “கெட் அவுட்.” இந்த விவகாரத்தால், ஜனவரி 2015 முதல் அலிபாபா பங்குவிலை சர்ர்ர் சறுக்கல். செப்டம்பர் 16. விலை 58 டாலர்கள். ஐ.பி.ஓ – வில் 68 டாலர்களுக்கு வாங்கிய அத்தனை பேரும் சூடுகண்ட பூனைகள். இந்த இருட்டில் பல வெளிச்சங்கள். அலிபாபாவும், குறிப்பாக டாபாவும் ராக்கெட் வேக வளர்ச்சி கண்டன. பங்குச் சந்தையில் இந்த வெற்றி சீக்கிரமே பிரதிபலித்தது. 

வருடம் அதிகபட்ச பங்குவிலை (டாலர்கள்)

2016 - 109.36

2017 - 191.19

2018 - 211.70

பங்குச்சந்தையில் மட்டுமல்ல, பிசினஸிலும், அலிபாபாவுக்கு ஏறுமுகம், தொட்டதெல்லாம் துலங்கும் நேரம்.

குகை இன்னும் திறக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x