

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் நேற்று நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜரானார். உயர் ரூபாய் நோட்டுகளை பண மதிப்பு நீக்கம் செய்தது மற்றும் வங்கிகளின் வாராக்கடன் குறித்த விவரங்களை அவர் நிலைக்குழு முன்பாக அளித்தார். இது தவிர சில முக்கியமான நிதி விவகார பிரச்சினை குறித்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் நவம்பர் 12-ம் தேதியே இக்குழுவினர் முன்பாக ஆஜராக வேண்டியிருந்தது. கடைசி நேரத்தில் இது தள்ளி போடப்பட்டு நேற்று நடைபெற்றது.
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உயர் மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் வங்கிகளை பாதித்துள்ள வாராக்கடன் பிரச்சினை, தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை ஆகியன குறித்தும் பேசப்பட்டது. நிதித்துறைக்காக உருவாக்கப் பட்ட 31 பேரடங்கிய குழுவின் முன்பாக உர்ஜித் படேல் அனைத்து விளக்கங்களையும் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.