Published : 24 Nov 2018 04:06 PM
Last Updated : 24 Nov 2018 04:06 PM

‘‘நாங்கள் என்ன ரோபோக்களா?’ - அமேசான் விற்பனை திருவிழாவில் பணிச்சுமையால் தொழிலாளர்கள் போராட்டம்

அமேசான் நிறுவனம் ‘பிளாக் பிரைடே’ என்ற பெயரில் நேற்று விற்பனை திருவிழா நடத்திய நிலையில், குறைவான ஊதியம், பணிச்சுமை போன்ற காரணங்களால் அந்த நிறுவனத்தின் குடோன்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிளுக்கு அடுத்த படியாக அமேசான் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக ஜெப் பெசோஸ் இருந்து வருகிறார். இவர் அமேசான் நிறுவனத்தை 1994-ம் ஆண்டு தொடங்கினார்.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் இந்த ஆண்டு முதலிடம் பிடித்தார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர். 

இந்தநிலையில் அமேசான் நிறுவனம் வியாபாரத்தை அதிகரிக்கும் பொருட்டு குறிப்பிட்ட நாளில் அதிகமான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது. இதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று ‘பிளாக் பிரைடே’ என்ற பெயரில் விற்பனையை நடத்தியது.

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அமேசான் நிறுவனத்துக்கு அதிகஅளவில் சந்தை உள்ளது. எனவே இந்த நாளில் ஐரோப்பாவில் கூடுதல் விற்பனைக்காக அமேசான் சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது. ஆனால், ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் அமேசான் ஊழியர்கள் வெள்ளியன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோசமான  பணியிட சூழல், அதிகமான வேலை போன்ற காரணங்களை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை நடத்தினர்.

அப்போது, நாங்கள் என்ன ரோபோக்களா என தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர். தொழிலாளர்கள் பலர் பகுதி நேர ஊழியர்களாக நடத்தப்படுவதாகவும் புகார் தெரிவித்து இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள அமோசான தலைமை அலுவலகம் முன்பு பழைய எலெட்ரானிக்ஸ் குப்பைகளை கொட்டி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சில தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டன. ஜெர்மனியில் 600 தொழிலாளர்களும், ஸ்பெயினில் 1,200 தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில் ‘‘அமேசான் நிறுவனத்தின் குடோன்களில் பணிச்சூழல் மிக மோசமாக உள்ளது. குடோனில் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். பல முறை ஆம்புலன்ஸ்ஸை அழைக்கும் சூழல் உள்ளது. தொழிலாளர்கள் கழிவறைக்கு செல்லுவதற்கு கூட நேரமில்லாமல் பணியாற்றும் சூழல்தான் உள்ளது’’ எனக் கூறினர்.

எனினும் தொழிலாளர்கள் போராட்டத்தால் விற்பனை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அமேசான் விளக்கம் அளித்துள்ளது. சில தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை தூண்டிவிடுவதாகவும் அமேசான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x