Published : 04 Nov 2018 12:32 AM
Last Updated : 04 Nov 2018 12:32 AM

தாராளமயமாக்கல் கொள்கையால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஆதாயம்: நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா கருத்து

தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்ததால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன என்று அர்விந்த் பனகாரியா குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நிபுணரும் நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவருமான அரவிந்த் பனகாரியா, டெல்லியில் நடைபெற்ற தாராள வர்த்தகம் மற்றும் வளம் குறித்த கருத்தரங்கில் பேசுகையில் கூறியதாவது: முந்தைய கால கட்டத்தில் ஆசிய நாடுகள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் தங்கள் தொழில் வளங்களை மட்டுமே காத்து செயல்பட்டன என்றும் இதனால் எட்டப்பட்ட பலன்கள் வெகு குறைவு. ஆனால் தாராளமயமாக்கல் கொள்கையை பின்பற்றத் தொடங்கிய பிறகு அவற்றின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்தது என்று குறிப்பிட்டார்.

பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் மிகக் குறைந்த அளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகள் மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்டின. அத்துடன் அந்நாடுகளின் ஏழ்மையும் கணிசமான அளவுக்குக் குறைந்தது என்று சுட்டிக் காட்டினார். தாராள வர்த்தகத்தைக் கடைப்பிடிக்கும்போது தனிநபர் வருமானமும் உயரும் என்றார்.

ஆசிய நாடுகளில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான், சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் வர்த்தகக் கட்டுப்பாடுகளை வெகுவாகக் குறைத்து குறிப்பிடத்தக்க பலனை எட்டியுள்ளன என்றார்.

இந்தியா, சீனா போன்ற நாடுகள் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை எட்டியதோடு இந்த நாடுகளில் வறுமையில் வாடிய பல லட்சம் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது என்றார்.

உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) போன்றவை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமாயின் அவற்றின் கொள்கைகளில் சில மாறுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

சில வளர்ச்சியடைந்த நாடுகள் இன்னமும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து சுட்டிக்காட்டிய அவர், அந்த நாடுகள் தவிர உலகம் முழுவதும் பிற நாடுகள் இன்னமும் தாராள வர்த்தகத்தை பின்பற்றுகின்றன என்றார்.

கிழக்கு ஆசிய நாடுகள் 1970களின்  தொடக்கத்தில் தாராள வர்த்தகத்தை பின்பற்றி பிரமிக்கத்தக்க வளர்ச்சியை எட்டின. அத்துடன் இதுதான் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் ஏற்றது என்பதை நிரூபித்தன என்று அவர் மேலும் கூறினார்.

2002-ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 5,000 கோடி டாலராக இருந்தது. இது 2011-ல் 30,000 கோடி டாலராக உயர்ந்தது என்றும் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x