Last Updated : 02 Nov, 2018 07:49 PM

 

Published : 02 Nov 2018 07:49 PM
Last Updated : 02 Nov 2018 07:49 PM

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான 59 நிமிட கடன் வழங்கும் திட்டம்; தொழில் நடத்த சாதகமான பல மாற்றங்கள்: பிரதமர் மோடி தொடக்கம்

நாடு முழுவதும் சிறு, குறு , நடுத்தர தொழில்களுக்கான 59 நிமிட கடன் வழங்கும் திட்டங்களை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணை மந்திரி கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வசதி, சந்தை வசதி உள்ளிட்ட ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் 100 நாட்கள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

59 நிமிட கடன் வழங்கும் திட்டம், தொழிலாலர் சட்டங்களில் சலுகைகள், சுற்றுச்சூழல் விதிமுறைகளில் தளர்வு, மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எளிதில் தொழில் நடத்த ஏதுவாக நிறுவனச் சட்டங்களில் மாற்றங்கள் என்று இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கும் துறைக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

ஜிஎஸ்டி-யில் பதிவு செய்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய போர்ட்டல் மூலம் 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தத் துறையை இன்ஸ்பெக்டர்கள் அதிகாரத்திலிருந்து விடுவிக்க சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளார், அதாவது தொழிற்சாலைகளில் இன்ஸ்பெக்‌ஷன் செய்ய வேண்டுமெனில் கணினி மயமாக்கம் செய்யப்பட்ட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படும் என்றும், இன்ஸ்பெக்டர்கள் தாங்கள் சோதனைகளை முடித்து அதன் அறிக்கையை 48 மணி நேரத்த்திற்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

“இப்போது எந்த இன்ஸ்பெக்டரும் எந்த ஒரு தொழிற்சாலைக்கும் சோதனை செய்கிறேன் என்று தன்னிச்சையாகச் செல்ல முடியாது, அவர் ஏன் அங்கு சென்றார் என்று கேள்வி எழுப்பப்படும்” என்றார் பிரதமர் மோடி.

அதே போல் சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் காட்டி எந்த ஒரு தொழில் தொடங்கவும் இனி தாமதம் செய்ய முடியாத வண்ணம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 8 தொழிலாளர் சட்டங்கள் மீது ஆண்டுக்கு ஒருமுறை ரிடர்ன் தாக்கல் செய்தால் போதும், நிறுவனச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் அவசரச் சட்டம் இயற்றி சிறு சிறு தவறுகளுக்கு அபராதம் விதிக்கும் முறையையும் எளிமைப்படுத்தப்படும் என்று மோடி தெரிவித்தார்.

இந்த 12 புதிய விதிமுறைகளை ‘வரலாற்றில் முதல் முறை’ என்று வர்ணித்த பிரதமர் மோடி லட்சக்கணக்கான தொழில் முனைவோர்களுக்கும் ஊழியர்களுக்கும் இந்த தீபாவளி பிரகாசமாக இருக்கட்டும் என்றார்.

புதிய மாற்றங்கள்:

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து தொழில்கள் கொடுத்து வாங்குவதை பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது 20% வரை செய்து வருகின்றன, இனி 25% இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் 3% பணிகளை பெண்கள் நடத்தும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரூ.6000 கோடியின் 20 ஹப்கள், மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை மேற்கொள்ள 100 உபகரண அறைகளும் உருவாக்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.

இந்தச் சீர்த்திருத்தங்கல் மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும் என்று கூறிய பிரதமர் மோடி, தொழில் செய்ய எளிதான நாடுகள் பட்டியலில் டாப் 50-ல் நுழையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று கூறினார் பிரதமர் நரேந்திர மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x