எத்தியோபியாவில் பிணைக் கைதிகளாக 7 இந்தியர்கள்: சம்பள பாக்கிக்காக உள்ளூர் மக்கள் சிறைபிடிப்பு

எத்தியோபியாவில் பிணைக் கைதிகளாக 7 இந்தியர்கள்: சம்பள பாக்கிக்காக உள்ளூர் மக்கள் சிறைபிடிப்பு
Updated on
1 min read

எத்தியோபியாவில் சாலை அமைப்பு பணிகளை மேற்கொண்ட இந்திய நிறுவனம் வைத்துள்ள சம்பள பாக்கிக்காக, இந்திய ஊழியர்கள் 7 பேரை உள்ளூர் தொழிலாளர்கள் சிறை பிடித்துள்ளனர். அவர்களை மீட்க இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎல் ஆண்ட் எப்எஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளி்ல் பணிகளை செய்து வருகிறது. எத்தியோபியாவில் சாலை அமைக்கும் பணியை உள்ளூர் நிறுவத்துடன் இணைந்து இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில் பணியாற்ற பொறியாளர்கள் மற்றும் நிர்வாக பணிகளில் இந்தியர்கள் பலர் எத்தியோபியா சென்று பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் நிதிநெருக்கடியில் சிக்கி தவிப்பதால் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எத்தியோபியாவைச் சேர்ந்த உள்ளூர் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிறுவனத்தை மூடிய அவர்கள் அங்கு பணியாற்றிய இந்தியர்கள் 7 பேரை சிறை பிடித்துச் சென்றனர்.

தங்கள் சம்பள பாக்கியை கொடுத்தால் தான் இந்தியர்களை விடுவிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியர்களை மீட்க உள்ளூர் போலீஸ் மூலம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் பணம் கொடுக்காமல் இந்தியர்களை விடுவிக்க முடியாது என அவர்கள் உறுதியாக உள்ளனர். அவர்களுக்கு உணவு கொடுக்காமல் கொடுமை படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐஎல் ஆண்ட் எப்எஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், பங்குதாரர்கள் பலரும் நிதி நெருக்கடி பிரச்சினையில் சிக்கி தவிப்பதால் தற்போது அவர்கள் குறித்த தகவலும் இல்லை. எத்தியோபியாவில் ஐஎல் ஆண்ட் எப்எஸ் நிறுவனம் 7 இந்திய ஊழியர்களுக்கும் 5 மாதம் சம்பளம் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சம்பளம் வாங்காமல் 5 மாதங்களாக பணியாற்றிய இந்த ஊழியர்கள் தற்போது பிணைக் கைதிகளாக சிக்கிக் கொண்டதால் அவர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதையடுத்து சிக்கியுள்ள 7 இந்தியர்களின் குடும்பத்தினர் வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in