‘‘பாலியல் வன்முறை அல்ல; ஒப்புதலுடன் உறவு’’ - பின்னி பன்சால்: பிளிப்கார்ட்டை அதிர வைத்த புகார்

‘‘பாலியல் வன்முறை அல்ல; ஒப்புதலுடன் உறவு’’ - பின்னி பன்சால்: பிளிப்கார்ட்டை அதிர வைத்த புகார்
Updated on
2 min read

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) பின்னி பன்சால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனினும் நடந்தது பாலியல் வன்முறை அல்ல, ஒப்புதலுன் நடந்த உறவை தவறாக சித்தரித்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டதாக அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

11 ஆண்களுக்கு முன்பு துடிப்பான இளைஞர்களான பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகிய இருவரும் அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் பணியாற்றிய ஊழியர்கள். டெல்லி ஐஐடியில் படித்த இருவரும், ஆன்லைன் வர்த்தகத்தின் நடைமுறைகளை நன்கு அறிந்த அவர்கள், அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி, சாதாரண அளவில் சிறிதாக பிளிப்கார்ட் நிறுவனத்தை பெங்களூருவில் 2007-ம் ஆண்டு உருவாக்கினர்.

ஆன்லைன் வர்த்தக துறையில் தங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்களை சேர்த்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வர்த்தகத்தை விரிவாக்கினர். ‘ஸ்டார்ட் ஆப்’  நிறுவனமாக, பூஜ்யத்தில் இருந்து உருவானது பிளிப்கார்ட். இரு இளைஞர்களின் அபாரத் திறமையால் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்தது பிளிப்கார்ட்.

பிளிப்கார்ட் நிறுவனத்தை முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக வளர்த்த பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகிய இருவருக்கும் நிறுவனத்தில் தலா 5 சதவீதம் என்ற அளவில் தான் பங்குகள் இருந்தன. முதலீடு செய்ய அவர்களுக்கு அதிகமானோர் தேவைப்பட்டதால் மற்றவர்களின் முதலீட்டை பெற்று நிறுவனத்தை நடத்தினர்.

இந்த நிலையில் மிக வளர்ந்த ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட்டை, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் சமீபத்தில் வாங்கியது. சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிளிப் கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியது. இதன் பிறகும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் பின்னி பன்சால்

தொடர்ந்தார். இந்தநிலையில் அவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்த சம்பவம் பிளிப்கார்ட் நிறுவனத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான அந்த பெண் 2016-ம் ஆண்டு பின்னி பன்சால் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்தாக கூறப்படுகிறது. அவருக்கு நெருக்கமான ஒருவர் மூலம் இந்த புகார் கூறப்பட்டதாக தெரிகிறது.

இந்த புகார் தொடர்பாக இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் கூட்டாக அமைத்த விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. குற்றச்சாட்டுகளை இவர் முழுமையாக மறுத்தார். எனினும். பதவி விலகுவதாக அவர் நேற்று அறிவித்தார். இவரது ராஜினாமா உடனடியாக ஏற்கப்படுவதாக பிளிப்கார்ட்-வால்மார்ட் கூட்டு நிறுவனம் தெரிவித்தது.

இந்தநிலையில் பின்னி பன்சால் பதவி விலகும் முன்பாக தனது நிலையை விளக்கி அவரது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், குறிப்பிட்ட அந்த பெண்ணுடன் தொடர்பு இருந்ததையும், அது ஒப்புதலுடன் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் எந்த பெண்ணையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என திட்டவட்டமாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கசப்பான விஷயங்கள் தன்னையும், தனது தொழிலையும், குடும்பத்தையும் கடுமையாக பாதித்துள்ளதாக பின்னி பன்சால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in