

சாம்சங் எலெட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்ட விவகாரத்தையடுத்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி மன்னிப்பு கோரியுள்ளது அந்த நிறுவனம்.
தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் உலகின் முன்னோடி எலெட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது. சாம்சங் எலெட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பிரிவான செமிகண்டக்டர் மற்றும் எல்சிடி தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
சுமார் 240 தொழிலாளர்கள், பணியிடம் தொடர்பான பல்வேறு உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகினர். சிலர் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். புற்றுநோய், கருகலைப்பு போன்ற பாதிப்புகளும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டன. சில தொழிலாளர்களின் குழந்தைகளுக்குகூட பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2007-ம் ஆண்டு இந்த பாதிப்பு குறித்து தகவல் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சியோல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
அதன்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 15 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டது. சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இழப்பீடு வழங்கப்பட்டது. அப்போது பேசிய, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம் கி-நம் கூறியுள்ளதாவது:
‘‘உடல்நிலை பாதித்த தொழிலாளர்களிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும் நாங்கள் பகிரங்க மன்னிப்புக் கோருகிறோம். செமிகண்டக்டர் மற்றும் எல்சிடி தயாரிப்புத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய பணியை நாங்கள் உரியமுறையில் செய்யவில்லை. இதனை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில் இதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்’’ எனக் கூறினார்.