Published : 22 Nov 2018 01:35 PM
Last Updated : 22 Nov 2018 01:35 PM

முன்பதிவு செய்த டிக்கெட்டை சொல்லாமல் கேன்சல் செய்த ரயில்வே: ஐஆர்சிடிசிக்கு ரூ.45 ஆயிரம் அபராதம்

வேறொருவரின் வேண்டுகோளை ஏற்று மற்றொரு பயணியின் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்த ரயில்வே நிர்வாகத்துக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு அதிரடி பிறப்பித்துள்ளது. டிக்கெட் ரத்தானதால் மன உளைச்சலுடன் விமானத்தில் சென்ற பயணிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

சுஷோவன் குப்தா ராய் என்பவர் தனது குடும்பத்துடன் சியால்டாவில் இருந்து ரயிலில் புதுடெல்லி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். பயண தேதி அன்று குப்தாவுக்கு ஐஆர்சிடிசியில் இருந்து இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், அவர் முன்பதிவு செய்த இருக்கைகளில் 3 ரத்து செய்யப்பட்டு மீதித்தொகை ரூ. 3,450 அவரது வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து அவர் அதிர்ந்து போனார். குடும்பத்துடன் புதுடெல்லி செல்லவுள்ள நிலையில் மூன்று பேர் டிக்கெட் மட்டும் ரத்து செய்யப்பட்டதால் அனைவரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர் விளக்கம் கேட்டு ஐஆர்சிடிசிக்கு இ-மெயில் அனுப்பினார். ஆனால் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து அந்த 3 பேருக்கும் அவசர அவசரமாக விமானத்தில் 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து டிக்கெட் முன்பதிவு செய்து புதுடெல்லி வந்து சேர்ந்துள்ளனர். பின்னர் உள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் குப்தா வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரோஹித் சர்மா என்பவர் குறிப்பிட்ட அந்த மூன்று டிக்கெட்டுக்களை கேன்சல் செய்துவிடும்படி வேண்டுகோள் விடுத்ததாகவும் அதனை ஏற்று அந்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ரோஹித் சர்மா என்பவர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால் விமானத்தில் வந்து சேர ரூ. 20 ஆயிரம் செலவு செய்ததாகவும் குப்தா விளக்கம் அளித்தார். இதையேற்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நுகர்வோர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறுகையில் ‘‘டிக்கெட்டை முன்பதிவு செய்த நபரின் ஒப்புதல் இன்றி, வேறொரு நபரின் வேண்டுகோளுக்காக ரத்து செய்தது ஏற்க முடியாத ஒன்று. இது, ஐஆர்சிடிசியின் அலட்சியத்தை காட்டுகிறது. பாதிக்கப்பட்ட பயணிக்கு ரயில்வே நிர்வாகம் 45 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x