

2022ம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீடு திட்டத்தை செயல் படுத்த 16 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று கேபிஎம்ஜி மற்றும் தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
அரசின் இலக்கை எட்டுவதற்கு ஆண்டுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் என அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலமே அனைவருக்கும் வீடு வழங்க முடியும் என்று இந்த ஆய்வு தெரிவித்திருக்கிறது.
இதன் மூலம் 9 கோடி வீடுகள் கட்டமுடியும். கடந்த சில ஆண்டுகளாக இந்த துறையின் வளர்ச்சி 2 சதவீதத்துக்கு கீழே இருக்கிறது, இது 12 முதல் 13 சதவீத வளர்ச்சி அடைய வேண்டும் என்று கேபிஎம்ஜியின் ரியல் எஸ்டேட் பிரிவு தலைவர் நீரஜ் பன்சால் தெரிவித்தார்.
இந்த இலக்கை அடைவதற்கு, கடன் கொடுக்கும் நிறுவனங்கள், வீட்டு சேமிப்புகள், அந்நிய முதலீடு ஆகியவை தேவைப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த இலக்கை அடைய வங்கி மற்றும் நிதித் துறை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி இதற்கு தேவையான சீர்திருத்தங்களை உருவாக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் அதிக பணியாளர்கள் இருக்கும் ரியல் எஸ்டேட் துறையில், கொடுக்கப்பட்ட கடன்களில் 4 சதவீதம் மட்டுமே இந்த துறைக்கு வந்திருக்கிறது.
தற்போதைய நிலையில் இசிபி எனப்படும் வெளியிலிருந்து வர்த்தக கடன் திரட்டும் முறையில் 100 கோடி டாலர் மட்டும் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனங்கள் திரட்ட முடியும். இந்த தொகையை 1,000 கோடி டாலராக அதிகரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கை கேட்டிருக்கிறது.
மேலும் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். தற்போதைய நிலையில் அனுமதி கிடைப்பதற்கு இரண்டு மூன்று வருடங்கள் ஆகின்றன என்றும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.