

நிறுவனங்களின் போட்டியை நெறிப்படுத்தும் ஆணையம் கடந்த 2011ம் ஆண்டு டி.எல்.எப். நிறுவனத்துக்கு 630 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஏற்கெனவே டி.எல்.எப். நிறுவனம் இது சம்பந்தமாக தீர்ப்பாயத்துக்கு சென்றது. தீர்ப்பாயம் ஆணையத்தின் உத்தரவை உறுதி செய்தது. இப்போது உச்ச நீதிமன்றமும் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை 9 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், ஆரம்பகட்டமாக 50 கோடி ரூபாயும், வட்டி 25 கோடி ரூபாயினையும் மூன்று வாரத்தில் செலுத்த டி.எல்.எப். நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக டி.எல்.எப். கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இந்த உத்தரவு காரணமாக டிஎல்.எப். பங்கு 4.5 சதவீதம் சரிந்தது. வர்த்தகத்தின் இறுதியில் 183.05 ரூபாயில் இந்த பங்கு முடிவடைந்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,510 கோடி சரிந்து 32,615 கோடியாக இருக்கிறது. இது குறித்து டி.எல்.எப். நிறுவனம் பி.எஸ்.இ-க்கு தெரிவித்த அறிக்கையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. உச்ச நீதி மன்றத்தின் ஆணையை நிறுவனம் பின்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. இருந்தாலும், இந்த வழக்கில் எங்கள் தரப்பு நியாயத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்றும் டி.எல்.எப். தெரிவித்துள்ளது.