Published : 22 Oct 2018 11:13 AM
Last Updated : 22 Oct 2018 11:13 AM

ஆன்லைன் ராஜா 49: பணம் இவருக்கு வேலைக்காரன்!

பங்குச் சந்தையிலிருந்து வந்த பணம், அலிபாபா, டாபா, அலி பே ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வேகம் கூட்டியது. ஜாக் மா தூங்கியிருந்த தன் பல கனவுகளைச் செயல்படுத்தத் தொடங்கினார். டாபா இணையதளத்தில், விலை உயர்ந்தவை, குறைந்தவை, பிரான்டட் உயர்தரப் பொருட்கள், பிரான்ட் இல்லாத பொருட்கள் என எல்லாமே விற்பனையாயின.

சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருந்தது. அரசின் தாராளமாக்கல் கொள்கையால், பணக்காரர்கள் என்னும் புதிய வர்க்கம் உருவாகத் தொடங்கியது. இவர்கள் பிரான்டட் பொருட்களை மட்டுமே வாங்க விரும்பினார்கள். இந்த மனமாற்றத்தை ஜாக் மா உணர்ந்தார்.

மார்க்கெட்டிங்கில் "சந்தையைப் பகுதிகளாகப் பிரித்தல்” (Market Segmentation) என்னும் சித்தாந்தம் உண்டு. இதைச் சுருக்கமாகப் பார்ப்போம். மார்க்கெட்டிங்கின் குறிக்கோள் என்ன? கஸ்டமர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புப் பொருட்களைத் தந்து அவர்களை வாங்க வைப்பது.

ஆரம்ப காலத்தில் உலகில் கஸ்டமர்கள் எங்கே இருந்தாலும், அவர்களின் எதிர்பார்ப்புகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று கம்பெனிகள் நினைத்தார்கள். அனுபவம் பல பாடங்கள் கற்றுத் தந்தது. நாடு, வாழும் பிரதேசம், பாலினம், பழக்க வழக்கங்கள், பணவசதி போன்ற பல பின்புலங்களுக்கு ஏற்ப மக்களின் தேவைகளும் மாறுபடுகின்றன என்பதை நிறுவனங்கள் உணர்ந்தன.

உதாரணமாக, தமிழக வாடிக்கையாளருக்கும், பஞ்சாப் வாடிக்கையாளருக்கும் சுவைகள், ரசனைகள் மாறுபட்டவை. கிராமம் / நகரம், ஆண்கள் / பெண்கள், பணக்காரர்/ ஏழை ஆகியோர் விருப்பங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. இதனால், கம்பெனிகள் கஸ்டமர்களை, அவர்களின் பின்புலத்தின்படி வெவ்வேறு பிரிவுகளாக்கினார்கள். ஒவ்வொரு பிரிவையும் திருப்திப்படுத்தும் வித்தியாசமான அம்சங்களோடு வெவ்வேறு பொருட்களை அறிமுகம் செய்தார்கள்.

இது நவீனமான மார்க்கெட்டிங் கொள்கை. பெரும்பாலும், அமெரிக்காவிலும், செல்வச் செழிப்பு நிறைந்த நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை. ஜாக் மா Market Segmentation கொள்கையைப் பின்பற்ற முடிவெடுத்தார். ஏப்ரல் 2008 – இல் டாபா மால் (Taobao Mall)* தொடங்கினார். சுருக்கமாக டி மால் என்று அழைக்கப்படுகிறது. பிரான்டட் பொருட்கள் வியாபாரிகள் கஸ்டமர்களுக்கு நேரடியாக விற்கும் (B2C) உயர்நிலை இணையதளம் இது.

ஜாக் மாவின் தொலைநோக்குப் பார்வையின் தீட்சண்யத்தை நிரூபித்திருக்கும் இன்னொரு பிசினஸ் டாபா மால். சூப்பர் டூப்பர் வெற்றி கண்டிருக்கிறது. பயன்படுத்துவோர் 50 கோடி. 2017 – 18 விற்பனை 340 பில்லியன் டாலர்கள் (சுமார் 25 லட்சம் கோடி ரூபாய்.)

ஜாக் மா மார்க்கெட்டிங்கில் மட்டுமல்ல, நிதி நிர்வாகத்திலும் தன் தீர்க்கதரிசனத்தைக் காட்டினார். கம்பெனிகள் எப்போது நிதி திரட்டவேண்டும் என்று எளிய உவமையோடு அவர் சொன்ன வார்த்தைகள், தொழில் முனைவோர் அனைவரும் நெட்டுருப் போடவேண்டியவை.

“மழை இல்லாதபோது குடை வாங்குங்கள். உங்களுக்கு எப்போது பணம் தேவையில்லையோ, அப்போது மூலதனம் திரட்டுங்கள். அவசியம் வரும்போது பணத்தைத் தேடி அலைவது காலம் கடந்த செயல்.”

அலிபாபாவின் ஐ.பி.ஓ. பற்றி ஊழியர்களிடம் சொன்னார், ``2007 நமக்கு மிக நல்ல வருடம். அலிபாபா, சீனப் பொருளாதாரம், உலகப் பங்குச் சந்தைகள் ஆகியவை அமோக வளர்ச்சியில் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 2008 மிகவும் கடினமான ஆண்டாக இருக்கப்போகிறது. இதனால் தான் நாம் இந்த வருடம் முதலீடு திரட்டினோம். வரப்போகும் சவால்களைச் சமாளிப்போம். நிலைத்து நிற்போம்.”

இந்த வார்த்தைகள் சீக்கிரமே பலிக்கும் என்று அப்போது யாருக்கும் தெரியாது. அமெரிக்காவில் வெடிக்கத் தொடங்கியது இந்தப் பொருளாதார வெடிகுண்டு. 2003 முதல் வீடுகள் கட்டும் தொழிலின் முன்னேற்றத்துக்காக வங்கிகள் வீட்டுக்கடனுக்கான வட்டியைக் குறைத்தார்கள். கடன் வழங்கும் நிபந்தனைகளையும் தளர்த்தினார்கள்.

பெரும்பாலானோர் தங்கள் வசதிக்கு மீறிய வீடுகளை வாங்கினார்கள். விரைவில் ஏராளமான வீடுகள் விற்பனைக்கு வந்தன. கடன் வாங்கிய பலரால் மாதத் தவணையைக் கட்ட முடியவில்லை. வங்கிகள் வீடுகளை ஜப்தி செய்தன. ஆனால், வீடுகளின் சப்ளை ஏற்கெனவே அதிகமாக இருந்ததால், விலை சரிந்தது.

வங்கிகளால் வீடுகளை விற்க முடியவில்லை. விற்றாலும், கொடுத்த கடனில் ஒரு பகுதியே திரும்பக் கிடைத்தது. பல வங்கிகள் திவால் நிலையை எட்டின. தங்களைக் கைதூக்கிவிட அமெரிக்க அரசிடம் வேண்டினார்கள். அரசு மறுத்துவிட்டது. லேமான் பிரதர்ஸ் (Lehman Brothers) 1850–ம் ஆண்டில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடந்துவந்த உலகளாவிய நிதி நிறுவனம். வாராக்கடன் சுமையால் மூடப்பட்டது.

பங்குச் சந்தை எப்போதுமே நாட்டுப் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் காட்டும் அளவீடு. அமெரிக்கப் பங்குச் சந்தைக் குறியீட்டின்* சறுக்கல் இதோ:

NA DAQ - National Association of Securities Dealers Automated Quotations. தொழில்நுட்பக் கம்பெனிகளின் பங்குச் சந்தைக் குறியீடுகளை இந்த அமைப்பு கணிக்கிறது.

செப்டம்பர் 26 வெள்ளிக்கிழமை சந்தை மூடியபோது இந்தப் புள்ளி இருந்தது. செப்டம்பர் 29. திங்கள் கிழமை. பொருளாதாரக் கரிநாள். 199.61 புள்ளிகள் இறங்கி, 1983.73 தொட்டது உலகச் சந்தைகள் முழுக்கச் சரிவு. இந்தச் சறுக்கல் தொடர்ந்தது:

அலிபாபா பங்குகள் 40 ஹாங்காங் டாலர்களாக இருந்தன. உலகளாவிய சரிவால், 90 சதவிகித இழப்பு. விலை வெறும் 4 டாலர்களானது. ஜாக் மா கருமேகங்கள் சூழும்போது நட்சத்திரங்களைத் தேடுபவர். தளராத மனஉறுதி காட்டினார். இந்த ஆக்க சக்தியை தன் ஊழியர்களின் உணர்வுகளில் ஏற்றினார்.

பிசினஸில் திறமை இருந்தால் மட்டும் போதாது. அதிர்ஷ்டமும் வேண்டும். இந்த விஷயத்தில் ஜாக் மா ஒரு ராசியான ராஜா. உதாரணமாக, 1999 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 60,000 டாலர்கள் சொந்தப் பணத்தில் ஜாக் மாவும் அவர் 17 கூட்டாளிகளும் கம்பெனி தொடங்கினார்கள். அக்டோபர் 1999. கோல்ட்மேன் ஸாக்ஸும், பிற துணிகர முதலீட்டாளர்களும் 5 மில்லியன் தந்தார்கள்.

ஜனவரி 2000. சாஃப்ட் பேங்க் நிறுவனர் மாஸா, ஜாக் மா கேட்காமலே, 20 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தார். மூன்றே மாதங்கள். மார்ச் 2000. ஏராளமான இன்டர்நெட் கம்பெனிகள் திவாலாயின. துணிகர முதலீட்டாளர்களும், பொதுமக்களும் இன்டர்நெட் கம்பெனி என்றாலே, தூர விலகிப்போனார்கள். ஜாக் மா மட்டும் முன்னதாகவே மூலதனம் திரட்டியிருக்காவிட்டால், அலிபாபாவும் மூடுவிழா நடத்தி யிருக்கும்.

இப்போதும் அப்படித்தான். 2005 - இல் யாஹூ ஒரு பில்லியன் தந்தார்கள். நவம்பர் 2007 – இல் ஐ. பி. ஓ. மூலமாக 1.9 பில்லியன் டாலர்கள் அலிபாபாவின் கஜானாவில். அவர் பத்தே பத்து மாதங்கள் கழித்து ஐ.பி.ஓ -வுக்கு வந்திருந்தால்…..ஒரு டாலர்கூடப் புரட்டியிருக்கமுடியாது.

பிரான்சிஸ் பேக்கன் என்னும் இங்கிலாந்து நாட்டுத் தத்துவ மேதை சொன்னார்,”பணம் அற்புதமான வேலைக்காரன். ஆனால், மோசமான எஜமான்.” அதாவது, பணம் வந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தத் தெரியவேண்டும்.

ஜாக் மா இந்த வித்தையில் வித்தகர். துணிச்சலோடு, வித்தியாச முடிவுகள் எடுத்தார். லாபம் குறையும்போது பிசினஸ்மேன்கள் என்ன செய்வார்கள்? விலையைக் கூட்டுவார்கள். ஆனால் நம்ம ஆளு குறைத்தார்!

அலிபாபாவிலும், டாபாவிலும், வியாபாரிகளுக்குக் கட்டணம் கிடையாது. ஆண்டுக்கு 50,000 யான்கள் (Yuans) கட்டணம் செலுத்தினால், ‘‘தங்க வியாபாரிகள்” என்னும் பிரிவில் சேரலாம். இவர்களுக்குப் பல சலுகைகள் இருந்தன. பொருளாதார நிலை சரியாக இல்லாததால், இவர்கள் வியாபாரம் மந்தம்.

இந்தக் கட்டணத்தை 30,000 யுவான்களாகக் குறைக்குமாறு ஜாக் மா சொன்னார். இது அபாயகரமானது, ஏற்கெனவே குழுமத்தின் வருமானம் குறைந்துவருகிறது, இன்னும் சரிந்தால், கம்பெனிகளின் வருங்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பது சகாக்களின் நிஜமான பயம்.

(2008 - இல் ஒரு யான் சுமார் 6 ரூபாய்)

ஜாக் மா இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தார். அவர் வாதம் - வியாபாரிகளும் அலிபாபா குடும்பத்தினர்தான். அவர்களுக்குச் சிரமம் வரும்போது கை கொடுப்பது அலிபாபாவின் கடமை. ஜாக் மாவின் இந்தக் கணிப்பு வார்த்தைக்கு வார்த்தை பலித்தது. அங்கத்தினர்களின் அர்ப்பணிப்பு அதிகமானது.

இவர்களின் அத்தாட்சி, வாய்ச்சொல் விளம்பரம் பல்லாயிரக்கணக்கான புதிய அங்கத்தினர்களைக் கொண்டுவந்தது. ஆச்சரியம், கட்டணக் குறைப்பால், வருமானம் குறையவேயில்லை. அங்கத்தினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு இழப்பை ஈடுகட்டிவிட்டது.

இதை முழுமையாகக் கொண்டாட முடியாமல், இன்னொரு மாபெரும் பிரச்சினை ஜாக் மாவின் கவனத்தையும், நேரத்தையும் திருடிக் கொண்டிருந்தது. இதை ஆரம்பித்து வைத்தவர் பில் கேட்ஸ்.

(குகை இன்னும் திறக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x