

நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தயாரிக்கும் பணியில் மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்க வேண்டிய தொகையின் அளவை தெரிவிக்குமாறு அனைத்துத் துறைகளையும் நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்துத் துறைகளின் கோரிக்கைகள் வந்தவுடன் அடுத்த 15 நாளில் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடரும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகு பதவியேற்கும் புதிய அரசு இந்த ஆண்டு முழுமைக்குமான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து செலவு அனுமதி கோரிக்கையை பெற்றார். நான்கு மாதங்களுக்கு அரசு செலவுகளுக்கான அனுமதி அளிக்கப்பட்டது.
முழுமையான பட்ஜெட்டுக்கு ஜூலை 31-ம் தேதிக்கு முன்பாக நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும். முதலீடுகளை ஈர்க்கும் அதேசமயம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சவாலான பொறுப்பும் புதிய அரசுக்குக் காத்திருக்கிறது.