வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: எஸ்எல்ஆர் விகிதம் 0.50% குறைப்பு

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: எஸ்எல்ஆர் விகிதம் 0.50% குறைப்பு
Updated on
1 min read

இரு மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்படும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். இருந்தாலும் எஸ்.எல்.ஆர் விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்படும் என்றார்

இதன்படி ரெபோ விகிதம் (ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி) 8 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெபோ ( வங்கிகள் ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்திருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டி) 7 சதவீதமாகவும் இருக்கும்.ரொக்க கையிருப்பு விகிதம் (சிஆர்ஆர்) எந்த விதமான மாற்றமும் செய்யப்படாமல் 4 சதவீதம் என்ற நிலையிலே தொடரும் என்றார் ரகுராம் ராஜன்.

பெரும்பான்மையான பொருளாதார வல்லுநர்கள் வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்று ஏற்கெனவே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் எஸ்.எல்.ஆர் விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் 22.50 சதவீதமாக இருக்க வேண்டிய எஸ்.எல்.ஆர் விகிதம் ஆகஸ்ட் 9 முதல் 22 சதவீதமாக குறையும். இதனால் வங்கிகள், அரசாங்க பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யவேண்டிய தொகை குறையும். ஆகவே அதிக நிதி கடனாக கொடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால்தான் வட்டிவிகிதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. கடந்த இரு மாதங்களாக பணவீக்கம் குறைந்திருந்த போதிலும், ஆதார விலைகளின் அடிப்படையில்தான் குறைந்திருக்கிறது. இருந்தாலும் பணவீக்கம் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றன என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.

பருவ மழை குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம். மேலும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. தவிர கரன்சியின் ஏற்ற இறக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் என்பதால் வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

2016ம் ஆண்டு ஜனவரிக்குள் பணவீக்கத்தை ஆறு சதவீதமாக குறைப்பதுதான் அடுத்த இலக்கு என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார். அடுத்த கடன் கொள்கை செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in