Published : 03 Oct 2018 08:47 AM
Last Updated : 03 Oct 2018 08:47 AM

ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய வம்சாவளி கீதா கோபிநாத் நியமனம்

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐஎம்எப் அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின்னர்  நியமிக்கப்படும் 2-வது  இந்தியர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜன் இந்த பொறுப்பில் 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இருந்தார். பின்னர் நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பணியாற்றினார்.

கீதா கோபிநாத், தற்போது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநராக இருக்கும் மவுரீஸ் ஆப்ஸ்பீல்ட்--டின்  பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. அதன் பிறகுகீதா இந்த பொறுப்புக்கு வர உள்ளார்.

2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலையில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றவர். தனது இளநிலை படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் முடித்தவர். 

2001-ம் ஆண்டு சிகாகோ பல்கலையில் துணை பேராசிரியராகச் சேர்ந்து, அதன்பின், 2005-ம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக் கழகத்துக்கு மாறினார்.

இவரது நியமனம் குறித்து ஐஎம்எப் தலைவர்  கிறிஸ்டைன் லெகார்டே வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கீதா கோபிநாத் சர்வதேசஅளவில் மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். சிறந்த கல்வியாளர், ஆய்வாளர், தன்னுடையதிறமையையும், புத்திசாலித்தனத்தையும் பல்வேறு தளங்களில் நிரூபித்துள்ளார். பொருளாதார அணுகுமுறையில் சர்வதேச அனுபவம் கொண்டவர்.  அவரை தலைமைப்பொருளாதார வல்லுநராக நியமிப்பதில் பெருமை கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க குடியுரிமையும்,  இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமையும் பெற்றவர்.

கடந்த 2016-ம் ஆண்டு கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் பல பொருளாதார ஆராய்ச்சி கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x