Last Updated : 09 Oct, 2018 03:55 PM

 

Published : 09 Oct 2018 03:55 PM
Last Updated : 09 Oct 2018 03:55 PM

புதுப்பொலிவுடன் வருகிறது ஹூண்டாய் சான்ட்ரோ கார்; நாளை புக்கிங் தொடக்கம்

4 ஆண்டுகளாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், புதிய பொலிவுடன், கூடுதல்அம்சங்களுடன் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல மாடல் சான்ட்ரோ கார் மீண்டும் சந்தையில் இம்மாதம் அறிமுகமாகிறது.

நாளை தொடங்கி வரும் 22-ம் தேதி வரை டாய் சான்ட்ரோ கார் முன்பதிவு நடக்கிறது. முதல் 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் ரூ.11,100 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

இந்த புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ஒருலட்சம் கி.மீ வாரண்டியும், அல்லது 3 ஆண்டுகள் வாரண்டியும், சாலை உதவியும் அளிக்கப்படுகிறது.

தென் கொரிய நிறுவனத்தைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் சிறிய ரக காரில் ஹூண்டாய் சான்ட்ரோவை அறிமுகப்படுத்தியது. விற்பனையில் தனக்கே உரிய இடத்தைப் பிடித்த சான்ட்ரோ மாடல் கார், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டது. அதன்பின் இந்தக் கார் தயாரிக்கப்படவில்லை.

இந்நிலையில் சான்ட்ரோ காரை மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, கூடுதலாக, 10 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்தது.

புதிய வடிவத்தில் அதிகமான அம்சங்களுடன் தற்போது சான்ட்ரோ கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 சிலிண்டர்கள் கொண்டதாகவும், 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டதாகவும், ஏஎம்டி மோட், சிஎன்ஜி எரிவாயு மூலம் கார் இயங்கும் வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய சான்ட்ரோ கார் குறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் சிஇஓ ஒய்.கே. கூ கூறியதாவது:

''புதிய ரக ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு, புதிய குடும்ப வாகனம் என்று பெயரிட்டுள்ளோம். ஆன்லைனில்  ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்தப் பெயரை தேர்வு செய்துள்ளனர்.

நாளை முதல் வரும் 22-ம் தேதி வரை புதிய ரக சான்ட்ரோ கார் புக்கிங் நடக்கிறது. முதல் 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் ரூ.11,100 செலுத்தி முன்பதிவு செய்யலாம். சான்ட்ரோ கார் மக்கள் மத்தியில் மீண்டும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். மாதத்துக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மாருதி சுஸுகியின் வாகன்ஆர், செலிரியோ, டாடா மோட்டார்ஸ் டியாகோ ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக அமையும் என்று நம்புகிறோம்.

குறிப்பாக முதல் முறையாக கார் வாங்க விரும்பும் குடும்பத்தினரை இந்தக் கார் மிகவும் ஈர்க்கும். 2-ம்தர, 3-ம் தர நகரங்கள், கிராமப்புறங்களில் இந்தக் காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.நாங்கள் முதன்முதலில் கடந்த 1998-ம் ஆண்டு காரை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்தபோது, லட்சக்கணக்கான இந்தியர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த புதிய சான்ட்ரோவுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x