Published : 08 Oct 2018 10:36 AM
Last Updated : 08 Oct 2018 10:36 AM

ஆன்லைன் ராஜா 47: எதிரிகளின் சூழ்ச்சி வலை

ஆகஸ்ட்12, 2005. அலிபாபா – யாஹூ இணைப்பு அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாள். இன்டர்நேஷனல் வைஸ் பிரசிடென்ட் போர்ட்டர் எரிஸ்மேனுக்கு ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்னும் அமெரிக்கப் பத்திரிகையிலிருந்து ஒரு போன்.

“எங்களுக்கு ஒரு செய்தி ஃபாக்ஸ் (Fax) மூலம் வந்திருக்கிறது. அதைப்பற்றிக் கொஞ்சம் விசாரிக்கவேண்டும்.”

“தாராளமாக.” 

அது செய்தி அல்ல, வெடிகுண்டு.

“அமெரிக்கப் பாராளுமன்றம் நடத்திய ஒரு விசாரணையில், உலகிலேயே அதிகமாகப் போலிப் பொருட்கள் அலிபாபா இணையதளத்தில்தான் விற்கப்படுவதாகச் சாட்சியம் சொல்லப்பட்டிருக்கிறதாமே?”

ஈ பே - யின் பங்குதாரர்கள் கூட்டத்தில் அவர்கள் சிஇஓ மெக் விட்மேன் இதைச் சாடை மாடையாகக் குறிப்பிட்டிருந்தார். ஆகவே, இது ஈ பேயின் சதியாக இருக்கலாம் என்பது போர்ட்டர் சந்தேகம்.

கேட்டார், ``அந்த ஃபாக்ஸ் உங்களுக்கு யாரிடமிருந்து வந்திருக்கிறது?”

“யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. எங்களுக்கு மட்டுமல்ல, பல பத்திரிகைகளுக்கும் இதே செய்தி அநாமதேயமாக வந்திருக்கிறது.”

யாஹூவுடன் கூட்டுச் சேர்ந்ததால் அலிபாபா மகத்தான வளர்ச்சி காணும் என்பதைப் பொறுக்

காத வயிற்றெரிச்சல்காரர்களின் தில்லாலங்கடி வேலை இது  என்று போர்ட்டருக்குத் தெரிந்தது. அவர் அனுமானப்படி இதைச் செய்தவர்கள் ஈ பே.

ஆகவே, நிருபரிடம் சொன்னார், ``போலிப் பொருட்களின் விற்பனைக்கு எங்கள் இணையதளம் களமாவதைத் தடுக்க, ஈ பே, அலிபாபா போன்ற எல்லா ஆன்லைன் கம்பெனிகளுக்கும் ஒரே மாதிரியான சட்டரீதியான நடவடிக்கைதான் எடுக்கிறோம். இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வரும்போது, தீர விசாரித்து, போலிகளின் தயாரிப்பாளர்களை எங்கள் இணையதளத்திலிருந்தே நீக்கம் செய்துவிடுவோம்.”

அலிபாபாவில் மட்டுமல்ல, ஈ பேயிலும் போலிப் பொருட்கள் உலவுகின்றன என்னும் பதிலடி. ஹாலிவுட் ரிப்போர்ட்டரும், பிற பத்திரிகைகளும் இதை ஆராய்ந்தார்கள். அலிபாபா போலிப் பொருட்களின் கூடாரம் என்னும் குற்றச்சாட்டு அபாண்டம் என்று தெரிந்தது. அநாமதேயங்களின் சூழ்ச்சி தோற்றது. இது தற்காலிகப் பின்வாங்கல்தான். அடுத்த படலத்துக்கு அவர்கள் பயன்படுத்தியது, யாஹூ வரலாற்றின் 2004 – ஆம் வருட அத்தியாயம்.

ஷீ டா (Shi Tao) ஒரு சீன நிருபர். டங்டாய் ஷாங் பா (Dang-dai Shang Bao) என்னும் தொழில்துறை தொடர்பான பத்திரிகையில் பணியாற்றினார். ஏப்ரல் 2004 அன்று அலுவலகத்தில் ஆசிரியர் குழுவின் கூட்டம். ஜூன் 4 அன்று தியனன்மென் சதுக்கத்தில்* மாணவர்களும், அறிவுஜீவிகளும் நடத்தப்போகும் போராட்டத்தை அரசாங்கம் எப்படி அடக்கப்போகிறது என்பது பற்றிய கலந்துரையாடல்.

ஷீ டா இந்தக் கூட்டத்தின் குறிப்புகளை நியூயார்க் நகரத்திலிருந்த சீன விடுதலைப் போராளிகளின் இணையதளத்துக்கு யாஹூ மெயில் மூலமாக அனுப்பினார். சீன அரசுக்கு விஷயம் தெரிந்தது. சீன யாஹூவிடம் யார் அனுப்பியது என்று கேட்டார்கள். அவர்கள் தயக்கமே இல்லாமல், உடனேயே, ஷீ டா பெயரையும், விவரங்களையும் தந்துவிட்டார்கள்.  

(* விவரங்கள் 42 - ஆம் அத்தியாயத்தில்)

ஷீ டாவைச் சீனப் போலீஸ் கைது செய்தார்கள். விசாரணை. நாட்டின் ரகசியங்களை வெளியிட்ட தேசத்துரோகி என்று குற்றச்சாட்டு. பத்து வருடச் சிறைத் தண்டனை. உலக ஊடகங்களும், மனித உரிமைப் போராளிகளும் ஜனநாயகக் குரல்வளை நெரிப்பாகச் சீனாவின் செயலைக் கண்டித்தார்கள்.  ஷீ டாவின் அம்மா தண்டனையைக் குறைக்குமாறு மன்றாடினார். அரசு செவிசாய்க்கவில்லை.

குடும்பத்துக்கும் தொடர்ந்து தொந்தரவுகள். தொல்லை தாங்காமல், ஷீ டாவின் மனைவி விவாகரத்து வாங்கிக்கொண்டார். போலீஸ் உளவாளியாக நடந்துகொண்டதாக அனைவரின் சுட்டுவிரலும் யாஹூவை நோக்கி.

யாஹூவின் இந்தச் செயல், ஏப்ரல் 2004 – இல்; அவர்கள் அலிபாபாவுடன் கூட்டுச் சேர்ந்தது ஆகஸ்ட் 2005 – இல். ஆகவே, இந்த நிகழ்ச்சிக்கும், அலிபாபாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், ஷீ டா நிகழ்ச்சியின் தாக்கத்தை அலிபாபா விரைவிலேயே சந்திக்க நேர்ந்தது.

செப்டம்பர் 10, 2005. ஹாங்ஸெள நகரத்தில் “சீன இன்டர்நெட் உச்சி மாநாடு” (China Internet Summit). நடத்தியவர்கள் அலிபாபா. முக்கிய விருந்தினர், அமெரிக்க முன்னாள்  அதிபர் பில் கிளின்டன். பிரம்மாண்டமான ஏற்பாடுகள். அப்போது ஜாக்மாவுக்குக் கிடைத்தன சில ரகசியத் தகவல்கள்.

அலிபாபாவிடம் பெற்ற தோல்வியை ஈ பேயால்  ஏற்க முடியவில்லை. ஜாக் மா முகத்தில் கரி பூசத் துடித்தார்கள். அதற்கு உச்சி மாநாடு நல்ல சந்தர்ப்பம்.  ஷீ டா சம்பவத்தைக் காரணம் காட்டி கிளின்டன் வர மறுத்தால், அது அலிபாபாவுக்குப் பெரிய அவமானம். ஈ பே கம்பெனி தொடங்கிய பியர் ஒமிடியார், கிளின்டனுக்கு நெருக்கமானவர். 1992 – லும், 1996 – லும் கிளின்டன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, நிதியை அள்ளிக் கொடுத்தவர். உச்சி மாநாட்டுக்குப் போகக்கூடாது என்று ஆலோசனை சொன்னார். கிளின்டன் கேட்கவில்லை.   

ஈ பே  - இன் சட்ட ஆலோசகர் கிளின்டனுக்கு ஈ மெயில் அனுப்பினார். அலிபாபா போலிப்பொருட்களை விற்பனை செய்கிறது, அவர்கள் ஏற்பாடு செய்யும் மாநாட்டில் பங்கேற்றால், அவர்களின் திருட்டு வேலைகளுக்கு அங்கீகாரம் தருவதாகிவிடும் என்னும் வாதத்தை எடுத்துவைத்தார். இதைக் கிளின்டனின் உதவியாளர்கள் ஆராய்ந்தார்கள். ஆதாரமற்ற குற்றச்சட்டாக உதறித் தள்ளினார்கள்.

கிளின்டன் வருவதைத் தடுக்கமுடியாது என்று தெரிந்தவுடன், வந்தது இன்னொரு வித்தியாசக் கணை. Human Rights in China என்னும் மனித உரிமை இயக்கமும், Reporters Without Borders என்னும் பத்திரிகையாளர்கள் அமைப்பும் கிளின்டனுக்குப் பகிரங்கக் கடிதம் எழுதினார்கள். அவர் ஜெர்ரி யாங்கிடம் இது பற்றிப் பேசவேண்டும், ஷீ டாவை விடுதலை செய்ய முயற்சி எடுக்கவேண்டும் என்னும் வேண்டுகோள். இந்தப் பிரச்சினைக் கருமேகம் மாநாட்டின் முக்கியத்துவ வெளிச்சத்தை மறைக்கவேண்டும் என்பது “எதிரிகள்” இலக்கு.  

இரண்டு முறை அதிபராக இருந்த கிளின்டன் ராஜதந்திரி. மாநாட்டில் பேசும்போது ஷீ டா சமாச்சாரத்தை நேரடியாகக் குறிப்பிடவேயில்லை. அதே சமயம் இலை மறை காயாகச் சொன்னார், ``ஒரு நாட்டில் எந்த மாதிரியான கொள்கை கொண்ட கட்சி ஆட்சியில் இருந்தாலும், தான் தரும் தகவல்கள், கருத்துப் பரிமாற்றம் ஆகியவை மூலமாக இன்டர்நெட் மகத்தான சக்தியைச் சாமானியர்களுக்குத் தந்துவிடும். என்னைப் பொறுத்தவரை, உலகின் எல்லா நாடுகளுக்கும் இன்டர்நெட் நன்மை தருவதுதான்.”

பேச்சு முடிந்தவுடன் கிளின்டன் புறப்பட்டார். நிருபர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அனைவர் மனங்களிலும் ஷீ டா பற்றிய கேள்விதான். ஆனால், கிளின்டன் பதில் சொல்ல மறுத்துவிட்டார். கறுப்புப் பூனைகள் அவரைப் பத்திரமாக அரங்கத்திலிருந்து அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.  

அடுத்து வந்தது அக்னிப் பரீட்சை. ஜாக் மா, ஜெர்ரி யாங் இருவரும் மேடையில். இரு கம்பெனிகள் எப்படி இணைந்தன என்பதை விளக்கினார்கள். இந்தப் பேச்சு எப்போது முடியும் என்று காத்திருந்ததுபோல் எழுந்தார், மதிப்புக்குரிய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் நிருபர் பீட்டர் குட்மேன் (Peter Goodman).

``மிஸ்டர் யாங், நீங்களும், உங்கள் சக இன்டர்நெட் கம்பெனிகளும் தொடங்கியபோது, உங்களை எப்படி மார்க்கெட்டிங் செய்துகொண்டீர்கள் தெரியுமா? வெறும் பிசினஸ் நிறுவனங்களாக அல்ல; எல்லோருக்கும் தகவல் கிடைக்கும் சுதந்திரத்தை, கருத்துப் பரிமாற்றத்தை, பேச்சுரிமையை நிலைநாட்டும் விடுதலை சக்திகளாக. ஆனால், நீங்கள் சீன அரசாங்கத்தின் கைப்பாவையாகிவிட்டதாகவும், அவர்களின் அடக்குமுறை ஆயுதமாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன? ஷீ டா விவகாரத்தில் யாஹூவின் நிலைப்பாடு பற்றி என்ன சொல்கிறீர்கள்?”    

கேள்வி நேரடித் தாக்குதலாக வரும் என்று ஏனோ ஜெர்ரி யாங் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் மெளனமாக இருந்தார், தடுமாறினார். பிறகு சொன்னார், “சீன அரசாங்கம் கோர்ட் ஆர்டர் கொண்டுவந்தார்கள். நாட்டின் சட்டப்படி விவரங்கள் கேட்டார்கள். கொடுத்தோம். அதன் விளைவுகள் எனக்குப் பிடித்தமானவையல்ல.” 

ஜாக் மா தொடர்ந்தார், ``இன்று காலைதான் எனக்கு இந்தக் கேஸுக்கும், யாஹுவுக்கும் இருக்கும் தொடர்பு பற்றித் தெரியும். என் கருத்து என்னவென்றால், சட்டத்தை மாற்ற முடியாவிட்டால், அதற்குக் கட்டுப்படவேண்டும். அரசாங்கத்தை மதிக்கவேண்டும். எங்கள் கவனம் பிசினஸில் மட்டுமே. எங்களுக்கு அரசியலில் நாட்டம் இல்லை.”

மனித உரிமை ஆதரவாளர்கள் கொதித்தார்கள். இதயத்தில் ஈரமில்லாதவராக, பண ஆசை கொண்டவராக அவரைச் சித்தரித்தார்கள்.  இதுவரை ஜாக் மாவிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் கூட, இந்த நிகழ்ச்சியை அவர் வாழ்க்கைக் கறையாகக் குறிப்பிடுகிறார்கள். 

போராளிகளின் கண்ணோட்டத்தில் இது சரியாக இருக்கலாம். ஆனால், உங்களை ஜாக் மாவாகக் கற்பனை செய்து பாருங்கள். ஷீ டாவுக்கு ஆதரவாக அவர் குரல் எழுப்பியிருந்தால், அலிபாபாவின் எதிர்காலத்தை அரசாங்கம் கேள்விக்குறியாக்கியிருக்கும். அவருடைய 24,000 ஊழியர்களும், பல்லாயிரம் வியாபாரிகளும் வாழ்வாதாரத்தை இழந்திருப்பார்கள். எனவே, ஜாக் மா செய்தது சரியா, தவறா? உங்கள் மனசாட்சி பதில் சொல்லட்டும். 

மதில்மேல் பூனையாக ஜா மா எடுத்த நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணம், ஷீ டா விஷயம் பற்றிய முழு விவரங்களையும் யாஹூ அலிபாபாவிடமிருந்து மறைத்துவிட்டார்கள். உணர்ச்சிபூர்வமாக முடிவெடுத்து ஏமாந்துவிட்டோமோ என்று ஜாக் மா மனதில் கசப்பு. இந்த ஆரம்பம் எங்கே கொண்டுபோகுமோ?  

(குகை இன்னும் திறக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x