Published : 19 Aug 2014 11:42 AM
Last Updated : 19 Aug 2014 11:42 AM

திட்டக்குழுவுக்கு பதிலாக மக்களிடமிருந்து மாற்று யோசனைகளை எதிர்பார்க்கிறேன்: ட்விட்டரில் மோடி அழைப்பு

திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக் கப்படும் புதிய அமைப்புக்கு பொது மக்களிடமிருந்து யோசனைகளை கேட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 64 வருடங்களாக செயல்பட்டு வரும் திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் மோடி தெரிவித்தார்.

புதிய அமைப்புக்கான யோச னைகள் பொதுமக்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன என்று மோடி டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார். இதற்காக >www.mygov.nic.in என்ற இணைய தளம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பாலமாக செயல்படும் என்றார். இதில் பொதுமக்கள் தங்களது யோச னைகளைத் தெரிவிக்கலாம் என்றார்.

21-ம் நூற்றாண்டின் தேவையை பூர்த்தி செய்யுமாறு இந்த அமைப்பு இருக்க வேண்டும் என்றும், திட்டக்குழு அமைக்கப்பட்ட காலமும் இப்போதைய காலமும் வேறு என்றும் சுதந்திர தின விழாவில் அவர் தெரிவித்தார்.

இந்த புதிய அமைப்புக்கு பெயர், லோகோ, வாசகம் உள்ளிட்டவற்றுக்கு யோசனை கேட்டிருந்தார் மோடி. மேலும், தேர்ந்தெடுக்கப்படும் யோசனைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டிருக்கிறது. யோசனைகளை தெரிவிக்க வேண்டிய கடைசி தேதிஆகஸ்ட் 25. ஆனால் இந்தஅறிவிப்பு வெளியான உடனே பலவிதமான கருத்துகள் பொது மக்களிடமிருந்து வந்திருக்கின்றன.

சென்ட்ரல் பிரோ ஆப் எக்ஸலென்ஸ், இந்திய தேசிய மேம்பாட்டு கழகம், மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்களுக்கான தேசிய குழு, பாரத் நிர்மான் அயோக், ராஷ்ட்ரய விகாஸ் சேவா கமிஷன் உள்ளிட்ட பல பரிந்து ரைகள் வந்திருக்கின்றன.

சோவியத் யூனியனில் செயல்பட்டு வந்த திட்டத்தை ஜவஹர்லால் நேரு இந்தியா வுக்காக வடிவமைத்தார். மார்ச் 15, 1950ம் ஆண்டு திட்டக் குழு உருவாக்கப்பட்டது. 1951ம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது 12-வது ஐந்தாண்டு (2012-2017) திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலைமையில் இருக்கும் ஐந்தாண்டு திட்டம், இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். இந்த அமைப்பை மாற்றி அமைப்பதை விட புதிய அமைப்பை உருவாக் குவது நல்லது என்று தெரிவித்தார். அதனால் இந்த அமைப்பை கலைப்பது நல்லது என்று கூறும் ஐநா அறிவிக்கை ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் மே 29ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

திட்டக்குழுவுக்கு கடைசி துணைத்தலைவராக இருந்தவர் மாண்டேக் சிங் அலுவாலியா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பதவியில் இருக்கிறார். மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு திட்டக்குழுவுக்கு துணைத் தலைவரோ உறுப்பினர்களோ நியமிக்கப்படவில்லை.

மேலும் இந்திய அரசியல் சாசனத்தில் திட்டக்குழு பற்றிய எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. ஆனால் நிதிக்குழு பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x