ஆன்லைன் ராஜா 40: ஒரு வீரன் ரெடியாகிறான்!
மே 10, 2003. டாபா.காம் இணையதளம் திறந்தது. டாபாவுக்கு ஜாக் மா தேர்ந்தெடுத்திருந்த சின்னம் – எறும்பு. பளிச் ஆரஞ்சு நிறம். சிரிப்பு முகம். வெற்றிக் குறி காட்டும் உயர்த்திய கட்டைவிரல். முதல் பார்வையிலேயே இனம் புரியாத பிடித்தம் வரும். ``நண்பேன்டா” என்று சொல்லத் தோன்றும்.
எறும்பை ஏன் தேர்ந்தெடுத்தார்? உழைப்பின் சின்னம் என்பது ஒரு காரணம். ஜாக் மா சொல்லவந்த சேதி இன்னொன்றும் இருக்குமோ? தான் ஈ பே – உடன் நடத்தப்போகும் யுத்தம், சம பலமுள்ள ஹீரோவும், வில்லனும் சந்திக்கும் போரல்ல. எறும்புக்கும் யானைக்கும் நடக்கும் மோதல். நேருக்கு நேர் சந்தித்தால், யானை தன்னை நசுக்கித் துவம்சமாக்கிவிடும்.
ஒரே ஒரு வழிதான். யானை கவனிக்காதபோது அதன் மேல் ஏறிக் காதுக்குள் புகுந்து குடையவேண்டும். யானைக்கு மதம் பிடிக்கும், என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கண் மண் தெரியாமல் ஓடும். படுகுழியில் விழும். அதன் கதை ஓவர். யானையையே தோற்கடித்த எறும்பிடம் குறும்பு செய்ய யாருமே வரமாட்டார்கள். அப்புறம், எறும்பு லைஃப் ஜாலியோ ஜாலி.
ஜாக் மா திட்டப்படி, தீட்ட வேண்டியது கத்தியை அல்ல, புத்தியை. அதுதான் அவரிடம் எக்கச்சக்கமாக இருந்ததே? தீட்டத் தொடங்கினார். டாபா ஆழமாகக் காலை ஊன்றுவதுவரை, அலிபாபா போட்டிக் கம்பெனி தொடங்குவது ஈ பே – க்குத் தெரியவே கூடாது. அடுத்தடுத்து, எதிரி எதிர்பாராத அதிரடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். தாமாகவே அவர்கள் படுகுழியில் விழும் நிலையை உருவாக்கவேண்டும். தேவை, புதுமை, வித்தியாசம்.
சீனா, இந்தியா போன்ற நாடுகள் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இல்லாத நாடுகள். தொழில்நுட்ப பிசினஸ் தொடங்கும்போது, அமேசான், ஈ பே போன்ற ஜெயித்த கம்பெனிகளை முன்னோடிகளாக வைத்துக்கொள்வார்கள். அவர்களின் யுக்திகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவார்கள்.
ஜாக் மாவைப் பொறுத்தவரை, இது நாசப்பாதை. அந்த யுக்திகளை, இயங்கும் நாட்டின் கலாசாரம், மக்கள் மனப்போக்கு ஆகியவற்றுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ள வேண்டும். இதை ஆங்கிலத்தில் Glocal என்று சொல்வார்கள். Global + Local என்பதன் சுருக்கம். ஜாக் மா, டாபா ஊழியர்களிடம் சொன்னார், "அமேசானும், ஈ பேயும் கடைப்பிடிக்கும் யுக்திகள் பற்றிக் கவலையே படாதீர்கள். நம் மண்ணுக்குத் தகுந்த நடைமுறைகளை உருவாக்குவோம். புதிய பாதை போடுவோம்.”போட்டார்கள்.
அந்த முடிவுகள்; மூன்று ஆண்டுகளுக்கு டாபாவில் நுழைவுக் கட்டணம் கிடையாது அன்றைய காலகட்டத்தில் உலகின் அனைத்து ஆன்லைன் கம்பெனிகளும், தங்கள் இணையத்தில் பதிவு செய்ய நுழைவுக் கட்டணம் வசூலித்தார்கள். அமெரிக்காவில் மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள். சீனர்களின் மனோபாவம் வித்தியாசமானது.
செலவைவிடச் சேமிப்பில் கவனம் காட்டுபவர்கள். எந்தப் பொருளையும் சாம்பிள் பார்த்தபிறகுதான் காசு கொடுத்து வாங்குவார்கள். இதனால், நுழைவுக் கட்டணம் சீனாவில் செல்லுபடியாகாது என்று ஜாக் மா நினைத்தார். ஓசியில் சில காலம் சோதித்தபின், மனதுக்குப் பிடித்தால், பணம் தரத் தயங்கமாட்டார்கள். ஆகவே, ஜாக் மா எடுத்த முதல் முடிவு – மூன்று ஆண்டுகளுக்கு டாபாவில் நுழைவுக் கட்டணம் கிடையாது.
மூன்று ஆண்டுகளுக்கு டாபாவில் விற்பனைக் கமிஷன் கிடையாது ஆன்லைன் கம்பெனிகள் தங்கள் இணையத்தில் நடக்கும் வியாபாரத்துக்கு, விற்பவர்களிடம் கமிஷன் வசூலித்தன. அலிபாபாவிலும் இந்த முறைதான். பிசினஸ் டு பிசினஸில் விற்பவர், வாங்குபவர் இருவருமே வியாபாரிகள். ஆகவே, இடைத்தரகர் கமிஷன் என்பது அவர்களுக்குப் பரிச்சயமானது.
அமெரிக்காவில் கஸ்டமர் டு கஸ்டமர் பிசினஸில் கமிஷனை ஏற்றுக்கொண்டார்கள். ஜாக் மாவின் கணிப்புப்படி, சீனர்கள் இதற்குச் சம்மதிக்கமாட்டார்கள். வியாபாரம் கனிந்தவுடன், “நான் விற்றேன். அவர் வாங்கினார். நடுவில், இந்த இணையதளத்துக்கு ஏன் கமிஷன்?” என்று பொருமுவார்கள். இதனால், டாபாவின் இரண்டாம் கொள்கை - விற்பனைக் கமிஷன் கிடையாது.
கஸ்டமருக்கு ஜே!
காந்திஜி ஒரு முறை சொன்னார், ``நம் பிசினஸுக்கு வருகை தருபவர்களில் வாடிக்கையாளர்கள் தாம் மிக முக்கியமானவர்கள். அவர்கள் நம்மை நம்பி இல்லை. நாம்தான் அவர்களை நம்பி இருக்கிறோம். அவர் நம் பிசினஸுக்குத் தடங்கல் அல்ல. பிசினஸுக்குக் காரணமே அவர்தான். அவர் வெளியாள் அல்ல. அதன் அங்கம். அவருக்குச் செய்யும் சேவை, நாம் அவரிடம் காட்டும் தயவல்ல; இந்தச் சேவை செய்யும் வாய்ப்பு அவர் நம்மிடம் காட்டியிருக்கும் தயவு.”
காந்திஜியின் இந்த வைரவரிகளை ஜாக் மா படித்திருந்தாரோ, இல்லையோ, அதன் சாராம்சத்தைப் பின்பற்றினார். எல்லா ஆன்லைன் இணையதளங்களிலும், பொருட்களை, "வாங்குபவர்கள்”, “விற்பவர்கள்” என்னும் இரு பிரிவுகளில் பட்டியல் போட்டிருந்தார்கள். ஜாக் மா இதை மாற்றினார். “ஆண்கள்”, “பெண்கள்” என்னும் பிரிவுகளில் பட்டியலை மாற்றினார். வாங்குபவர்களின் தேடலை இது மிக எளிமையாக்கியது.
டாபாவில் ஏல பிசினஸ் கிடையாது அமெரிக்காவில் பொருட்கள் வாங்குவது பொழுதுபோக்கு. மாடல்கள் மாறும்போது புதிய பொருட்கள் வாங்குவார்கள் பழைய பொருட்களை எங்கே விற்பது என்று திணறிக்கொண்டிருந்தார்கள். இதற்கு ஈ பே காட்டிய ஏலம் வசதியாக இருந்தது. சீனாவில் தேவைப்படும்போது மட்டுமே பொருட்கள் வாங்குவார்கள். மாடல்கள் மாறுவது பற்றிக் கவலையே படமாட்டார்கள். ஆகவே, சீனாவுக்கு ஏல பிசினஸ் ஒத்துவராது.
டாபா வாங்குவோரையும், விற்போரையும் இணைக்கும் பாலமாக இருக்கும் ஈ பேயில் விற்போருக்கும், வாங்குவோருக்குமிடையே நேரடித் தொடர்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள். ஏற்பட்டால், கம்பெனிக் கமிஷன் கோவிந்தா. இதனால், கஸ்டமர்களின் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை இருக்காது.
எந்திரத்தனம்தான். சீன மக்கள் காய்கறி முதல் கார்கள் வரை, வியாபாரிகளை நேருக்கு நேர் சந்தித்து, முடிந்தால் பேரம் பேசி, வாங்குபவர்கள். ஆன்லைன் பிசினஸில் இது முழுக்க முழுக்க முடியாது. ஆனால், இந்த அனுபவத்தின் ஓரளவையாவது டாபா தரவேண்டுமென்று ஜாக் மா விரும்பினார். "தலைவர் விருப்பம், எங்களுக்குக் கட்டளை” என்று அவர் பொறியாளர்கள் செயலில் இறங்கினார்கள்.
கஸ்டமர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடுவதற்கு (Chat பண்ண) வழி செய்யும் அலி வாங் வாங் (AliWang Wang – Ali – அலிபாபாவின் சுருக்கம். Wang Wang என்றால் அற்புதமான ஆள் என்று அர்த்தம்) என்னும் மென்பொருளை டாபாவில் கொண்டுவந்தார்கள். கஸ்டமர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. கிடைக்கும் நேரமெல்லாம், அலி வாங் வாங் பயன்படுத்தினார்கள். உரையாடினார்கள், அரட்டை அடித்தார்கள், பேரம் பேசினார்கள். இதற்காகவே டாபாவுக்கு வந்தார்கள்.
டாபாவின் இலக்கு ஈ பே கஸ்டமர்கள் அல்ல சீனாவின் ஆன்லைன் பிசினஸில், வியாபாரிகள் பெரும்பாலானோர் பெரிய, நடுத்தரக் கம்பெனிகள். இவர்கள் பெருமளவில் பொருட்கள் வாங்குபவர்களிடம் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். உதாரணமாக, ஷூ வியாபாரிகள் 12 ஜோடி வாங்குபவர்களின் ஆர்டர்களை மட்டுமே ஏற்றார்கள்.
உங்களுக்கு ஒரு ஜோடி மட்டுமே வேண்டுமா? வியாபாரி சிக்குவது சிரமம். ஆன்லைனை மறந்துவிட்டுக் கடைக்குத்தான் போகவேண்டும். இதனால், சிறிய அளவில் வாங்குபவர்களும், சிறிய, நடுத்தர வியாபாரிகளும் ஆன்லைன் வட்டத்தில் இல்லை.
சீன ஆன்லைன் பிசினஸில் 95 சதவிகிதம் பேர் ஈ பே பயன்படுத்தினர்கள். டாபா வளர இரண்டு வழிகள் – ஈ பே கஸ்டமர்களைத் தன் வசம் இழுக்கலாம், அல்லது குறைவான அளவில் பொருட்கள் வாங்குபவர்களையும், இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் சிறிய வியாபாரிகளையும் டாபாவுக்குக் கொண்டுவரலாம். இந்த இரண்டாம் வழியில், ஈ பேயின் போட்டியும் கிடையாது. தனிக்காட்டு ராஜாவாக இருக்கலாம். சீனாவின் ஆன்லைன் சந்தை விரிவடையும். நாட்டின் பொருளாதாரம் வளரும். ஆகவே, டாபாவின் இலக்கு, சிறிய, நடுத்தரக் கஸ்டமர்கள், வியாபாரிகள்.
பணம் கட்டும் வசதி
அமெரிக்காவில் ஏறத்தாழ எல்லோரிடமும் கிரெடிட் கார்ட் உண்டு. சீனாவில் மிகக் குறைவான எண்ணிக்கையினரிடம் மட்டுமே கிரெடிட் கார்ட். இதனால், ஆன்லைனில் வாங்குவோர் எண்ணிக்கை பரவலாகவில்லை. ஈ பே ஏனோ இந்த நிதர்சனத்தைப் புரிந்துகொள்ளவேயில்லை. அவர்களிடம் கிரெடிட் கார்ட் அல்லது பே பால் (PayPal) என்னும் கிரெடிட் கார்ட் அடிப்படையிலான வழி மட்டும்தான்.
இங்கே நுழைந்தார் ஜாக் மா. இன்டஸ்ட்ரியல் அன்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா (Industrial and Commercial Bank of China) என்னும் முன்னணி வங்கியுடன் கை கோர்த்தார். அலி பே (Alipay – Alibaba Payment என்பதன் சுருக்கம்) என்னும் பணம் செலுத்தும் முறையைத் தொடங்கினார்.
டாபா இணையதளத்துக்கு விசிட் அடித்தால், தேவைப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்கள் பார்க்கலாம், விற்பவரோடு பேசலாம், பேரம் பேசி விலையைத் தீர்மானிக்கலாம், பணத்தை விற்பவருக்கு உடனே அனுப்பலாம். நேரில் கடைக்குப் போய் வாங்குவதுபோல். அதே சமயம், கடைக்குப் போக வேண்டாம். எல்லாம் வீட்டிலிருந்தே. செம ஈசி.
இத்தனை செய்தும், பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆமை வேகத்தில்தான் நகர்ந்தது. ஜாக் மா செய்தார் ஒரு ட்ரிக். சூ மந்திரக் காளி! வந்தது வளர்ச்சி.
- slvmoorthy@gmail.com
