Published : 05 Aug 2018 08:24 AM
Last Updated : 05 Aug 2018 08:24 AM

‘ஸ்பாஞ்ச்’ - வாடிக்கையாளர்கள் தந்த பாடம்

ஆலோசனையாக இல்லாமல் அனுபவங்களின் தொகுப்பாக இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு. அதுவும் விளம்பரத்துறையில் பணியாற்றிய உயரதிகாரியின் அனுபவ தொகுப்புகள் மிகவும் குறைவு. அந்த வகையில் `ஸ்பாஞ்ச்’ புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.

விளம்பரத் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அம்பி பரமேஸ்வரன், ஸ்பாஞ்ச் என்னும் புத்தகத்தை எழுதி இருக்கிறார். வாடிக்கையாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட 25 பாடங்களின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

இந்த புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை சென்னையில் நடந்தது. மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடந்தது. புத்தகத்தில் உள்ள 25 பாடங்களில் சிலவற்றை பற்றி அம்பி பரமேஸ்வரன் சுருக்கமாக கூறியதிலிருந்து..

விப்ரோ நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜியை சந்திப்பதற்கு அனுமதியை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் சில காரணங்களால் இவர்கள் இருவரின் சந்திப்பும் தள்ளிப் போய்கொண்டே இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அம்பி பரமேஸ்வரன் பணியாற்றிய அலுவலகத்தில் இருந்த உயரதிகாரி அஸிம் பிரேம்ஜியை சந்திப்பதாக முடிவானது. குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு சென்று அஸிம் பிரேம்ஜியை அந்த அதிகாரி சந்தித்தார். எதற்காக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதோ அந்த வேலை முடிந்தது.

அதனைத் தொடர்ந்து எப்போது மும்பை செல்கிறீர்கள் என அஸிம் பிரேம்ஜி கேட்டிருக்கிறார். நாளை காலைதான் மும்பை செல்கிறேன் என அவர் கூறியிருக்கிறார். நாளை காலை ஏன் செல்ல வேண்டும். இன்று இரவே விமானம் இருக்கிறது. தேவைப்பட்டால் சொல்லுங்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்கிறேன் என கூறியிருக்கிறார்.

அஸிம் பிரேம்ஜி போன்ற நபர் கூறும்போது எப்படி மறுப்பது என வந்தவருக்கு சங்கடம். அதே சமயத்தில் அன்று இரவு பெங்களூரூவில் உள்ள நண்பர்களுடன் இரவு

விருந்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். ஒரு வழியாக அவரிடம் இருந்து சமாளித்து வந்துவிட்டார்.

உடனே ஊருக்கு செல்ல வேண்டும் என அஸிம் பிரேம்ஜி கூறியதற்கான காரணம் தெரிந்தது. குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்பதற்காக அஸிம் அவ்வளவு வலியுறுத்தி இருக்கிறார் என நாம் யோசிப்போம். ஆனால் அது உண்மையில்லை, வாடிக்கையாளர் செலவில் பெங்களூருவில் தங்கும் போது உணவு, போக்குவரத்து, ஷாப்பிங் என பல செய்ய வேண்டி இருக்கும். இதற்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்தான் செய்யும் என்றால் மறைமுகமாக அது விப்ரோவின் கணக்கில் ஏற்றப்படும். அதனால் காலையில் வாருங்கள், இரவில் சென்றுவிடுங்கள் என்பதுதான் அஸிம்பிரேஜியின் பாலிசி.

அடுத்த பாடம் அமுல் நிறுவனத்தின் மறைந்த தலைவர் வர்கிஸ் குரியனுடனான சந்திப்பில் கிடைத்ததாக  அம்பி பரமேஸ்வரன் குறிப்பிட்டார்.

பல நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு தற்போதுதான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஆனால் அமுல் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொடுக்கத் தொடங்கியது. அடுத்து செய்ய வேண்டிய விளம்பரம் குறித்து சந்திக்க அமுல் நிறுவனத்துக்கு சென்றிருந்தோம். அந்த அறையில் விளம்பரத் துறை சார்பாக அதிகாரிகள் குழுவும், அமுல் நிறுவனத்தின் சார்பாக பல அதிகாரிகளும் இருந்தனர். செய்ய வேண்டிய பணிகள் குறித்து நாங்கள் விளக்கினோம். நாங்கள் பேசும் போது குரியன் பேச மாட்டார். அதே சமயத்தில் அவருடைய உயர் அதிகாரிகள் குழு எங்களுடன் உரையாடுவதை அவர் விரும்புவார்.

அப்போது அமுல் பிரிவில் உள்ள ஒரு உயரதிகாரி விளம்பர வாசகத்தில் உள்ள ஒரு கலரை மாற்ற வேண்டும் என கூறினார். அதுவரை பேசாமல் இருந்த வர்கீஸ் குரியன் அப்போது பேச தொடங்கினார்.

நீங்கள் வீடு கட்ட முடிவெடுத்திருக்கிறீர்கள். பொறியாளர் நான்கு துண்கள் அமைத்து வடிவமைத்திருக்கிறார். இரண்டு தூண் பிடிக்கவில்லை நீக்குங்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். பொறியாளரும் நீக்கிவிடுகிறார். சில மாதங்களுக்கு பிறகு கட்டிடம் இடிந்த பிறகு யாரை குறை கூறி என்ன பயன். இடிந்தவருக்குதான் நஷ்டம்.

அதேபோல இந்த கலர் பிடிக்கவில்லை எனில் ஏன் பிடிக்கவில்லை என கூறுங்கள். நமது துறைக்கு ஏற்ற வண்ணம் இல்லை, இந்த எழுத்து அளவு குறைவாக இருக்கிறது. எழுத்துக்கும் பின்னால்  உள்ள வண்ணம் சரியில்லை என்பதால் தெளிவாக படிக்க முடியவில்லை என காரணத்தை கூறுங்கள்.  சம்பந்தப்பட்டவர்கள் கூறும் விளக்கத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு முடிவுக்கு வாருங்கள். துறை சார்ந்த வல்லுநர்களிடம் பணியை கொடுத்த பிறகு அதை காரணம் இல்லாமல் நீங்கள்  மாற்ற முற்படாதீர்கள் என குரியன் கூறியிருக்கிறார்.

இதுபோல ரத்தன் டாடா, சந்திரபாபு நாயுடு, எம்.தாமோதரன், வினிதா பாலி, எஸ்.ராமதுரை  உள்ளிட்ட பல தலைவர்களிடம் பெற்ற அனுபவங்களின் தொகுப்பாக இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. தலைவர்களின் சிந்தனைகளை புரிந்துகொள்வதற்கு இந்த புத்தகம் உதவியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x