Published : 06 Aug 2018 10:31 AM
Last Updated : 06 Aug 2018 10:31 AM

ஆன்லைன் ராஜா 38: ஜாக் மா கைது!

விட்மானின் ஒவ்வொரு அடியிலும் கவனம், நிதானம். ஜப்பானில் செய்த தவறுகளைச் செய்யவே கூடாது என்னும் முன்னெச்சரிக்கை. சி.இ.ஓ. தேர்வில் கவனமாக இருந்தார். அவர் ஜப்பானியக் கலாசாரமும் இன்டர்நெட்டும் அறிந்த இளைஞராக இருக்கவேண்டும். சீனா ஒரு இரும்புத்திரை. அயல்நாட்டுக் கம்பெனிகள் வந்து பிசினஸ் தொடங்க அரசு அனுமதி தராது. சீனக் கம்பெனியுடன் கை கோர்த்துக் கூட்டு முயற்சியாகத்தான் செய்யமுடியும். ஏராளமான ஆரம்ப ஆராய்ச்சிகள். விட்மான் தேர்ந்தெடுத்த கம்பெனி `ஈச்நெட்.காம் (EachNet.com).    

ஏன்? ஈச்நெட் கம்பெனியின் பின்புலம்.

யிபி ஷாவ் (Yibi Shao), ஹை டான் ஆகிய இருவரும் இதை நிறுவியவர்கள். சி.இ.ஓ – வாக யிபி நிர்வகித்துக் கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் நகரத்தில் பிறந்தவர்.  அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். யிபி படிக்கும்போதே கணிதத்தில் எப்போதும் நூற்றுக்கு நூறுதான். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் முழு உதவித்தொகையோடு அட்மிஷன். இளங்கலைப் பட்டம். இரண்டு வருடங்கள் வேலை. மறுபடியும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ. படிப்பு.

வகுப்புத் தோழரும், சக சீனருமான ஹை டானுடன் தாய்நாடு திரும்பி ஆன்லைன் பிசினஸ் தொடங்க முடிவு செய்தார். எல்லோரும் நம்பர் 1 கம்பெனி அமேசானைக் காப்பியடித்துக் கொண்டிருந்தார்கள். யிபி ரசனையே தனி. அவர் ஈ பேயின் கஸ்டமர். அவர்களுடைய ஏலம் போடும் மார்க்கெட்டிங் முறை அவருக்கு வாங்குதல்- விற்றல் என்பதைத் தாண்டி, த்ரில்லான விளையாட்டாக, பொழுதுபோக்காக இருந்தது. ஒரு பொருள் வாங்கும்போது, அது தரும் திருப்தியைவிட, கடைக்காரரிடம் பேரம் பேசுவதில்தான் சீனர்களுக்கு அதிக மகிழ்ச்சி.

ஆகவே, தன் நாட்டவருக்கும் ஈ பே பாணி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் என்று கணக்குப் போட்டார்.  ஈ பே பாணியில் கஸ்டமர்கள் தமக்குள் விற்பனை செய்துகொள்ளும் C2C  (Customer to Customer) என்னும் மார்க்கெட்டிங் முறையை யிபி தொடங்க இன்னொரு காரணம்,  ஏற்கெனவே, அலிபாபா, சீனாடாட்காம் போன்றவர்கள் பின்பற்றியது, வியாபாரிகள் தமக்குள் விற்பனை செய்துகொள்ளும் B2B  (Business to Business) என்னும் மார்க்கெட்டிங் முறை. அரைத்த மாவையே அரைக்க யிபி விரும்பவில்லை. அவர் போட நினைத்தது புதிய பாதை. ஆகஸ்ட் 1999. ஈச்நெட் தொடங்கினார். ஈ பே மேல் இருந்த ஈர்ப்பினால்தான் ‘‘ஈ” என்னும் எழுத்தில் தொடங்கும் ஈச்நெட் என்னும் பெயர் வைத்தார் என்கிறார்கள். 

பிரான்ஸ் நாட்டில் LVMH என்னும் தொழில் குழுமம் இருக்கிறது. ஹென்னஸீ (Hennessy), டாம் பெரிக்னான் (Dom Perignon) போன்ற மதுவகைகள்; லூயி விட்டான் (Louis Vitton) ஆடம்பரத் தோல் பைகள்; புல்கேரி (Bulgari), டாக் ஹியூர் (Tag Heuer) கடிகாரங்கள்; கிவென்ச்சி (Givenchy), கிறிஸ்டியன் டாயர் (Christian Dior) வாசனைப் பொருட்கள் போன்றவை LVMH தயாரிப்புகள். இந்தக் கம்பெனி முதலாளி பெர்னார்ட் ஆர்னால்ட். (Bernard Arnault). பிரான்சின் நம்பர் 1 கோடீஸ்வரர்.

உலகப் பட்டியலில் நான்காம் இடம். எல்லா முதலீட்டாளர்களும் ஒதுங்கி ஓடிக்கொண்டிருந்த 2000 காலகட்டத்தில், ஈச்நெட்டில் 20.5 மில்லியன்கள் துணிகர முதலீடு செய்தார். இந்த அசாத்திய நம்பிக்கைக்கு ஏற்றவராக, யிபி ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைத்தார். ஆனால், எதிர்பாராத பல பிரச்சினைகள். சீனாவில், பழைய சாமான்கள் வாங்குவதைக் கெளரவக் குறைவாகக் கருதினார்கள்.

வாங்க நினைத்த சிலரும், அந்தப் பொருட்களை நேரடியாகப் பார்க்க விரும்பினார்கள். இந்த இரண்டு தடைக்கற்களையும் தாண்டினால், கிரெடிட் கார்ட், ஆன்லைன் பேமென்ட் ஆகிய வசதிகள் மிகக் குறைவானவர்களிடமே இருந்தன. இதனால், ஈச்நெட்டின் வீச்சம் கணிசமாகக் குறைந்தது.

சீனா முழுக்கச் சிறகடித்துப் பறக்க ஆசைப்பட்ட யிபி தன் கனவுகளை ஷாங்காய் நகரத்தோடு மட்டும் சுருக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம். பிற நகரங்களுக்கு விரிவாக்க அதிக முதலீடு தேவைப்பட்டது. டாட்காம் குமிழி வெடிப்பால், துணிகர முதலீட்டாளர்கள் தூர விலகிவிட்டார்கள். ஐ.பி.ஓ – நோ சான்ஸ். தன்னைக் காப்பாற்ற யார் காலிலாவது விழும் கட்டாயத்தில் இருந்தார் யிபி. அவர் தேர்வு - மானசீக முன்னோடி ஈ பே.

இப்படி ஒரு வாய்ப்புக்குத்தானே விட்மான் காத்திருந்தார்? இரண்டு கம்பெனி நிர்வாகிகளும் சந்தித்தார்கள். பேச்சுக்கள், பேரங்கள். ஈச்நெட்டின் 33 சதவிகிதப் பங்குகளை 30 மில்லியன் டாலர்களுக்கு வாங்க ஈ பே சம்மதித்தது. விட்மானுக்கு இந்த மூன்றில் ஒரு பங்கு சொந்தம், வாமனன் மகாபலியிடம் கேட்ட மூன்றடி நிலம். நேரம் வரும்போது, ஈச்நெட் தலையில் காலைவைத்து அழுத்தி, விலைக்கு வாங்கினால், சீன ஆன்லைன் மார்க்கெட் ஈபே பாக்கெட்டில் என்பது அவர் மனக் கணக்கு.

மார்ச் 2002. விட்மான் ஷாங்காய் வந்தார். யிபியுடன் பேசினார். ஈச்நெட் செயல்முறைகளைப் பார்வையிட்டார். சீனாவில் இத்தனை தொழில்நுட்ப நேர்த்தியை அவர் எதிர்பார்க்கவில்லை. பிரமித்தார். கம்பெனிக்கு 30 லட்சம் கஸ்டமர்கள். இவர்களில் ஒரு லட்சம் பேர் கம்பெனி இணையத்துக்குத் தினமும்  விசிட் அடித்தார்கள். துணிமணிகள், நகைகள், எலெக்ட்ரானிக் கருவிகள் தொடங்கி வீடுகள் வரை 50,000 ஐட்டங்கள். ஷாங்காய் விற்பனை சூப்பராக நடந்துகொண்டிருந்தது. பீஜிங், க்வாங்ஜோ (Guangzhou) ஆகிய நகரங்களில் விரிவாக்குவதற்கான ப்ளான் ரெடி. மாதப் பரிவர்த்தனை 2 மில்லியன் டாலர்களைத் தொட்டது. பெரும்பாலும் ஏலங்கள். மற்றவை சாதாரண விற்பனைகள்.

இரு கம்பெனிகளுக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. விட்மான் சொன்னார்,``இந்த உறவு, அகில உலக ஆன்லைன் சந்தையைப் பிடிக்கும் திட்டத்தில் ஈ பே எடுத்துவைக்கும் முக்கிய அடி. சீனாவின் ஆன்லைன் சந்தை இப்போது ஒன்றேகால் பில்லியன் டாலர்கள். இதுவே, அடுத்த மூன்று, நான்கு வருடங்களில்  பன்னிரெண்டு மடங்கு வளர்ந்து பதினாறு பில்லியன் டாலர்களைத் தொடும். இதில் ஈ பே – ஈச் நெட் முக்கிய பங்கு வகிக்கும்.”

இதே உறுதியை, நம்பிக்கையை யிபி எதிரொலித்தார். “ஈச் நெட் சீனாவில் முன்னணியில் இருப்பதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு அங்கீகாரம். சீனா பற்றிய எங்கள் அறிவும், ஈ பேயின் உலகளாவிய அனுபவமும், சீன ஆன்லைன் உலகில் புரட்சியை உருவாக்கும்.”    

யிபி, விட்மான் இருவருமே, ஜாக் மா களத்தில் இருப்பதைக் கண்டுகொள்ளவேயில்லை. B2B பிசினஸ் நடத்துபவர், சுண்டைக்காய்க் கம்பெனி நமக்கு சமமா என்னும் மெத்தனம்.  அலிபாபாவை உதாசீனம் செய்ததில் ஜாக் மா வருத்தப்படவில்லை. சந்தோஷப்பட்டார். அவர் சிறு வயது முதலே, கராத்தே போன்ற மார்ஷியல் ஆர்ட்டில் அதீத விருப்பம் கொண்டவர். டைச்சி (Tai Chi) என்னும் தற்காப்புக் கலையில் தன் 23 – ஆம் வயது முதல் தினமும் பயிற்சி எடுத்துவந்தார். இத்தகைய கலைகளின் அடிப்படைத் தத்துவப்படி, யுத்தத்தில் எதிரி நம்மைக் குறைவாக மதிப்பிட்டால், அது பெரிய பலம். அசால்ட்டாக இருப்பான். நாம் தாக்கும் போது கதி கலங்கிவிடுவான். போர் தொடங்கும் முன்னாலேயே, மனத்தளவில் தோற்றுவிடுவான். இதற்குப் பிறகு, யுத்தம் வெறும் சம்பிரதாயம்தான்.

ஜாக் மாவும், ஈ பே தனக்குப் போட்டி என்று எங்கும் காட்டிக்கொள்ளவேயில்லை. ஈ பே செய்வது C2C, அலிபாபா செய்வது B2B. எங்கள்  இருவர் உலகங்களும் வெவ்வேறு,  அலிபாபாவை சுற்றி மட்டுமே தன் வாழ்க்கை சுழன்றது என்னும் மனப்போக்கைக் காட்டினார். (அப்படித்தான் எல்லோரையும் நம்பவைத்தார்.) இந்த நம்பிக்கையை நிரூபிப்பதைப்போல் அலிபாபாவில் எதிர்பாராத வளர்ச்சி, முன்னேற்றம்.

2003 பிறந்தது. அலிபாபா தொடங்கி நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. சி.இ.ஓ. ஜாக் மா, சி.எஃப்.ஓ. ஜோ, சி.டி.ஓ.  ஜான் வூ, சி.ஓ.ஓ. க்வான் ஆகிய நால்வர் கூட்டணி நிகழ்த்தியது ஒரு ஆச்சர்யம்.  அலிபாபாவில் முதன் முறையாக லாபம். ஆன்லைன் பிசினஸில் இது உலக சாதனை. ஜாக் மா இந்தச் சாதனையை ஊழியர்களின் அர்ப்பணிப்புக்குச் சமர்ப்பணம் செய்தார். கொண்டாட்டங்கள், பார்ட்டிகள் என்று சில நாட்கள் ஒட்டுமொத்தக் கம்பெனியே களை கட்டியது.

ஏப்ரல் 2003. சீனாவின் க்வாங்ஜோ (Guangzhou) மாநிலத்தில் இருக்கும் கான்ட்டன் (Canton) நகரத்தில் சீன ஏற்றுமதிப் பொருட்களின் கண்காட்சி (Chinese Export Commodities Fair) நடந்தது.  சீனத் தயாரிப்புகளை வாங்க விரும்பும் உலக வியாபாரிகளும், சீனத் தயாரிப்பாளர்களும் சந்திக்கும் விழா. அலிபாபா பெரிய ஸ்டால் எடுத்தார்கள்.

ஜாக் மா,  கிட்டி ஸாங் (Kitty Song)  என்னும் மார்க்கெட்டிங்  அதிகாரி, மற்றும் அலிபாபாவின் ஐந்து பெரிய தலைகள் ஸ்டாலில் வருவோரைச் சந்தித்தார்கள். கண்காட்சி முடிந்து ஊர் திரும்பினார்கள். ஓடியது ஒரு வாரம். ஒரு நாள் காலை. அந்த ஐந்து பேர் வீட்டுக்கும் அரசு அதிகாரிகள் வந்தார்கள். கதவை இழுத்து மூடினார்கள். வெளியே பூட்டுப் போட்டார்கள்.

‘‘இன்னும் பத்து நாட்களுக்கு நீங்கள் வீட்டுக் கைதிகள். நாங்கள் அனுமதி தந்த பிறகுதான் வெளியே வர முடியும்.”  

 (குகை இன்னும் திறக்கும்)

- slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x