

அதிக அளவில் நடைபெற்ற மணல் கொள்ளை காரணமாகவே முக்கொம்பு மேலணை உடைந்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
அரியலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரியில் பெருமளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியபோதும் கடைமடை வரை தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குஉரிய காலத்தில் ஆறுகள்,வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்படாததும், மணல் கொள்ளையுமே முக்கிய காரணங்கள்.
அதிக அளவில் நடைபெற்ற மணல் கொள்ளை காரணமாகவேமுக்கொம்பு மேலணை உடைந்துள்ளது. ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியாளர்கள் தற்போது கூறுவது, குதிரை ஓடிய பிறகுலாயத்தைப் பூட்டுவது போன்றது.
தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகளை முறையாக செயல்படுத்தவில்லை. இவ்வாறு வைகோ கூறினார்.