

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காக ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, ரூ.25,060 கோடி மதிப்பிலான ஏற்றுமதி வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். 2025-26 முதல் 2030-31 வரையிலான காலத்துக்கு சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் போட்டித் தன்மையை அதிகரிக்க இந்த திட்டம் வகை செய்கிறது.
இது தவிர, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தை (சிஜிஎஸ்இ) விரிவுபடுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் எம்எஸ்எம்இ அல்லாத ஏற்றுமதியாளர்களுக்கு 100% ஈட்டுப் பிணையம் இல்லாமல் கடன் வழங்க இந்த திட்டம் வகை செய்கிறது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்திய தயாரிப்புகள் உலக சந்தையில் சத்தமாக எதிரொலிப்பதை உறுதி செய்ய ஏற்றுமதி வளர்ச்சி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஏற்றுமதியாளர்களின் போட்டித் தன்மை அதிகரிக்கும். எம்எஸ்எம்இ, முதல் முறை ஏற்றுமதியாளர்கள் பயனடைவார்கள். இதுபோல கடன் உத்தரவாத திட்டம் சுய சார்பு இந்தியா கனவை நனவாக்க ஊக்கமளிக்கும்” என கூறப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்திய தயாரிப்புகளை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை ஆகும். இந்த இலக்கை எட்டுவதற்கான உறுதியானநடவடிக்கையாக, ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் 2 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.