

புதுடெல்லி: இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர்கள் 2025-ல் வழங்கிய ஒட்டுமொத்த நன்கொடை ரூ.10,380 கோடியை தாண்டியுள்ளதாக எடல்கிவ் ஹூருண் இந்தியா தொண்டு நிறுவனங்கள் பட்டியல் 2025-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிறந்த முன்னணி தொழிலதிபர் கொடையாளர்கள் 191 பேர் கொண்ட பட்டியலில் 12 பேர் புதிதாக இணைந்தவர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்த நன்கொடை 85% அதிகரித்துள்ளது.
எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தார் நன்கொடையாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இவர்களது ஆண்டு நன்கொடை ரூ.2,708 கோடியாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்காவது முறையாக அதிகம் நன்கொடை கொடுத்தவர்களது பட்டியலில் ஷிவ் நாடாரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.626 கோடியை தொண்டுப் பணிகளுக்காக செலவிட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட 54 சதவீதம் அதிகம். பஜாஜ் குடும்பம் ரூ.446 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது, கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகமாகும். தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தார் நன்கொடை பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர். இவர்கள் ரூ.440 கோடியை சுகாதார மற்றும் சமூகப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். இது, கடந்தாண்டை விட 32 சதவீதம் அதிகமாகும்.
ரூ.386 கோடி நன்கொடையுடன் இந்த பட்டியலில் 5-வது இடத்தில் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பம் உள்ளது. கடந்தாண்டை விட 17 சதவீதம் இவர் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளார்.
நந்தன் நிலகேனி (ரூ365 கோடி), ஹிந்துஜா குடும்பம் (ரூ.298 கோடி), ரோகிணி நிலகேனி (ரூ.204 கோடி), சுதிர் அண்ட் சமீர் மேத்தா (ரூ.189 கோடி), சைரஸ் அண்ட் ஆதார் பூனாவாலா (ரூ.173 கோடி) ஆகியோர் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.