

வெளிநாடுகளுடனான வர்த்தகக் கொள்கை இம்மாத இறுதியில் வெளியாகும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2014-19-ம் ஆண்டுகளுக்கானதாக இந்த கொள்கை அமையும்.
தொழில்துறை உற்பத்தியை அதிகரிப்பதோடு ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த கொள்கை இருக்கும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் தரம், அவற்றை பிரபலப்படுத்துவது உள்ளிட்டவைகளும் இந்த புதிய கொள்கையில் இடம்பெறும்.
ஏற்றுமதி சேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய ஏற்றுமதி கவுன்சில் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது. சேவைத்துறை ஏற்றுமதி மூலமான வருமானம் மே மாதத்தில் 1,400 கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 9.31 சதவீதம் அதிகரித்து 8,011 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2013-14-ம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 31,235 கோடி டாலராகும்.