

மதுரை: தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை எட்டும் வகையில், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உரு வாக்கிடவும், தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தகவல் தொழில்நுட்பச் சூழலை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இத்திட்டத்துக்கு மதுரை மாட்டுத்தாவணியில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த டைடல் பூங்காவானது, 5.34 லட்சம் சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 12 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை தொடங்கிய 18 மாதங்களில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, 2026 ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால் கிரேடு ‘ஏ’ நிறுவனங் கள் வந்து குவியத் தொடங்கும். மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி சில ஆண்டுகளில் அதிகரிக்கும். இதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் படித்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவர். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதால், மதுரையின் சமூகப் பொருளாதாரம் மேம்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை உட் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுச் சங்க (எம்ஐடி) நிர்வாகி மகேந்திரன் கூறியதாவது: மதுரைக்கு சம்பந்தமே இல்லாத வன்முறையை வைத்து திரைப்படங்கள் எடுக்கப்படுவதால் மதுரை குறித்து தவறான எண்ணம் விதைக்கப்பட்டுவிட்டது. இதனால், தொழில் வளர்ச்சி இல்லாமல் போய் விட்டது.
மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் படித்த ஏராளமான இளைஞர்கள் தொழில்நுட்பப் பணிக்காக சென்னை அல்லது பெங்களூரு செல்லும் நிலை ஏற் பட்டுள்ளது. இது, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் வெளி யூருக்குப் புறப்படும் இளைஞர் களின் கூட்டத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
தற்போது மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா பயன்பாட்டுக்கு வந்ததும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பெருகும். அதன்மூலம் பிற தொழில்களும் வளர்ச்சி அடையும். இதேபோன்று, பிற தொழிற்சாலைகளும், தனியார் நிறுவனங்களும் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க முன்வருவர். இதனால், மதுரையின் முகம்மாறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.