

புதுடெல்லி: முதலீடு தொடர்பான முடிவில் வெளியாட்களின் தலையீடு இருப்பதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை வெளியிட்டிருப்பது அடிப்படை ஆதாரமற்றது என எல்ஐசி மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த மே மாதத்தில் எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனத்தில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி முதலீடு செய்தது.
இதில் வெளியாட்களின் தலையீடு உள்ளது. இது தொடர்பான திட்டத்தை இந்திய அரசின் உயர் அதிகாரிகள் விரைவுபடுத்தி உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக எல்ஐசி நேற்று வெளியிட்ட மறுப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்ஐசியின் முதலீடு தொடர்பான முடிவுகளில் வெளிப்புற காரணிகள் தலையிட்டதாக தி வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தவறானது, ஆதாரமற்றது மற்றும் உண்மைக்கு முற்றிலும் மாறானது. அந்தக் கட்டுரையில் கூறியிருப்பது போல, அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான எந்த ஆவணமோ அல்லது திட்டமோ எல்ஐசியால் இதுவரை தயாரிக்கப்படவில்லை.
மத்திய அரசின் நிதி சேவைகள் துறை அல்லது வேறு எந்த அமைப்புக்கும் இத்தகைய முடிவுகளில் எந்தப் பங்கும் இல்லை. எல்ஐசி தனது அனைத்து முதலீட்டு முடிவுகளிலும் மிக உயர்ந்த அளவிலான கவனத்தையும் பொறுப்பையும் கடைபிடித்துள்ளது. அனைத்து முடிவுகளும் நடைமுறையில் உள்ள கொள்கைகள், சட்ட விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, அனைத்து தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. எல்ஐசியின் புகழுக்கும் இந்தியாவின் வலுவான நிதித் துறை அடித்தளத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.