

புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 6.6 சதவீதம் வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா வரிகளை உயர்த்தியது. சில நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தது. இதனால் உலகளவில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் சூழலில், உலக பொருளாதார முன்னோட்டம் குறித்த அறிக்கையை, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 2025-26-ம் நிதியாண்டில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும். இதன் பொருளாதாரம் 6.6 என்ற வீதத்தில் வளர்ந்து வருகிறது. முதல் காலாண்டில் பொருளாதாரத்தில் சிறப்பான செயல்பாடு காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரிவிதிப்பின் பாதிப்புகளை ஈடுசெய்துள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட வேகம் சற்று குறைவதற்கான சாத்தியங்கள் உள்ளதால் 2026-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும். அமெரிக்காவின் வரி பாதிப்புகள் எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது. இந்த நிதியாண்டில் உலகளவிலான பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும். இது அடுத்த நிதியாண்டில் 3.1 சதவீதமாக குறையும். உலகளவில் பணவீக்கம் தொடர்ந்து குறையும். வளர்ந்த பொருளாதார நாடுகளில் வளர்ச்சி வீதம் 1.6 சதவீதமாக இருக்கும். வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் வளர்ச்சி 4.2 சதவீதமாக இருக்கும். இது அடுத்த நிதியாண்டில் 0.2 சதவீதம் குறையலாம்.
வளர்ந்த பொருளாதார நாடுகளில் வேகமாக வளரும் நாடாக ஸ்பெயின் இருக்கும். இதன் வளர்ச்சி வீதம் 2.9 சதவீதமாக இருக்கும். அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும். இது கடந்தாண்டில் 2.4 சதவீதமாக இருந்தது. பிரேசில் நாட்டின் வளர்ச்சி வீதம் 2.4 சதவீதமாகவும், கனடாவின் வளர்ச்சி 1.2 சதவீதமாகவும், ஜப்பானின் வளர்ச்சி 1.1 சதவீதமாகவும் இருக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருந்தாலும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 3.3 சதவீதத்திலிருந்து, அடுத்தாண்டு 2.6 சதவீதமாக குறையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.