EPFO விதிகள் மாற்றம்: காங்கிரஸ், திரிணமூல் கண்டனம்

EPFO விதிகள் மாற்றம்: காங்கிரஸ், திரிணமூல் கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் மூலம், பொருளாதாரம் தவறாக கையாளப்பட்டுள்ளதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் விருதுநகர் தொகுதி எம்பியுமான மாணிக்கம் தாக்கூர், "மோடி அரசின் இபிஎஃப்ஓ விதிகள் கொடூரமானவை. ஓய்வூதியர்களும் வேலை இழந்தவர்களும் தங்கள் சொந்த சேமிப்பைப் பெறுவதில் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இது மக்களின் வாழ்வை அழிக்கும் செயல். மத்​திய தொழிலா​ளர் துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியாவின் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும்.

புதிய விதிகளின் கீழ், வேலை இழந்து 12 மாதங்களுக்குப் பிறகே ஒருவர் தனது பிஎஃப் பணத்தை திரும்பப் பெற முடியும். 36 மாதங்களுக்குப் பிறகே, ஓய்வூதியத்தை திரும்பப் பெற முடியும். இபிஎஃப் சேமிப்பில் 25% எப்போதுமே எடுக்க முடியாது.

இத்தகைய விதிகளால் யாருக்கு லாபம்? நிச்சயமாக தொழிலாளர்களுக்கு அல்ல. ஒரு தொழிலாளி தனது வேலையை இழந்தாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ அவர் தனது உழைப்பால் சேமித்த சேமிப்பை அணுக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அதேநேரத்தில், இந்த அரசாங்கம் தனது நெருங்கிய நண்பர்களுக்காக லட்சக்கணக்கான கோடிகளை தள்ளுபடி செய்கிறது. இது சீர்திருத்தம் அல்ல; கொள்ளை.

இபிஎஃப் தொகையை நம்பி வாழும் ஓய்வூதியர்களின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். அதிகாரத்துவக் கொடுமை நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் கண்ணியத்தை அழிக்க விடக்கூடாது.” என தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்பி சாகெட் கோகலே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய இபிஎஃப்ஓ விதிகள் அதிர்ச்சியூட்டுபவையாகவும் ஆபத்தானவையாகவும் உள்ளன. இது சம்பளம் வாங்குபவர்களின் பணத்தை வெளிப்படையாகத் திருடுவதாகும்

இதற்கு முன், ஒருவர் தனது வேலையை இழந்தால் 2 மாதத்துக்குப் பிறகு தனது இபிஎஃப் தொகையை திரும்பப் பெறலாம். அது தற்போது ஒரு வருட காலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஓய்வூதியத்தைப் பெற இதற்கு முன் 2 மாதங்கள் மட்டுமே காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அது தற்போது 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மிக மோசமான ஒரு நடவடிக்கையாக, சேமிப்பு பணத்தில் 25%ஐ எப்போதுமே ஒருவர் எடுக்க முடியாது. விதிகள் இப்படி இருந்தால், ஒரு சாதாரண நடுத்தர வர்க்க நபர் எப்படி உயிர்வாழ்வார்?.” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in