ஒப்பந்த காலத்தை நீடித்தது நீதிமன்றம் - காஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

நாமக்கல்: காஸ் டேங்கர் லாரிகளின் ஒப்பந்த காலம் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளதால் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள கேஸ் டேங்கர் லாரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 5 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்தாண்டுக்கான வாடகை ஒப்பந்தத்தில் 700-க்கும் அதிகமான காஸ் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக ஆயில் நிறுவனங்களுடன் தென்மண்டல காஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அதில் உடன்பாடு எதுவும் ஏற்பட்டவில்லை.

இதையடுத்து அனைத்து லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். கடந்த 6 நாட்களாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்து வந்தது. இதனால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு அபாயம் உருவானது.

இந்நிலையில், திடீரென காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இது குறித்து தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், “தற்பொழுது நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இச்சூழலில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஆயில் நிறுவனத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் நேற்று காஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்த காலம் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. காஸ் டேங்கர் லாரிகள் இன்று (அக்.14) முதல் இயங்கும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in