

புதுமுறை காணல் என்பது வர்த்தகத்திலும், நிறுவனங்களிலும் மற்றும் உத்திகளிலும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் ஒரு நிலைக்கு மேல் மாவு எதற்கும் பயன்படாது உடல் உழைப்பு வீணாவது மட்டுமே நிச்சயம். அதனால்தான் பெரு வணிக நிறுவனங்களும், உத்திகளை உருவாக்கும் நிறுவனங்களும் செய்வதையே திரும்ப செய்வதைத் தவிர்த்து புதுமுறை காணலின் அவசியத்தை உணர்கிறார்கள். மெக்கென்னே ( McKinney) என்னும் நூல் ஆசிரியர் புதுமுறை காணலில் நெருப்பு பொறிகளாக சிலவற்றை தன்னுடைய நூலில் அழகாகக் கூறுகிறார். குழப்பமான கடினமான செயல்முறைகளைத் தவிர்ப்பது குறித்தும் அவற்றை வெகு சுலபமாக பின்பற்றுவது பற்றியும் சில செய்திகளை எடுத்துக் கூறுகிறார். புதுமுறை காணும் முயற்சியில் ஈடுபடும் யாருக்கும் மிகவும் அவசியத் தேவையாக இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்கலாம்.
முக்கியமான அம்சமே எளிதான நடையில், சாதாரண செய்திகளை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் கூறியிருப்பது மட்டுமே. புதுமுறை காணலுக்கு எதிரான செயல்களாக மிக முக்கியக் காரணிகளாக கலாசாரத்தையும் தவறான தொடங்குதலையும் குறிப்பிடுகிறார்கள். நிறுவன கலாசாரம் புதுமைக்கு வழிவிடாது. எதற்காக மாறவேண்டும் என்ற கேள்வி புதுமை காணும் முயற்சிகளை புதைத்துவிடும். அதே போல தவறான இடத்தில் இருந்து தொடங்கும் எந்த முனைப்பும் நேர்மறையாகவும் வெற்றியாகவும் மாறுவதற்கு வாய்ப்புகளே கிடையாது. இருக்கும் தகவல்களை விரிவாக்கம் செய்தும் புத்தாக்கம் செய்தும் புதிய தொடர்புகளை நிகழ்த்தியும் புதுமுறை காணலுக்கு வழி காண்பது அவசியம் ஆகும். புதிய செய்திகளையும், பொருட்களையும், உத்திகளையும் உருவாக்குவதற்கு எளிமையான வழிகளில் புதுமை காணல் எவ்வாறு உதவி செய்கின்றது என்பதை இனி விரிவாக காணலாம்.
புதிய செய்திகளையும், பொருட்களையும் உற்பத்தி செய்வதற்கு தற்கால அல்லது தற்போதைய குறைந்த பட்ச தரவுகள் உதவி செய்யாது. குறைந்த பட்சத் தரவுகளை மேம்படுத்த கூட்டை விட்டு வெளியே வர வேண்டும். பெரும்பான்மையான நிறுவனங்கள் நிச்சயத் தன்மை என்ற புள்ளியில் இருந்து எதையும் தொடங்க வேண்டும் என்ற கலாசாரத்தை வளர்த்திருப்பார்கள். அது போன்ற நாள்பட்ட கலாசாரங்களை தவிர்த்துவிட்டு துணிந்து வெளியில் வருவது. புதுமுறை காணலில் முதல்படி. கேள்விகள் கேட்பதை தவிர்த்து செய்திகளைச் சொல்வதால் யாரும் புதிதாக எண்ண முடியாது. செய்ய முடியாது, முனைய முடியாது. புதுமை காணத் துடிப்பவர்கள் கேள்விகளைத் தாங்கி கொண்டிருப்பார்களே தவிர கூறும் பதில்களை எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கேள்விகளுக்கு விடை தெரிந்தால் தவிர நிறுவனங்கள் கேள்விகளைக் கேட்க அனுமதிப்பதே இல்லை. தெரிந்த விடைகளை வைத்துக் கொண்டு தெரியாத புதிர்களுக்கு விடைகளைத் தேடினால் வெற்றி நிச்சயம் கிடைக்காது.
நிறுவனத் தலைவர்கள் தங்கள் கேள்விகளில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் கேள்விகளை அவற்றை கேட்பதற்கே அனுமதிப்பது இல்லை. செரிவான, சரியான தொடர்புடைய கேள்விகள் புதுமை காணலில் அடுத்த படி. புதுமுறை காணலில் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட தகுதிகளையும், மாறாத மனப்பாங்கையும் உபயோகிக்க முடியாது. தகுதிகளையும் , திறமைகளையும் மாற்றி சிந்தனை செய்து புதிய பாணியில் விடைகளைக் கண்டறிந்தால் அதுவே புதுமுறை காணுதல் ஆகும். மாற்றத்தை ஏற்காத விரும்பாத நிறுவனத் தலைவர்கள் உடலில் ஏற்படும் ஒவ்வாமைக்கு சிறந்த உதாரணமாவார்கள். உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி வேலை செய்வதைப் போல கேள்விகள் மாற்றங்கள் ஆகியவை புதுமுறை காணலுக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வாறு புதுமுறை காணுதலுக்கு எதிரான சிலவற்றை கீழே காணலாம்
1. எனக்கு எல்லாம் தெரியும்
2. பயனற்ற செயல்கள்
3. உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்காது
4. சொகுசு முனைப்பாடு
எனக்கு எல்லாம் தெரியும்
எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் தெரிந்த செயல்களை மட்டும் திரும்ப செய்ய உதவி செய்யும். புதுமுறை காணலை ஊக்கப்படுத்தாது. மாறாக, ஏற்கனவே வெற்றியடைந்த செயல்களால் மீண்டும் வெற்றி கிடைக்கும் என்ற தவறான அணுகுமுறையால் நிறுவனங்கள் தொலைந்து போகின்றன. கைபேசியை முதலில் தயாரித்த நிறுவனம் எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தால் சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவரும் அறிந்ததே.
பயனற்ற செயல்கள்
முன்பே முனைப்பாகச் செய்து முற்றாக தோல்வியடைந்ததால் மீண்டும் அதைச் செய்ய மாட்டேன் என்ற மனப்பாங்கு புதுமை காணும் ஊக்கத்தைக் குலைத்துவிடும். அந்த நாளில் அந்த நேரத்தில் அந்தச் சூழலில் அந்த மனிதர்களால் ஏற்பட்ட பயனற்ற செயல்கள் மீண்டும் நிகழும் என்பதற்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. எனவே, ஓய்ந்து போன சொற்களால் ஏற்கனவே எடுத்த முயற்சிகள் பயன்தராது என்ற பாட்டை பாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்காது
புதிய முறையில் செயல்படும் போது கிடைக்க கூடிய வெகுமதி செயல்திறனுக்கு ஏற்றதாக அமையாது. ஏற்கனவே நிருபணமான செயல்முறைகள் வேலைப் பளுவையையும், பொருளாதாரப் பளுவையும் எளிமையாக்கும். எனவே புதுமுறை காணலில் ஏற்படக் கூடிய இழப்புகளை மேடை போட்டு பேசிக் கொண்டிருந்தால் அது வெற்றிக்கு வழிகாட்டாது. உழைப்புக்கான பரிசு கிடைக்காது என்ற தவறான அணுகுமுறை புதுமுறை காணும் முயற்சிகளைப் புதைத்து விடும்.
சொகுசு முனைப்பாடு
சொகுசு முனைப்பாடு முயற்சிகள் எடுப்பதைத் தவிர்க்கும். நிகழ்வுகளை தாங்க முடியாது என்று ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும். வேறுமாதிரி கூறும் பொழுது அமைதியான நீரில் செல்லும் படகைக் கவிழ்க்க கூடாது என்ற தற்காப்பு உணர்ச்சியோடு செய்த செயல்களையே திரும்ப திரும்பச் செய்து தோல்வியை மட்டுமே தாங்கிக் கொள்ளுகிறார்கள். கண்டறிந்து உருவாக்கி வரிசைப்படுத்தி செயல்படுத்தி வெளிவரும் நேரத்தில் புதுமுறை வெற்றி பெறுகிறது. முனைப்பாக வாடிக்கையாளரையும் பொருட் களையும் அவைகளுடைய தேவைகளையும் புதுமை புகுத்தலின் தன்மைகளையும் இணைக்கும் பொழுது புதிய பொருட்களும் புதிய உத்திகளும், புதிய செயல்களும் உருவாகின்றன.
மோசமான எதிர்மறை கேள்விகளை ஏகத்திற்கும் எழுப்பி விடைகளைத் தேடிக் கொண்டிருப்பது புதுமுறை காணலில் அடுத்த முயற்சி. கேள்வியே கேட்காமல் செக்கு மாடுகளாகச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் புதுமையைக் காணவே முடியாது. நடந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருப்பவர்கள் புதுமையை நினைத்து மகிழ்ச்சி கொள்ள முடியாது. அவ்வாறு கேள்விகள் கேட்கும் பொழுது ஐந்து சாதாரண கேள்விகளை தேர்வு செய்து அவற்றுள் மிகச் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து கையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண்பது அறிவுடைமை.
செயல்படுத்தும் பொழுது மிகச்சிறந்த எண்ணங்களை அல்லது தரவுகளைத் தேர்வு செய்து புதுமையை புகுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் போது வெற்றி நிச்சயம். வாடிக்கையாளர் யார் நம்முடைய பொருட்களை சந்தைப் படுத்தும் பொழுது யாரேனும் ஏன் வாங்க வேண்டும், எதிர்பாராத வகையில் பொருட்களை பயன்படுத்துவோர்கள் யார், நாம் என்ன கொடுக்க போகின்றோம் என்ற சரியான கேள்விகள் நிறுவனங்களை புதுமுறைகளைக் கண்டறிய உதவும்.
rvenkatapathy@rediffmail.com