

சென்னை: ரிலையன்ஸ் கன்ஸ்யூமர்ஸ் ப்ராடக்ட்ஸ் லிமிடெட்(ஆர்சிபிஎல்) சந்தையில் முன்னணி நிறுவனமாக வருவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரம்பரியமிக்க ‘வெல்வெட்’ நிறுவனத்தின் தயாரிப்புகளை புதுப்பித்து உலகளவில் மீண்டும் சந்தைப்படுத்துவதற்கான உரிமத்தை ஆர்சிபிஎல் சமீபத்தில் பெற்றது. முதல்கட்டமாக தற்போதைய நவீன காலச்சூழலுக்கேற்ப புதுமைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள வெல்வெட் நிறுவனத்தின் அழகு சாதனப்பொருட்கள் சென்னையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
இதன் விளம்பர தூதராக நடிகை கீர்த்தி ஷெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆர்சிபிஎல் நிறுவன இயக்குநர் டி.கிருஷ்ணகுமார் புதிய பொருட்களை அறிமுகம் செய்து பேசியதாவது:
தமிழகத்தின் புகழ்பெற்ற வெல்வெட் பிராண்டை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். உலகில் அனைத்து தரப்பினருக்கும் தரமான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றி வருகிறோம். அதனுடன் இந்திய பாரம்பரிய பிராண்ட்களை புதுப்பிப்பதும் எங்களுக்கு முக்கிய கொள்கையாகும்.
அதன்படி இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் கேம்பா, சில் போன்ற பல்வேறு பிராண்ட்களை வாங்கி சிறந்தமுறையில் சந்தைப்படுத்தி வருகிறோம். தொடர்ந்து சி.கே. ராஜ் குமாரால் தொடங்கப்பட்ட வெல்வெட் பிராண்ட்டை கையகப்படுத்தி, இளம் தலைமுறையினரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதிய வெல்வெட் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஷாம்பூ, சோப்பு, கண்டிஷனர்கள், ஷவர் ஜெல்கள், பாடி லோஷன்கள் மற்றும் டால்கம் பவுடர்கள் அடங்கும்.
இந்த பொருட்கள் நுகர்வோரின் தேவைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்வதற்காக ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு பின்பு உருவாக்கப்பட்டுள்ளன. புதிய அவதாரத்தில் வெளிவரும் பொருட்களுக்கும் வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம். இதில் குறைந்தபட்சமாக ஷாம்பின் விலை ரூ.2 ஆகும்.
தற்போது தமிழகத்தில் மட்டுமே வெல்வெட் பொருட்களை அறிமுகம் செய்துள்ளோம். தொடர்ந்து தென் மாநிலங்கள் மற்றும் நாடு முழுவதும் அவற்றை கொண்டு செல்வோம். நாங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துகளை பெற்று தேவைக்கேற்ப மாற்றம் செய்யவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் ஆர்சிபிஎல் செயல் இயக்குநர் கேட்டன் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.