உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாடு: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாடு: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

கோவை: ‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு சார்பில், உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ இரண்டு நாள் மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று தொடங்கியது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: குறு, சிறு தொழில்கள் வளர்ச்சியில் தேசிய அளவில் தமிழகம் சிறந்த இடம் பிடிக்க செய்த அமைச்சர் அன்பரசனின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இதுபோன்ற தொழில் மாநாடுகள் தமிழக வளர்ச்சி மட்டுமல்லாமல் இந்திய வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அமைதியான சூழல், சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது போன்ற காரணங்களால் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய தொழில்துறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். 2030-ம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடைய திட்டம் வகுத்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

உலகின் மிக முக்கிய புத்தொழில் நகரமாக தமிழகத்தை கட்டமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இப்பிரிவில் உள்ள தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது. புத்தொழிலில் பெறக்கூடிய மொத்த முதலீட்டில் 50 சதவீதம் பெண் தொழில்முனைவோரின் பங்களிப்பு உள்ளது மிகவும் பெருமைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து முதல்வர் முன்னிலையில் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளால் அமைக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு முழு மானியத்துடன் கூடிய அனுமதி ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தொழில்துறையினர் பங்கேற்றனர். 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in