

புதுடெல்லி: இந்தியா மீதான 25% அபராத வரியை வரும் நவம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா விலக்கிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கான வாய்ப்பை தலைமை பொருளாதார ஆலோசகரின் கருத்துகள் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கொல்கத்தாவில் வணிகர்களின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை சபை ஏற்பாடு செய்த நிகழ்சியொன்றில் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பேசியதாவது: இந்திய பொருட்களின் இறக்கு மதிக்கு அமெரிக்கா 25 சதவீத பரஸ்பர வரி விதித்தது. அதே போன்று மீண்டும் 25 சதவீத அபராத வரியை இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ளது. இரண்டும் எதிர்பார்க்கப்படாத ஒன்று. புவிசார் அரசியல் சூழ்நிலைகள் இரண்டாவது 25 சதவீத அபராத வரி விதிப்புக்கு வழிவகுத்திருக்கலாம் என்று நான் இன்னும் நம்புகிறேன்.
ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை கருத்தில் கொண்டால் நவம்பர் 30-க்குப் பிறகு அபராத வரி விதிப்பு இருக்காது என்றே நம்புகிறேன். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மூலம் அடுத்த இரண்டு மாதங்களில் அபராத வரி மற்றும் பரஸ்பர வரி குறித்து ஒரு முழுமையான தீர்வு எட்டப்படும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
தற்போது ஆண்டுதோறும் 850 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி விரைவில் 1 டிரில்லியன் டாலரை எட்டும் நிலையில் உள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது ஒரு ஆரோக்கியமான, திறந்தநிலை பொருளாதாரத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு அனந்த நாகேஸ்வரன் பேசினார்.