காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு

காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்வு
Updated on
1 min read

புதுடெல்லி: காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீட்டுக்கான ஒரு நாள் யுபிஐ பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்கிறது. இது வரும் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது.

இப்போதுள்ள விதிமுறைகளின்படி, ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் கணக்குக்கு யுபிஐ மூலம் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதேநேரம், பங்குச் சந்தை முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம், கடன் அட்டை நிலுவை செலுத்துவது உட்பட நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. கல்விக் கட்டணம், ஐபிஓ (முதல் பங்கு வெளியீடு) ஆகியவற்றுக்கு ரூ.5 லட்சமாக உள்ளது.

இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனை ஒரு முறை மற்றும் 24 மணி நேர உச்சவரம்பை இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்பிசிஐ) உயர்த்தி உள்ளது. இது வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பங்குச் சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம் மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கான (இஎம்டி) உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரு முறை பரிமாற்ற வரம்பு ரூ.5 லட்சமாக உயர்கிறது.

இதுபோல, போக்குவரத்து கட்டணம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்கிறது. கடன் அட்டை நிலுவை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2
லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது. கல்விக் கட்டணம், மருத்துவமனை கட்டணம் மற்றும் ஐபிஓ (முதல் பங்கு வெளியீடு) பரிவர்த்தனை ரூ.5 லட்சமாகவே தொடர்கிறது. இதுபோல, தனிநபர் மற்றொரு தனி நபருக்கு அனுப்புவதற்கான உச்ச வரம்பு ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது.

இதுகுறித்து என்பிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “பணப் பரிவர்த்தனை தொகையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால், தொகை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, நிறுவனங்களுக்கான கட்டணங்களை தடையின்றி செலுத்துவதை உறுதி செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in