Published : 28 Aug 2014 10:00 AM
Last Updated : 28 Aug 2014 10:00 AM

ஸ்நாப்டீல் நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா ஸ்நாப் டீல் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். இந்த தகவலை ஸ்நாப் டீல் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி குனால் பஹல் தெரிவித்தார்.

ரத்தன் டாடா தன்னுடைய சொந்த பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக குனால் தெரிவித்தார். இருந்தாலும் எவ்வளவு தொகையை ரத்தன் முதலீடு செய்தார் என்ற தகவலை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் பெற்ற வளர்ச்சியை அங்கீகரிப்பதுபோல ரத்தன் டாடாவின் முதலீடு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 40 கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 10 கோடி டாலர் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விரிவாக்க பணிகளுக்காக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ரத்தன் டாடா முதலீடு செய்திருப்பது, நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நிறுவனர் குனால் தெரிவித்தார்.

ஸ்நாப் டீல் நிறுவனம் கடந்த இரு வருடங்களாக ஆண்டுக்கு 600 சதவீத வளர்ச்சியை அடைந்து வருகிறது. 500 பிரிவுகளில் 50 லட்சம் பொருட்கள் ஸ்நாப் டீல் நிறுவனத்தில் விற்கப்படுகின்றது. ஸ்நாப் டீல் நிறுவனத்தில் இபே, பிளாக்ராக் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. கடந்த ஜூலை 29ம் தேதி இந்தியாவின் முக்கியமான இகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 100 கோடி டாலரை திரட்டியது. இதற்கு அடுத்த நாள் அமேசான் நிறுவனம் 200 கோடி டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது.

பி.டபிள்யூ.சி. நிறுவனத்தின் கணிப்புப்படி 2017 முதல் 2020-ம் ஆண்டுக்குள் இந்திய இகாமர்ஸ் நிறுவனங்கள் 190 கோடி டாலரை லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட விஷயங்களுக்காக முதலீடு செய்யும் வாய்ப்பு இருக்கின்றது என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x