

அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இந்திய வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பிரணாப் இதை தெரிவித்தார்.
நாட்டின் ஏழ்மையை குறைப்பதற்கு 8 முதல் 9 சதவீத நீடித்த வளர்ச்சி தேவை. இந்த இலக்கை அடைவதற்கு உள்நாட்டு சேமிப்பு மற்றும் உள்நாட்டு முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தேவையான முதலீட்டை அதிகரிக்க வெளி நாட்டு முதலீடு முக்கியமான பங்கு வகிக்கும். அதற்கு இந்த தேவையை தெளிவாக புரிந்துகொண்டு அதற்கேற்ற நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றார்.
தன்னைப் பற்றி பேசும்போது இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கு வகித்தேன். இப்போது அது முடியாது. இப்போது மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றார்.
மேலும் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த வேண்டும். தவிர இந்தியாவில் அதிக அளவில் இருக்கும் இளை ஞர்களின் தகுதியை வளர்க்க வேண்டும் என்றார். சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) பற்றி பேசும் போது மாநில அரசுகள், ஜிஎஸ் டியை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.