முதல் முறை வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 வரை ஊக்கத் தொகை - மத்திய தொழிலாளர் ஆணையர் விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் முதல் முறை வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக மத்திய தொழிலாளர் ஆணையர் ஸ்ரீநுதாரா விளக்கமளித்தார்.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக வேலைவாய்ப்புடன் இணைந்து ஊக்கத் தொகை வழங்கும் வகையில் பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் சார்பில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் இன்று நடைபெற்றது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மத்திய துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ஸ்ரீநுதாரா கூறியது: “உற்பத்தி தொழில் உட்பட பல்வேறு துறைகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகளை 2027 ஜூலை மாதத்துக்குள் உருவாக்குவதற்காக ரூ.99,446 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலை வழங்கும் நிர்வாகமும், முதன்முதலாக வேலைபெறுபவர்களும் ஊக்கத்தொகை பெறுவார்கள்.

இந்த திட்டத்தின் முதல்கட்டம் 2025 ஏப்.1-ம் தேதி முதல் 2027 ஜூலை 31-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி வருங்கால வைப்பு நிதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் பதிவு செய்து முதன்முறையாக வேலைக்கு செல்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. அதேபோல், வேலை வழங்குபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அதன்படி ரூ.10 ஆயிரம் வரை ஊதியம் பெறும் ஊழியரை நியமித்தால், ரூ.1000-ம், ரூ.20 ஆயிரம் வரை ஊழியரை நியமித்தால், ரூ.2 ஆயிரம், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஊழியரை நியமித்தால் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வேலை வழங்குபவருக்கு வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழக அரசின் தொழிலாளர் கூடுதல் ஆணையர் லட்சுமிகாந்தன், ஐசிஎஃப் முதன்மை தலைமைப் பணியாளர் அதிகாரி ஆர்.மோகன்ராஜா, மத்திய தொழிலாளர் அமலாக்க அதிகாரி எம்.ரமேஷ், அம்பத்தூர் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் மனோஜ் பிரபு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் (இஎஸ்ஐ) துணை இயக்குநர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in