Published : 17 Jul 2018 10:43 AM
Last Updated : 17 Jul 2018 10:43 AM

ஆன்லைன் ராஜா 35: எங்கள் வழி தனிவழி!

ஆன்லைன் பிசினஸின் அடிப்படை நம்பிக்கை. அலிபாபா நடத்தியது பிசினஸ் டு பிசினஸ். இரண்டு வியாபாரிகள் தமக்குள் நடத்தும் பரிவர்த்தனை. ஒருவரை ஒருவர் யாரென்று தெரியாமலே செய்துகொள்ளும் வியாபாரம். இது சிக்கலில்லாமல் நடக்கவேண்டுமானால், இரண்டு வியாபாரிகளுக்கும் அலிபாபா மீது நம்பிக்கை இருக்கவேண்டும். தமக்குள் நம்பிக்கை இருக்கவேண்டும். கடைகளுக்குப் போய் நேரடியாக ஒருவரை ஒருவர் பார்த்து வியாபாரம் செய்து பழக்கப்பட்ட சீன வியாபாரிகளுக்கு இது மாபெரும் வித்தியாசம். இந்த மனத்தடையை உடைத்தால்தான் அலிபாபா பெரும் வளர்ச்சி காண முடியும் என்று நால்வர் படை தீர்மானித்தது.

சீன ஆன்லைன் பிசினஸுக்கு இருந்த இன்னொரு முக்கிய பிரச்சினை, 2000 ஆண்டு காலகட்டத்தில் சீன வியாபாரிகளுக்கு வெளிநாடுகளில் இருந்த கெட்ட பெயர். சீனா என்றாலே, முதலில் தோன்றிய மனபிம்பம் இதுதான் - பொருட்களின் தரம் கேள்விக்குறியாக இருக்கும்; டெலிவரி செய்வதாக ஒரு நாளைக் குறிப்பிடுவார்கள். நாட்கள், வாரங்கள் ஓடும். ஆர்டர் செய்த பொருள் வராது. ஈ மெயில் அனுப்பினால், போன் செய்தால், பதிலும் வராது. ஆர்டர் தந்தவர் ”சோதனைமேல் சோதனை, போதுமடா சாமி” என்று சீன சப்ளையருக்குக் கும்பிடு போட்டுத் தூர விலகிவிடுவார். பெரும்பாலான சீனத் தயாரிப்பாளர்களின் தில்லாலங்கடித்தனத்தால், ஒட்டுமொத்த சீன வியாபாரிகளின் மதிப்பு உலக அரங்கின் அடிமட்டத்தில்.

அலிபாபாவின் தலைமை இந்த இரண்டு மாங்காய்களையும் ஒரே கல்லால் அடித்தார்கள். அந்தக் கல் - நம்பிக்கை நுழைவுச்சீட்டு (Trust Pass) என்னும் முறை. இதன்படி, சிறிய கட்டணம் செலுத்தினால், அலிபாபா நிர்வாகம் வியாபாரியின் பின்புலத்தை நடுநிலையான ஒரு அமைப்பின் மூலம் ஆராய்ந்து பார்க்கும். இதன் அடிப்படையில் நம்பிக்கை நுழைவுச்சீட்டு என்னும் சான்றிதழ் வழங்கும். சீன வியாபாரிகள் தமக்குள்ளும், உலக அரங்கில் அவர்கள் மீதும் நம்பிக்கை ஏற்படுத்திய துருப்புச் சீட்டு.

இந்தக் கல்லால் மூன்றாவது மாங்காயும் விழுந்தது. அது, கட்டணம் மூலம் கிடைத்த வருமானம்.

அலிபாபாவில் விற்கும் வியாபாரிகள் எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகமாக்குவது எப்படி? நால்வர் குழு மூளை ஓவர்டைம் ஒர்க். வீச்சு அதிகமாக இருக்கவேண்டும். அதே சமயம், கையிருப்புப் பணத்தைச் சிக்கனமாகச் செலவிடவேண்டும். ‘தேவை கண்டுபிடிப்புகளின் தாய்' (Necessity is the Mother of invention)  என்று ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. குறைந்த செலவு, நிறையப் பலன் – ஜாக் மா குழுவின் கண்டுபிடிப்பு, ரோட்ஷோ (Roadshow).

நம் ஊரில் தேர்தல் காலத் தில் அரசியல்வாதிகள் பயன் படுத்துவது போன்ற யுக்தி.  ஐ.பி.ஓ. கொண்டுவரும் நிறுவ னங்கள் இதைக் கையாண்டு வந்தார்கள். கம்பெனியின் உயர் அதிகாரிகள் நாட்டின் பல பாகங்களுக்குப் பயணம் செய்வார்கள். நிதி ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோரைச் சந்திப்பார்கள். தங்கள் நிறுவனம் பற்றிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பார்கள். சந்தேகங்களுக்கு பதில் சொல்லுவார்கள். கம்பெனி பற்றித் தெரியவைப்பதும், மக்கள் மனங்களில் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்குவதும் குறிக்கோள்கள். அலிபாபாவின் ஐ.பி.ஓ – வுக்காக ஜாக் மா இந்த ஆயத்தங்களைச் செய்துவைத்திருந்தார். டாட்காம் குமிழி வெடிப்பால், ஐ.பி.ஓ. எப்போது என்றே தெரியாத நிலை. ஆகவே, இந்த ஆயத்தங்களை விளம்பர ஆயுதங்களாகப் பயன்படுத்த முடிவெடுத்தார்.

தொடங்கின அலிபாபாவின் ரோட்ஷோக்கள். அன்று சீன வியாபாரத்தில் பன்னாட்டுக் கார்ப்பரேட்கள் நுழைந்துகொண்டிருந்தார்கள். 2008 – ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்ததை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். வால்மார்ட் நம் நாட்டில் கடை திறக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. இந்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு,  ஆல் இந்தியா கிசான் சபா, அகில இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு,  மகாராஷ்டிர கன்ஸ்யூமர் கூட்டுறவு அமைப்பு, அகில இந்திய ட்ரேட் யூனியன் காங்கிரஸ்,  அப்னா பஸார், போன்ற இருபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள்  சேர்ந்து டெல்லியில் போராட்டம். ‘வால்மார்ட்டே திரும்பிப் போ’ என்னும் கோஷம். தில்லியின் தெரு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஹக்கிம் சிங் ராவத் சொன்னார்,  “வால்மார்ட் வந்தால், பல கோடி ஏழை மக்கள் தங்கள்  பிழைப்பை இழப்பார்கள்.” சென்னையில் வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையனும் தன் பயங்களை மேடை ஏற்றினார்.

2001 – இல் சீனாவில் இதே பயங்கள். இதனால், அலிபாபா ரோட்ஷோக்களின் விளம்பர முழக்கம், ‘‘ஈ காமேர்ஸை பிசினஸ்மேன்களுக்குத் திருப்பிக் கொடுங்கள்.” சிறிய, மத்திய தொழில்களுக்குப் பாதுகாப்புத் தரும் கேடயமாக அலிபாபா இருக்கும் என்னும் சமிக்ஞை உறுதிமொழி; அலிபாபா நம் நண்பன் என்ற எண்ணத்தை வியாபாரிகள் மனங்களில் உருவாக்கும் நம்பிக்கை முத்திரை.

இந்த ரோட்ஷோக்களுக்கு மக்களை ஈர்த்த காந்தம், ஜாக் மாதான். சொந்த முயற்சியால் முன்னுக்கு வருபவர், தன் காலில் நிற்பவர், நவீனத் தொழில்நுட்பத்தில் சீனாவுக்கு இடம் பிடித்துத் தருபவர், ஆன்லைன் உலகில் பல கோலியாத்களை எதிர்கொள்ளும் தாவீத் எனப் பல பிம்பங்கள். சாமானியச் சீனனுக்கு அவர் தன்மானச் சிங்கம். ஆகவே, ஜாக் மா போகுமிடமெல்லாம் கூட்டம் அலை மோதியது. இப்படிப்பட்ட ரசிகர் கூட்டத்துக்குத்தானே அவர் காத்திருந்தார்? வந்தோரைத் தன் பேச்சால் கட்டிப்போட்டார். வருங்

காலத்தில் வாங்குவதும், விற்பதும் முழுக்க முழுக்க ஆன்லைன் ஆகப்போகிறது, இந்த மாற்றம் சிறிய வியாபாரிகளுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அலிபாபா பிரம்மாண்டக் கனவுகள் கொண்ட நிறுவனம். ஆனால், கோடீஸ்வரர்களின் கம்பெனியல்ல. ஒவ்வொரு காசையும் வியர்வையின் விலையாகப் பெறும் பதினெட்டு சாமானியர்களின் கூட்டு உழைப்பு. ஆகவே, சிறு தொழில்களின் ஒவ்வொரு வலியும், வேதனையும் அலிபாபாவுக்குத் தெரியும். வியாபாரிகள் அலிபாபாவோடு சேர்ந்து, இரண்டு கைகள் நான்கானால், இருவருக்குமே உண்டு ஒளிமயமான எதிர்காலம் என்னும் நம்பிக்கை விதையை வியாபாரிகள் மனங்களில் ஆழமாக ஊன்றினார்.

ஜாக் மா பேசி முடித்தபின், அலிபாபாவின் உள்ளூர் விற்பனை அதிகாரிகள் தங்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொள்வது பற்றியும், விற்பனைச் செயல்பாடுகள் பற்றியும் விளக்குவார்கள். மீட்டிங் முடிந்தவுடன், ஒரு சாதாரண ஹோட்டலில் சாப்பாடு. ஏன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் இல்லை? அலிபாபா காசைக் கரியாக்காதவர்கள் என்று நிரூபிக்கத்தான். உண்மையும் அதுதான். வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கூட, அலிபாபாவோடு நெருக்கமாகிவிட்டோம் என்னும் உணர்வோடு பிரிந்து சென்றார்கள். ஜாக் மாவைப் பொறுத்தவரை, ரோட்ஷோ வெறும் மார்க்கெட்டிங் யுக்தியல்ல, சிறு தொழில்களைக்  கைதூக்கி உயர்த்தவேண்டும் என்னும் மனமார்ந்த ஆசையின் வெளிப்பாடு.

ரோட்ஷோ மூலமாக அலிபாபாவுக்கு ஒரு மாபெரும் அனுகூலம் கிடைத்தது.  தமிழ்நாட்டில் சில ஊர்கள் குறிப்பிட்ட தயாரிப்புப் பொருட்களுக்குத் தனிப்பெருமை கொண்டவை - பத்தமடைப் பாய், திருப்பூர் பனியன், நத்தம் ரெடிமேட் சட்டைகள், பவானி ஜமுக்காளம், கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்கள். இதேபோல் சீனாவிலும். காப்பி குடிக்கும் கப் வேண்டுமா? யாங்காங் (Yongkang)  நகரம் போகவேண்டும்.  அங்கே ஆண்டுக்கு 20 கோடி கோப்பைகள் தயாரிக்கிறார்கள்! சிகரெட் லைட்டர்கள் தேவையா? வருடத்துக்கு 70 கோடி லைட்டர்கள் தயாரிக்கும் க்வாங்டாங் ஜியோயே லைட்டர் உற்பத்திக் கம்பெனி (Guangdong Zhuoye Lighter Manufacturing Co)  க்வாங்டாங் நகரத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஊரின் தொழில்பலம் பற்றிய ஆழமான அறிவு, அமெரிக்காவிலிருந்து எந்தக் கொம்பன் வந்தாலும், அவர்களை எதிர்கொள்ளும் தனித்துவ பலம் ரோட்ஷோவால் மட்டுமே  அலிபாபாவுக்குக் கிடைத்த புதையல்.

ரோட்ஷோ மூலம் அலிபாபா ஒரு சமுதாயப் புரட்சியும் ஏற்படுத்தினார்கள். பீஜிங், ஃயூடான் (Fudan) ஆகியவை சீனாவின் முன்னணிப் பல்கலைக் கழகங்கள். இந்தப் பட்டதாரிகளின் திறமையைப் பயன்படுத்திக்கொள்ள ஜாக் மாவுக்கு ஆசை. ஆனால், “ஆசை இருக்குது தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்குது மாடு மேய்க்க” கதை. அவர்களுக்குச் சம்பளம் தரும் அளவுக்குக் காசு இல்லை. ஆகவே, ஜாக் மா பிரபலமில்லாத உள்ளூர்க் கல்லூரி மாணவர்களைப் பணியில் அமர்த்தினார்.  கல்லையும் கருவறைக் கடவுளாக்கும் மகா கலைஞர் அவர். இந்த இளைஞர்களுக்கு அற்புதப் பயிற்சி தந்தார். ஜொலிக்க வைத்தார். இவர்களின் பெற்றோர்கள் விவசாயிகள், தொழிலாளிகள் எனச் சமுதாயத்தின் அடிமட்டத்தவர்கள். இவர்களுக்கு ஜாக் மா நவீனத் தொழில்நுட்பத் துறையில் தந்த வாய்ப்பு, ஏழைகள் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு.

ஜாக் மா சிக்கனத்தின் அவசியம் பற்றி ஊழியர்களிடம் அடிக்கடி பேசுவார். ஒரு நாள். மனச்சாட்சி அவரிடம் கேட்டது, “இத்தனை பேசுகிறாயே? நீயும் உன் உயர்மட்ட அதிகாரிகளும் ஏதாவது தியாகம் செய்திருக்கிறீர்களா? ” ஜோ, ஜான் வூ,

க்வான் ஆகிய மூவரிடமும் பேசினார். அடுத்த நாள் ஜாக் மா அறிவித்தார், ‘‘இந்த மாதம் முதல் நான், ஜோ, ஜான் வூ, க்வான் ஆகிய நால்வரும் எங்கள் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்துக்கொள்கிறோம்.”

அலிபாபா இப்படிப் பலவிதமான புஷ்டி லேகியம் சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கொண்டிருக்கும்போது, பிறந்தது புது வருடம் 2001. அலிபாபாவுக்குச் சமாதி கட்டுவதாகச் சவால் விட்டுக்கொண்டு வருகிறான் ஒரு அமெரிக்க ஆன்லைன் ராட்சசன்.  அவன்.....

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x