தஞ்சாவூர் மாவட்டத்தில் இலக்கை விஞ்சி 1.95 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி!

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
Updated on
2 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு இலக்கை மிஞ்சி 1.95 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வழக்கம்போல குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

மேட்டூர் அணை திறந்ததும், குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இயந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தனர். மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்து தனியார் உரக் கடைகள் மற்றும் வேளாண்மைத் துறையின் கிடங்குகளில் வைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.

1,95,130 ஏக்கரில் நடவு: இந்நிலையில், வேளாண்மைத் துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 1,93,771 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தனர். இதைத் தொடர்ந்து, ஜூலை 31-ம் தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் இலக்கை மிஞ்சி 1,95,130 ஏக்கரில் நடவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு 1,52,646 ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 42,484 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்டாவின் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கடந்தாண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஆர்வம்: இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறியது: டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அவ்வப்போது மழையும் பெய்ததாலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். மேலும், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாலும், விவசாயிகளுக் கு ஊக்கம் அளித்தது. சாகுபடிக்கு தேவையான பயிர்க் கடனும் கூட்டுறவு சங்கத்தால் வழங்கப்படுவதால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக பரப்பளவில் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியது: டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்களை பற்றாக்குறை இல்லாமல் வெளியிலிருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்தோம்.

கடந்தாண்டு மேட்டூர் அணை காலதாமதாக திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடியும் காலதாமதமாக தொடங்கி யது. இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியதால், அதற்கான இலக்கை நிர்ணயித்து களப் பணியாற்றினோம். அதன்படி இந்தாண்டு இலக்கை தாண்டி சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in