நலிவடைந்து வரும் நீலகிரி தைலம் தயாரிப்பு தொழில் - காரணம் என்ன?

நலிவடைந்து வரும் நீலகிரி தைலம் தயாரிப்பு தொழில் - காரணம் என்ன?
Updated on
2 min read

நீலகிரி மாவட்டத்தில் கொடி கட்டி பறந்து வந்த தைலம் காய்ச்சும் தொழில் நலிவடைந்து வருவதால், அதை சார்ந்துள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் திரும்பும் போது வர்க்கி மற்றும் நீலகிரி தைலத்தை தங்கள் நினைவுகளோடு திரும்ப கொண்டு செல்கின்றனர். தலைவலியிலிருந்து நிவாரணம் பெற பயன்படுத்தும் நீலகிரி தைலம் என்று அழைக்கப்படும் யூகலிப்டஸ் தைலத்தின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் நீலகிரி தைலம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எங்கு நோக்கினும் சதுப்பு நிலங்களும், மலை காடுகளையொட்டிய பகுதிகளில் சோலைக் காடுகளுமே நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக இருந்தது.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் வரை நீலகிரி தனது சிறப்பு அம்சங்களை இழக்காத நிலையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்தால் உணவுக்காகவும், கால்நடைகளின் தேவைக்காகவும் சதுப்பு நிலங்களை அழிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் குறிப்பாக, நீலகிரியிலிருந்த சதுப்பு வாழ்க்கைக்கேற்ற தரத்திற்கு வரும் என்பதே அவர்களது நம்பிக்கையாக இருந்தது. இது நாளடைவில் நடைமுறை வாழ்க்கைக்கும் வந்தது.

இந்நிலையில், நீலகிரியில் நிலத்தடி நீரின் அளவு குறைவதற்கு இங்குள்ள யூகலிப்டஸ் மரங்களே காரணம் என சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை முழுமையாக அகற்றும் பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக கற்பூர தைலம் உற்பத்தியாளர் உண்ணி கூறும் போது, ‘நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம், மலைக் காய்கறி விவசாயம் போன்ற தொழில்களுக்கு இணையாக, சுற்றுலா மாவட்டம் என்ற பெயர் கிடைக்க காரணமாக உள்ள பல்வேறு அம்சங்களில் ஒன்றாக நீலகிரி தைலம் காய்ச்சும் தொழில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலரின் கருத்துகளுக்கு ஏற்ப மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதில்லை எனவும், இவை மண் சரிவை தடுப்பதற்கே பயன்படுவதாகவும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னரும் யூகலிப்டஸ் மரங்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை முழுமையாக அகற்றிய பின்னர் பல்வேறு இடங்களில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வந்தாலும் அவை தோல்வியையே கண்டுள்ளன. எனவே, நீலகிரியின் இயற்கை வளத்தின் நலன் கருதியும், இங்குள்ள மக்களின் ஜீவாதார நலன் கருதியும் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் யூகலிப்டஸ் மரக்கன்றுகளை மீண்டும் நடவு செய்ய வேண்டும்’ என்றார்.

கற்பூர மரங்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் நீலகிரி தைலம் சந்தையில் விற்பனைக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சீன தைலம் புழக்கம்: கற்பூர இலைகளை சேகரித்து தைலம் காய்ச்சுவோருக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வினியோகித்து வருகின்றனர். இதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர். நீலகிரி தைலம் லிட்டர் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. சீனா தைலம் மற்றும் கலப்படம் காரணமாக ஏற்கெனவே இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில் கற்பூர மரங்களை அகற்றினால் பல்லாயிரம் பேர் வேலை இழப்பார்கள் என கற்பூர தைலம் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in