Published : 28 Jul 2018 09:03 AM
Last Updated : 28 Jul 2018 09:03 AM

தொழில் ரகசியம்: சூறாவளியில் தகவல் திரட்டிய வால்மார்ட்

2014-ம் வருடம். அமெரிக்காவில் புளோரிடா  மாகாணத்தை ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி நான்கு புயல்கள் தாக்கின. நாம் தான் ஏதோ ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்பது போல் சூறாவளிக்கு பெயர் வைப்பவர்களாயிற்றே. நான்கு சூறாவளிகளுக்கு முறையே சார்லி, பிரான்செஸ், ஐவன், ஜீன் என்று நாமகரணம் சூட்டப்பட அவையும் பெயர் வைத்த குஷியில் புளோரிடாவை துவைத்து  காயப்போட்டு இஸ்திரி செய்து பீரோவில் மடித்து வைத்துவிட்டு  சென்றன!

முதல் சூறாவளி வந்து சென்ற ஒரு சில வாரங்களில் இரண்டாவது சூறாவளியான பிரான்செஸ் புளோரிடாவை நோக்கி நகர்ந்து வரும் செய்தி தெரிந்ததுதான் தாமதம். மக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டு கதவை இழுத்து மூடி வீட்டிற்குள் முடங்கினர். வரும் சூறாவளி மூடிய கதவைப் பார்த்து வீட்டில் யாரும் இல்லை போலிருக்கிறது என்று அடுத்த வீட்டுக்கு போய்விடுவது போல!

அதே சமயம் 1,222 மைல்கள் தள்ளி ஆர்கன்ஸா மாநிலத்தில் பெண்டன்வில் என்ற சிறிய ஊரிலுள்ள ஒரு பெரிய கம்பெனியின் மார்க்கெட்டிங் டீம் சுறுசுறுப்படைந்தது. தங்களுடைய புதிய மார்க்கெட்டிங் டெக்னிக்கை பயன்படுத்த சரியான சமயம் இது என்று முடிவு செய்தது. விற்பனை டேட்டாவை அலசி ஆராயும் அவர்கள் டெக்னிக்கின் பெயர் `முன்னறிவிக்கும் தொழில்நுட்பம்’ (Predictive Technology). அந்த கம்பெனியின் பெயர் `வால்மார்ட்’!

முதலில் தாக்கிய சார்லி சூறாவளியின் போது புளோரிடாவில் உள்ள வால்மார்ட் கடைகளில் எவை அதிகம் விற்றன என்ற டேட்டா பெறப்பட்டது. உங்களை கேட்டால்  என்ன சொல்வீர்கள்? என்ன பெரியதாக விற்றிருக்கும், குடை, ஹீட்டர், ரெயின்கோட், டார்ச்லைட் போன்ற சாமான்கள் அதிகம் விற்றிருக்கும் என்று தானே நினைப்பீர்கள். விற்பனை டேட்டாவை ஆய்வு செய்த போது ’ஸ்ட்ராபரி பாப்-டார்ட்ஸ்’ என்கிற ஒரு வித தின்பண்டம் வழக்கத்தை விட ஏழு மடங்கு அதிகம் விற்றது தெரிய வந்தது. அடுத்து அதிகமாக என்ன விற்றிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பீர்! இந்த இரண்டையும் உங்களால் யூகித்திருக்க முடியுமா?

நம் யூகங்கள் தவறாகலாம். ஆனால் டேட்டா பொய் சொல்லாது. சூறாவளி கடக்கும் வரை வீட்டில் தேமே என்று டீவி பார்த்துக்கொண்டு தான் உட்காரவேண்டும் என்று அம்மாக்கள் ஸ்ட்ராப்ரி பாப்-டார்ட்ஸ் வாங்கி அடுக்க, அப்பாக்கள் ஃப்ரிட்ஜ் முழுவதும் பீர் பாட்டிலை வாங்கி அடுக்கியிருந்தார்கள். டேட்டா மூலம் பெற்ற நுண்ணறிவின்படி புளோரிடாவிலுள்ள அனைத்து வால்மார்ட் கடைகளுக்கும் லாரி லாரியாக அந்த பொருட்கள் அதிகமாக அனுப்பி வைக்கப்பட சூறாவளியை மிஞ்சும் ஸ்பீடில் மக்கள் மீண்டும் அவைகளை வாங்கி தீர்த்தனர்!

பல கடைகள் தங்கள் விற்பனையை அலசி வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்துதான் மார்க்கெட்டிங் உத்திகளை வடிவமைக்கின்றனர். ஆனால் தகவல் சேகரிப்பில், டேட்டா பெறுவதில் வால்மார்ட்டை மிஞ்ச பூலோகத்தில் ஒரு கம்பெனி இல்லை. தங்கள் கடையில் விற்பனையாகும் பொருட்களின் விற்பனை அளவு முதல் வாடிக்கையாளர்களின் பழக்க வழக்கம் வரை வால்மார்ட் அறிந்துகொள்வது போல் வேறெந்த கம்பெனியும் அறிய முயல்வதில்லை. அப்படி அறிந்துகொள்ள தேவையான உள்கட்டமைப்பை அமைத்துக்கொள்வதும் இல்லை.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 3,600 வால்மார்ட் கடைகள். அங்கு வாரம் வந்து பொருள் வாங்குவோர் எண்ணிக்கை 100 மில்லியன். வருடத்திற்கு இல்லை சார், வாரம்தோறும் வருவோர் எண்ணிக்கையை சொல்கிறேன்! ஒரு மாதத்தில் ஏறக்குறைய மொத்த அமெரிக்காவும் வால்மார்ட்டிற்கு ஒரு முறை வந்து வாங்கிச் செல்கிறது. வருவோர் எண்ணிக்கை முதல் அவர்கள் வாங்கும் பொருட்கள், வாங்கும் அளவு முதலியன கலர் வாரியாக, சைஸ் வாரியாக டேட்டா பெறப்பட்டு கடை வாரியாக, ஊர் வாரியாக, மாநிலம் வாரியாக டேபுளேட் செய்யப்பட்டு ஆழமாக ஆய்வு செய்யப்படுகிறது. அமெரிக்க வாசிகளைப் பற்றி வால்மார்ட் அறிந்திருப்பது போல் அதன் அரசாங்கம், மீடியா கூட அறிந்து வைத்திருக்க மாட்டார்கள்!

வாடிக்கையாளர் டேட்டாதான் வால்மார்ட்டின் வேதவாக்கு. இன்று நேற்றல்ல, அவர்கள் ஆரம்பித்த நாள் முதல் டேட்டாவைத் தான் குலதெய்வமாக கும்பிட்டு வருகின்றனர். மற்ற கடைகள் எல்லாம் நினைத்துப் பார்பதற்கு முன்பே பார் கோட், இன்டர்நெட்டின் முன்னோடியான மின்னணு தகவல் பரிமாற்றம், டிரான்ஸ்மிட்டர்கள் என்று அதிநவீன தொழில்நுட்பம் வாங்குவதில் வால்மார்ட் ஒரு டிரென்ட்செட்டர். அந்தக் காலத்திலேயே அதற்கெல்லாம் அவர்கள் செலழித்த தொகை சுமார் நான்கு பில்லியன் டாலர்கள். இத்தனை ஏன், வால்மார்ட் பெண்டன்வில் தலைமையகத்தில் இருக்கும் டெரா டேட்டா மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களில் சேகரித்து வைத்திருக்கும் டேட்டாவின் அளவு 460 டெராபைட்ஸாம். இது எத்தனை இருக்கும் என்று தானே கேட்கிறீர்கள். இண்டர்னெட்டில் இருக்கும் டேட்டாவை விட இரண்டு மடங்கு!

மற்ற கடைகள் எல்லாம் ‘என்ன நடக்கப் போகிறது என்று காத்திருந்து செயல்படுவோம்’ என்று தொழில் செய்ய வால்மார்ட் மட்டுமே ‘என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே அனுமானித்து அதற்கு ரெடியாய் இருப்போம்’ என்று தன்னை தயார்படுத்திக்கொண்டு அதற்கேற்ப தொழில் செய்கிறது. செக் அவுட் ஏரியா ஸ்கேனர் மூலம் பெறப்படும் பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல் முதல் கையில் வைத்து இயக்கப்படும் வயர்லெஸ் கருவிகள் மூலம் பெறப்படும் இன்வென்ட்ரி டேட்டா வரை அனைத்து தகவல்களும் போர்க்கால அடிப்படையில் சேகரிக்கப்பட்டு போரடிக்காத வகையில் அலசப்பட்டு அவை அனைத்தும் காலகாலத்திற்கு பாதுகாக்கப்படுகிறது. கடையில் எந்த நேரத்தில் எத்தனை கேஷியர்கள் தேவைப்படும் என்பதைக் கூட துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறது வால்மார்ட்!

இத்தனை கட்டமைப்பை, கம்ப்யூட்டர்களை, சாஃப்ட்வேரை எங்கிருந்து எப்படி வாங்கினார்கள் வால்மார்ட்? அவர்கள் எங்கிருந்து வாங்கினார்கள், கட்டமைப்பின் பெரும்பகுதியை தங்கள் ஊழியர்களைக் கொண்டே வடிவமைத்து தாங்களே தயாரித்து நிர்மாணித்தார்கள். ஏன்? அப்பொழுது தானே தனக்கு அசுர பலம் தரும் தகவல் கட்டமைப்பின் ரகசியத்தை மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாக்க முடியும்! வால்மார்ட்டிற்கு கம்ப்யூட்டர் பகுதிகளை சப்ளை செய்த தயாரிப்பாளர்கள் முதல் கட்டமைப்பை நிர்மாணித்து நிர்வகிக்கும் ஊழியர்கள் வரை அது செயல்படும் விதங்களையும் ரகசியங்களையும் வெளியில் கூறமுடியாதபடி `வெளிப்படுத்தாமை ஒப்பந்தம்’ மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். தெரியாத்தனமாக தண்ணியடித்து எதையாவது யாராவது உளறிவிட்டால் மனிதர் தொலைந்தார். புளோரிடா புயலே தேவலை என்பது போல் சாத்து சாத்து என்று சாத்தப்படுவார்!

ஒவ்வொரு சிறிய தகவலும் வால்மார்ட்டிற்கு பொக்கிஷம் போல. பெறப்படும் தகவலின் அடிப்படையிலேயே ஒவ்வொரு சனிக்கிழமையும் சேல்ஸ் மீட்டிங்கில் நடத்தப்படுகிறது. அலசி ஆராயப்படும் தகவல் உலகெங்கும் உள்ள ஒவ்வொரு வால்மார்ட் கிளைக்கும் அனுப்பப்படுகிறது.

நவீன உலகமே டேட்டாவின் உதவியோடு இயங்குகிறது. டேட்டாவின் உதவியோடு முக்கிய முடிவெடுத்தால் மட்டுமே சரியான திசையில் பயணிக்க முடியும். கடைகள் முதல் கம்பெனிகள் வரை வாடிக்கையாளர்களை முழுவதுமாக புரிந்துகொண்டு அவர்கள் தேவைகளை, ஆசைகளை, பயங்களை அவர்கள் அறிந்துகொண்டதைவிட புரிந்துகொண்டால் மட்டுமே பிழைக்கவே முடியும். இதை முழுவதும் உணர்ந்து செழுமையாக செயல்படுத்துகிறது வால்மார்ட்.

`வால்மார்ட்டால் முடியும். நான் ஆஃப்டர் ஆல் வால் சைஸில் கடை வைத்திருப்பவன். வால்மார்ட் செய்வது போல் என்னை செய்ய சொல்கிறாயே. என் கடைக்கு தேவையா இதெல்லாம்’ என்று கேட்க தோன்றினால் உங்களுக்கு வால்மார்ட் பிறந்த கதையை சொல்வது அவசியமாகிறது. வால்மார்ட் ஆரம்பிக்கப்பட்டது பெண்டன்வில் அருகில் உள்ள ராஜர்ஸ் என்ற சின்ன ஊரில். அதன் ஜனத்தொகை 66,000 மட்டுமே. பிறந்த வருடம் 1962. அப்பொழுது என்ன ஜனத்தொகை இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ஆம்பூர், கோவில்பட்டி, நாகப்பட்டினம் போன்ற இடங்களை விட சிறிய ஊரில் கடை திறந்து, தகவல் சேகரிப்பில் புரட்சி செய்து, வாடிக்கையாளர்களை தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப பொருள் விற்று, படிப்படியாக முன்னேறி, கடல் கடந்து அசுர வளர்ச்சியடைந்து இன்று உலகின் நம்பர் ஒன் கம்பெனியாக திகழ்கிறது வால்மார்ட். நான் சிறிய ஊர், என்னுடையது சின்ன கடை, எனக்கெதற்கு டேட்டா ஆய்வு, என்னால் இதையெல்லாம் செய்யமுடியுமா, இப்படியெல்லாம் வளரமுடியுமா என்று இன்னமும் அசால்ட்டாய் இருந்தால் உங்களை அடித்துக்கொண்டு செல்ல அடுத்த சூறாவளி ஆறு கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்க மார்க்கெட் துறைமுகத்தில் எச்சரிக்கை எண் ஏழு ஏற்றப்பட்டுவிட்டது என்பதை உணர்க!

satheeshkrishnamurthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x