அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

உலகலாவிய திறன் மையமாக மாறிவரும் கோவை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on

கோவை: புதுமை, தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகளாவிய திறன் மையமாக கோவை மாறிவருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், ‘உலகளாவிய திறன் மைய வளர்ச்சிக்கான எல்லை - கோவை 2025’ என்ற தலைப்பில் கோவையில் கருத்தரங்கு நடந்தது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டு பேசும்போது, “உலகளவில் மொத்த பட்டதாரிகளில் 25 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

மிகச் சிறந்த திறமை கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதன் மூலம் கோவை போன்ற நகரத்தை பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தொழில் தொடங்க தேர்வு செய்வார்கள். நிகழ்காலம் மட்டுமின்றி எதிர்கால தேவை, வளர்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டு தொலைநோக்கு சிந்தனையுடன் தொழில்முனைவோர் தொடர்ந்து செயல்படுவது தனிச் சிறப்பு. புதுமை, தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகளாவிய திறன்மையமாக கோவை மாறிவருகிறது” என்றார்.

சிஐஐ தமிழ்நாடு முன்னாள் தலைவர் ஜெய்ராம் வரதராஜ் பேசும்போது, “சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் மோட்டார், பம்ப், அலுமினிய பொருட்கள், ஜவுளி உற்பத்தியை முதலில் தொடங்கிய பெருமை கோவையை சேரும். மானியம் போன்ற உதவிகள் அதிகம் பெறாமல் புதுமை, சவால்களை எதிர்கொள்ளும் திறமை ஆகியவற்றால் இந்த நகரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிறந்த தரம், விரைவான சேவை, திறமையான தொழிலாளர்கள் இந்நகர தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்” என்றார்.

சிஐஐ தென்னிந்திய முன்னாள் தலைவர் நந்தினி ரங்கசாமி பேசும்போது, “அரசு திட்டங்கள் வடிவமைத்து அமல்படுத்தப்படும்போதும் தொழில்துறையினர் அவற்றை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்வது அவசியம். கோவையின் தொழில் வளர்ச்சி குறித்து லண்டன் மேயர் பேசியுள்ளார். சர்வதேச அளவில் கோவையின் முக்கியத்துவம் எத்தகைய அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும்” என்றார்.

சிஐஐ கோவை மண்டல தலைவர் ராஜேஷ் துரைசாமி பேசும்போது, “கோவை மாவட்டத்தில் செயல்படும் 250-க்கும் மேற்பட்ட கல்வி குழுமங்களில் இருந்து ஆண்டுதோறும் 1 லட்சம் பட்டதாரிகள் வெளிவருகின்றனர். 3 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கொண்டு இந்தியாவில் 5-வது எம்எஸ்எம்இ மையமாக கோவை திகழ்கிறது. இவற்றை கருத்தில்கொண்டு எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களில் கோவைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமர் கிரியப்பனவர் பேசும்போது, “ஏற்கெனவே 25 உலகளாவிய திறன் மையங்கள் கோவைக்கு சமீபத்தில் இடம்பெயர்ந்துள்ளன. கோவை நகரம் சிறப்பான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. 2031-ம் ஆண்டில் 15 மில்லியன் பயணிகளை கையாளும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியில் மற்ற நகரங்களுக்கு வழிகாட்டியாக கோவை திகழும்” என்றார்.

சிஐஐ தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், உலகளாவிய திறன் மைய (ஜிசிசி) பிரிவின் ஒருங்கிணைப்பாளர் கெவின் ஜார்ஜ், ஜிசிசி பணிகள் பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் நவீத் நாராயண் உள்ளிட்ட பலர் பேசினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in