Published : 09 Aug 2014 10:00 AM
Last Updated : 09 Aug 2014 10:00 AM

உங்கள் முடிவே முடிவானதாக இருக்கட்டும்

இது கற்பனைக் கதை அல்ல. அமெரிக்கா டெக்ஸாஸ் மாநிலத்தில் கத்திரி வெயில் கொளுத்திய ஒரு கோடை நாளில் நடந்த உண்மைக் கதை. இதைவிட சுடச் சுட ஒரு கதை சொல்லமுடியாது. அத்தனை வெயில் அன்று!

டெக்ஸாஸில் வெயில் கொளுத்தும். சூடு சுண்ணாம்பாக்கும். அமெரிக்கர்கள் சொல்வார்கள்: ‘டெக்ஸாஸ், நரகம் இரண்டு இடங்களிலும் சொந்தமாக வீடு இருந்தால், நரகத்தில் குடியிரு. டெக்ஸாஸ் வீட்டை வாடகைக்கு விடு’!

அந்த டெக்ஸாஸில் ‘கோல்மென்’ என்னும் ஊரில் ‘ஜெர்ரி ஹார்வி’ வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் மாமனார், ‘பக்கத்திலுள்ள ‘அபிலின்’ ஊருக்கு போய் லஞ்ச் சாப்பிட்டு வரலாமே’ என்கிறார். ‘இந்த வெயிலிலா. காரில் ஏசி இல்லை. அபிலின் 53 மைல் வேறு,’ என்று ஜெரிக்கு கூற ஆசை தான். ஆனால் மாமனாருக்கு மறுபேச்சு பேசுவதா, அதுவும் மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டு. ஜெரி மனைவியும், ‘போலாமே’ என்கிறார்.

ஜெரிக்கு போக இஷ்டமில்லை. அதை சொல்ல பயம். ‘ஏன்டி, உங்கம்மா வருகிறாரா கேள்,’ என்கிறார். மாமியார் வரமாட்டார் என்கிற தைரியத்தில். பாழாய் போன மாமியாரோ, ‘அபிலின் போய் ரொம்ப நாளாச்சு, பேஷா போலாம்,’ என்று கூற உலகமெங்கும் மாப்பிள்ளைக்கு இவ்வளவு தான் மரியாதை என்று ஜெரி காரை எடுக்க குடும்பமே சப்ஜாடாக அபிலின் திருத்தல யாத்திரை செல்கிறது.

கத்தரி வெயில். ஏசி இல்லாத கார். புழுதிப் புயல் வேறு. இத்தனையும் மீறி அபிலின் போய் ஒரு தரித்திரம் பிடித்த ஹோட்டலில் அஜீரண மாத்திரைகள் எதற்கு என்று விளக்கும் சாப்பாட்டை தின்று மீண்டும் சூட்டில், புழுதியில், ஏசி இல்லாத காரில் யாரும் பேசாத ஒரு மயான மவுனப் பயணம் செய்து திரும்புகிறார்கள்.

வீட்டிற்குத் திரும்பியும் யாரும் பேசாதிருக்க, மாமியார் மட்டும் ‘வீட்டிலேயே இருந்து தொலைச்சிருக்கலாம். நாசமா போற வெயில்ல போகலன்னு எவன் அழுதான். நீங்க கூப்பிட்டீங்கன்னு வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும்,’ என்கிறார்.

‘எல்லாரும் கூப்பிட்டீங்க, என்னை ஏன் சொல்றீங்க,’ என்று ஜெரி கேட்க அவர் மனைவி ‘நீங்களும் என் அப்பாவும் தானே வெயில்ல சாகணும்னு திட்டம் போட்டீங்க, உங்க ரெண்டு பேர் புடுங்கலுக்காகத்தான் வந்து தொலைச்சேன்,’ என்கிறார்.

மாமனாரோ, ‘நான் சிவனேன்னு இருந்தேன். போர் அடிக்குதுன்னு சொன்னீங்களே, பொழுது போகட்டும்னு உங்க எழவுக்குத்தான் அபிலின் போலாம்னு சொன்னேன். நான் பேசாம வீட்ல டீவிய கட்டிண்டு அழுதிருப்பேன்,’ என்கிறார்.

தி அபிலின் பாரடாக்ஸ்

தனக்கு நேர்ந்த கதை பல நிர்வாகங்களில் நடந்து, தவறான முடிவுகள் எடுக்கப்பட்டு, ஒப்புதல் இல்லையென்றாலும் அவை தட்டிக் கேட்கப்படாமல் செயல்படுத்தப்பட்டு மொத்தமும் தவறாகப் போகும் போது ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு கம்பெனிகள் படுகுழியில் விழுகின்றன என்கிறார் ஜெரி ஹார்வி. 1988-ல் `ஆர்கனைசேஷனல் டைனமிக்ஸ்’ என்ற ஜர்னலில் ‘தி அபிலின் பாரடாக்ஸ்’ என்ற கட்டுரையில் இதன் தன்மைகளை, காரணங்களை, இதற்கான தீர்வுகளை ஜோராக விளக்குகிறார் ஜெரி.

பல சமயங்களில் நிர்வாகம் எதை வேண்டாம் என்று நினைக்கிறதோ அந்த காரியங்களைச் செய்து எதை நோக்கி பயணிக்க வேண்டுமோ அதற்கு நேர் எதிர் திசையில் சென்று திண்டாடுகிறது. இதைத்தான் ‘அபிலின் பாரடாக்ஸ்’ என்கிறார். பாரடாக்ஸ் என்பதற்கு முரண், அதாவது காண்ட்ரடிக்‌ஷன் என்று பொருள். ‘வரும்ம்ம்’ என்று இழுத்து `ஆனா வராது’ என்ற காமெடி சீன் டையலாக் மாதிரி!

தனிமை என்னும் அச்சம்

வீட்டிலும் நிர்வாகத்திலும் தவறென்று தெரிந்தும் மனதிற்கு ஒவ்வாததை மற்றவர் சொல்கிறார் என்பதற்காக செய்கிறோம். ஏனெனில் நமக்கு சேர்ந்திருப்பதில், உறவில், நட்பில் நாட்டம். ஒட்டி உறவாடுவதை விரும்புகிறோம். தனிமையை, வெறுமையை, பிரிந்திருப்பதை வெறுக்கிறோம். மனிதனுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய தண்டனை தனிமை. தப்பு செய்தவர்களை ஜெயிலில் போடுவதும், மனதிற்கு பிடித்தவர்கள் தவறு செய்யும் போது அவர்களோடு பேசாமல் இருப்பதும் இதற்குத் தான். இதற்கு `ஃபியர் ஆஃப் செபரேஷன்’ என்று பெயர்.

தொப்புள் கொடி அறுந்தது முதல் உறவில், நட்பில், காதலில், விவாகரத்தில், இறப்பில் ஏதோ ஒரு வகையில் தனிமையின் சுமையை, வலியை, கொடுமையை உணர்ந்திருக்கிறோம். தனிமையை நாம் விரும்புவதில்லை. அதனால் மனதிற்கு பிடிக்காத, ஒவ்வாத, ஒத்துவராத ஒன்றை நம்மோடு இருப்பவர் சொல்லி அதை செய்யவேண்டும் என்ற சூழ்நிலையில் அதைச் செய்யமுடியாது என்றால் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று அஞ்சுகிறோம்.

அதனால் பிடிக்காததைக் கூட செய்து தொலைக்கிறோம். வீட்டிலும் சரி, நிர்வாகத்திலும் சரி. அபிலின் பாரடாக்ஸ் அமைய இன்னொரு காரணம் உண்டு. கூட்டத்தோடு இருக்கும்போது ஒருவர் சொல்வதை பிடிக்கிறதோ இல்லையோ அவர் சொல்கிறார், செய்யவில்லையென்றால் அவர்களோடு நம்மை சேர்க்கமாட்டார்கள்’ என்ற பியர் ப்ரெஷரில் செய்கிறோம். இதை ‘க்ரூப் டிரனி அண்டு கன்ஃபர்மிடி’ என்பார்கள்

‘என் பையன் சமத்து, ஃப்ரெண்ட்ஸ்தான் இவன கெடுக்கறாங்க’ என்று அம்மாக்கள் சொல்வது க்ரூப் டிரனியால். `ஒருவன் செய்தால் குதிரை கிடைக்கும். அதையே ஒரு கமிட்டி செய்தால் ஒட்டகமாய் முடியும்’ என்று கம்பெனிகளில் நடக்கும் கூத்துக்கு காரணம் இதுவே. `ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு சின்ன பெக் போட்டேன், இல்ல என்னை அவங்க க்ரூப்ல சேர்த்துக்கமாட்டாங்க’ என்று குடிப்பவர் போல!

மனம் விட்டுபேசும் கலாச்சாரம் தேவை

அபிலின் போகும் வழிகள் இவையென்றால் அதை தொடாமல் நிர்வாகங்கள் செல்ல பைபாஸ் ரோடுகளும் உண்டு. ஒரு விஷயத்தை நிர்வாகம் சொல்லும் போது அதை ஒவ்வொருவரிடமும் தனியாக சொல்லாமல் அதை செயல்படுத்தப்போகிற க்ரூப்பை, டிபார்ட்மெண்டை அழைத்து ‘இப்படி செய்யலாம் என்றிருக்கிறோம். இது சரி என்று பட்டாலும் அனைவரையும் பாதிக்கும் விஷயமானதால் அனைவரின் கருத்தையும் அறிய விரும்புகிறோம். இது தவறாகிப் போனால் நமக்கும் ப்ராப்ளம், கம்பெனிக்கும் நஷ்டம். ஸோ ஃப்ரீயாக மனதில் பட்டதை சொல்லுங்கள். ஒத்த கருத்திற்கு வரும் வரை டிஸ்கஸ் செய்வோம்’ என்று கூறுங்கள் என்கிறார் ஜெரி.

இதற்கு முதல் காரியமாக நிர்வாகம் வேலை செய்பவர்களை மனம் விட்டு பேசும் கலாச்சாரத்தை கம்பெனியில் உருவாக்க வேண்டும். இதை அனுதினமும் வளர்க்க ஆவன செய்யவேண்டும். வேலை செய்பவர்களும் தங்கள் திறமை, திறன் மீது நம்பிக்கையுடன் மனதிடத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். `என் மேலதிகாரி சொன்னார், அதனால் செய்தேன்’, `டீம் மெம்பர் சொன்னாரென்று போனேன்’ என்றில்லாமல் கம்பெனிக்கு இது சரிப்படுமா என்று சிந்தித்து சொல்லப்படும் கருத்தை சீர்தூக்கி சரிபார்க்க வேண்டும்.

யாரோ சொன்னாரென்று எதையாவது செய்து தப்பாகிப் போனால் எந்த நிர்வாகமும் உங்கள் மீது பரிதாபப்பட்டு ‘செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா’ என்று பாடமாட்டார்கள். `வீட்டிற்கு போவாயடா’ என்று சீட்டை கிழித்து வேண்டுமானால் அனுப்புவார்கள்.

போகாத ஊருக்கு வழி சொல்லி அங்கு போய் அவஸ்தைப்படுவதை தடுப்பது நிர்வாகத்தின் பொறுப்பு. அதேபோல் போகக்கூடாத அபிலினுக்கு கிளம்பினால் அதை தடுத்து நிறுத்தும் திறனை கம்பெனியில் வளர்ப்பதும் நிர்வாகத்தின் பொறுப்புதான்.

அபிலின் அபாயத்தை அவாய்ட் செய்ய அபயம் தேடுபவர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கும் ஜெரியின் வார்த்தைகள் வரிக்கு வரி சரிதானே!

satheeshkrishnamurthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x