Published : 03 Jul 2025 01:56 PM
Last Updated : 03 Jul 2025 01:56 PM
மும்பை: மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்ததாக 1 கோடி பங்குச் சந்தை முதலீட்டாளர்களைக் கடந்த மூன்றாவது இந்திய மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளதாக தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பங்குச் சந்தைகளில் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பங்குச் சந்தைகளில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் 1 கோடியைத் தாண்டிய மூன்றாவது இந்திய மாநிலமாக குஜராத் மாறியுள்ளது என்று தேசிய பங்குச் சந்தை (NSE) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
"ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்துக்கு அடுத்ததாக 1 கோடி முதலீட்டாளர்களைக் கடந்த மூன்றாவது மாநிலமாக குஜராத் மாறியுள்ளது" என்று என்எஸ்இ தெரிவித்துள்ளது.இந்த மூன்று மாநிலங்களும் சேர்ந்து, நாட்டின் மொத்த முதலீட்டாளர்களில் 36 சதவீதத்தைக் கொண்டுள்ளன. மே 2025 நிலவரப்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கை 11.5 கோடியை நெருங்கிவிட்டதாக என்எஸ்இ தெரிவித்துள்ளது.
பிராந்திய வாரியாக, வட இந்தியா 4.2 கோடி பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து மேற்கு இந்தியா 3.5 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், 2.4 கோடி முதலீட்டாளர்களுடன் தென்னிந்தியா 3-வது இடத்திலும், 1.4 கோடி முதலீட்டாளர்களுடன் கிழக்கு இந்தியா 4வது இடத்திலும் உள்ளன.
கடந்த 12 மாதங்களில் வட மாநிலங்களின் வளர்ச்சி 24% மும், கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி 23% மும், தென் மாநிலங்களின் வளர்ச்சி 22% மும் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மேற்கு இந்தியாவின் வளர்ச்சி 17% ஆக உள்ளது.
பிப்ரவரி 2024-ல் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 கோடியாக இருந்தது. அதன்பிறகு, ஒவ்வொரு ஐந்து முதல் ஆறு மாதங்களில் ஒரு கோடி முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இணைந்தனர். இதன் காரணமாக, ஆகஸ்ட் 2024-ல் 10 கோடியையும், ஜனவரி 2025-ல் 11 கோடியையும் எட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT