Published : 02 Jul 2025 11:56 PM
Last Updated : 02 Jul 2025 11:56 PM
ரெட்மாண்ட்: உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த அறிவிப்பை ஊழியர்களுக்கு தற்போது தெரிவித்து வருகிறது அந்நிறுவனம்.
மென்பொருள் கட்டமைப்பு, கம்ப்யூட்டர் ஹார்டுவேர், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், சோஷியல் நெட்வொர்க்கிங் சேவை, கிளவுட் கம்யூட்டிங், வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் என பல்வேறு சேவைகளை உலகம் முழுவதும் வழங்கி வருகிறது மைக்ரோசாப்ட். இந்நிறுவனத்தின் விண்டோஸ், மைக்ரோசாப்ட் 365 பிராண்டுகள் உலக முழுவதும் மிக பிரபலம். கணினியை இயக்குவதற்கான இயங்குதளமாக விண்டோஸ் உள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை இப்போது கையில் எடுத்துள்ளது மைக்ரோசாப்ட். உலக அளவில் பணியில் உள்ள மொத்த ஊழியர்களில் சுமார் 4 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
அண்மைய தகவலின்படி சுமார் 2.20+ லட்சம் ஊழியர்கள் முழுநேரமாக அந்நிறுவனத்தில் பணியில் உள்ளனர். அவர்களில் 4 சதவீதம் என்றால் சுமார் 9,000 ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையால் வேலை இழப்புக்கு ஆளாகி உள்ளனர். கடந்த மே மாதம் சுமார் 6,000 ஊழியர்கள் மைக்ரோசாப்ட் பணிநீக்கம் செய்திருந்தது.
மாறிவரும் சந்தை நிலவரம் மற்றும் அதற்கு ஏற்ற வகையில் நிறுவன மாற்றத்தை மேற்கொள்ள வேண்டி இருப்பதாக மைக்ரோசாப்ட் தரப்பில் இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஏஐ சார்ந்து அந்நிறுவனத்தின் செலவினமும் இதற்கு காரணம் என தகவல் கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT