

கோவை: தமிழகத்தில் வீட்டில் தயாரித்த (ஹோம் மேட்) மற்றும் இயற்கையாக (நேச்சுரல்) தயாரிக்கப்பட்டது என்ற பெயரில் முககிரீம், சோப்பு, உதட்டு சாயம், கண் மை, பவுடர், தலைமுடிக்கான பிரத்யேக எண்ணெய் என பலரும் வீட்டிலேயே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இயற்கையான அழகு சாதன பொருட்கள் என விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெறாமல் இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (பிஐஎஸ்) மற்றும் அழகுசாதன பொருள் உற்பத்தி நடைமுறை (ஜிஎம்பி) எதுவும் பின்பற்றாமல் பலரும் வீடுகளில் இருந்தே அழகு சாதன பொருட்களை தயாரித்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்வதைக் கண்காணிப்பது இப்போது மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.
இதுகுறித்து, கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் மாரிமுத்து கூறியதாவது: தமிழகத்தில் 340 அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு மையங்கள் உள்ளன. கோவை மண்டலத்தில் கோவையில் 29, திருப்பூரில் 6, நீலகிரியில் 2 என அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு மையங்கள் உள்ளன. வீடுகளில் உரிய உரிமம் பெறாமல் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பது மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாகும்.
தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டு துறை இயக்குநர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், வீடுகளில் அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப் படுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்று அழகு சாதன பொருட்களை தயாரிக்க வேண்டும். பிஐஎஸ், ஜிஎம்பி போன்ற தர, அங்கீகார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
குடியிருக்கும் வீடுகளில் ஒரு பகுதியாக சோப்பு, முக பவுடர், உதட்டு சாயம் ஆகிய அழகு சாதன பொருட்களை தயாரிப்பது கூடாது. இதற்கென வீடுகளில் தனி இடம் வேண்டும். அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு தேதி, சேர்க்கப்பட்ட பொருட்களின் விவரம், முழு முகவரி, உரிமம் பற்றிய தகவல் ஆகியவை இடம்பெற வேண்டும்.
வீடுகளில் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்பவர்களை அழைத்து உரிமம் பெற்று நடத்த அறிவுறுத்தி வருகிறோம். இதனால் சமூக வலைதளங்களில் தங்களது அழகு சாதன பொருட்கள் குறித்த தகவலை நீக்கி விடுகின்றனர்.
வீடுகளில் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்வோர் இனி உரிமம் பெற்று நடத்த வேண்டும். இல்லையெனில் அழகு சாதன பொருட்கள் பறிமுதல் செய்து வழக்கு தொடரப்படும். எனவே, வீடுகளில் அழகு சாதன பொருட்களை தயாரிப்போர் https://www.drugscontrol.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தகவல்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கப்படும். உரிமம் வழங்கிய பிறகு மாவட்டம் தோறும் உள்ள மருந்து கட்டுப்பாட்டு துறையின் ஆய்வாளர்கள் மூலம் கண் காணிப்பு மேற்கொள்ளப்படும். கோவையில் உரிமம் பெறாமல் வீடுகளில் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் மையங்களில் ஆய்வு நடத்தி வழக்கு தொடரும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.