நிலையான வளர்ச்சி இலக்கு நாடுகள் தரவரிசை: 99-வது இடம் பிடித்தது இந்தியா; முதல் இடத்தில் பின்லாந்து
நிலையான வளர்ச்சி இலக்கு தரவரிசை கொண்டு நாடுகள் பட்டியல்லி (எஸ்டிஜி) முதல்முறையாக 100 இடங்களுக்குள் இந்தியா வந்துள்ளது.
ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டு தீர்வு நெட்வொர்க் அமைப்பு அண்மையில் 10-வது எஸ்டிஜி தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இந்த வரிசையில் 2025-ம் ஆண்டில் இந்தியா 99-வது இடத்தைப் பெற்றுள்ளது. 193 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா முதன்முறையாக 100 இடங்களுக்குள் வந்துள்ளது.
இந்த வரிசையில் அண்டை நாடுகளான சீனா 49-வது இடத்தையும், பூடான் 74-வது இடத்தையும், நேபாளம் 85-வது இடத்தையும், வங்கதேசம் 114-வது இடத்தையும், பாகிஸ்தான் 140-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் மாலத்தீவுகள் 53-வது இடத்தையும், இலங்கை 93-வது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் வழக்கம்போல் ஐரோப்பிய நாடுகளே முதலிடத்தில் உள்ளன. முதலிடத்தில் பின்லாந்தும், 2-வது இடத்தில் ஸ்வீடனும், 3-வது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன. முதல் 20 இடங்களில் 19 இடங்களை ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன.
2015-ம் ஆண்டு முதல் கணக்கிடும்போது இந்த தரவரிசையில் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளான நேபாளம், கம்போடியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், மங்கோலியா ஆகிய நாடுகள் அதிவேக வளர்ச்சியைப் பெற்றுளளன.
இதேபோல் பெனின், பெரு, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், கோஸ்டா ரிகா, சவுதி அரேபிய நாடுகளும், அதீத வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டு தீர்வு நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
