பி.எஃப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

பி.எஃப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

Published on

வருங்கால வைப்பு நிதியில் (இபிஎப்ஓ) தானாக முன்வந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: கல்வி, மருத்துவம், திருமணம் மற்றும் வீடு கட்டுவதற்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து தானாக பணம் எடுக்கும் (ஆட்டோ-கிளைம்) உச்ச வரம்பு முன்பு ரூ.1 லட்சமாக இருந்தது. இனி அது தற்போது ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் இனி எந்த தலையீடும் இன்றி எளிதாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். பழைய செயல்முறையைப் போலவே ஆட்டோ கிளைம் மூலம் இதற்கும் மூன்று நாட்களில் தீர்வு காணப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு வேகமான, மிகவும் செயல்திறன் வாய்ந்த சேவைகளை தானியங்கி முறையில் தரவேண்டும் என்பதில் இபிஎப்ஓவுக்கு உள்ள அக்கறையை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இவ்வாறு மாண்டவியா தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டான 2025-26-ன் முதல் இரண்டரை மாதங்களில் இபிஎப்ஓ ​76.52 லட்சம் ஆட்டோ-கிளைம் கோரிக்கைகளை தீர்த்து வைத்துள்ளது, இது இதுவரை தீர்க்கப்பட்ட அனைத்து முன்பண கோரிக்கைகளிலும் 70 சதவீதமாகும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in